Skip to main content

அதள பாதாளத்துக்கு சென்ற அதிமுக வாக்கு வங்கி... 

Published on 11/08/2019 | Edited on 11/08/2019

 

கடந்த ஆகஸ்ட் 5ஆம் நடந்த வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்காக அந்த தொகுதியில் அரியலூர் மாவட்ட திமுக சார்பில் பணியாற்றியவர் செந்துறை ஒன்றிய திமுக செயலாளர் மு. ஞானமூர்த்தி. ஆகஸ்ட் 9ஆம் தேதி தேர்தல் முடிவுக்கு பின்னர் நம்மிடம் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
 

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் அரியலூர் மாவட்ட திமுக சார்பில் 10 நாட்களுக்கு மேல் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தோம். 
 

அங்கே அனைத்து சமுதாய மக்களின் பேராதரவு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு இருந்தது. 
 

உழைப்பையே நம்பி இருக்கும் அணைக்கட்டு தொகுதி மக்கள் ஆளும் கட்சியினரின் புதியப்புதிய அறிவிப்பு, பணபலத்திற்கு (ஓட்டுக்கு ரூபாய் 800 முதல் 1000 வரை வழங்கினார்கள்) கிராமப் புறங்களில் திசை மாறி அதிமுகவிற்கு ஓட்டளித்துள்ளனர். 

 

vellore parliamentary


அதிகாரத்தாலும், சாதிய பிரச்சாரத்தாலும் ஓட்டுகளை பெற முயன்ற ஆளும் கட்சிக்கு அவர்கள் எதிர்பார்த்த ஓட்டுகள் கிடைக்கவில்லை என்பதே உண்மை. 
 

அணைக்கட்டுத் தொகுதியில் வன்னியர் சமுதாயமும், முதலியார் சமுதாயமும் கூடுதலாக இருந்தாலும் அவர்களின் வாக்குகள் கணிசமாக திமுகவிற்க்கு விழுந்துள்ளது. இந்த இரண்டு சமுதாய வாக்குகள் முழுமையாக அதிமுகவிற்கு கிடைத்திருந்தால் சுமார் 30,000 வாக்குகளுக்குமேல் வித்தியாசம் வந்திருக்கும். ஆனால் 9539வாக்குகள் மட்டுமே வித்தியாசம். 
 

வேலூர் மக்களவை தேர்தலில் கடந்த தேர்தலை விட 2 மடங்குக்கு மேல் வாக்குகளை பெற்று திமுக சாதனை படைத்துள்ளது. அதேநேரத்தில் அதிமுக, பாஜக, பாமக கூட்டணி பாதிக்கும் குறைவாக வாக்குகளை பெற்று கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 
 

வேலூர் தொகுதியில் திமுகவின் வெற்றி சாதாரணமானது கிடையாது. கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்ட அதிமுகவும், பிஜேபி சார்பாக நின்ற ஏ.சி.சண்முகமும் சேர்ந்து வாங்கிய ஓட்டுகள் 7 லட்சம் (72.64%). மூன்றாம் இடம் பெற்ற திமுக 2 லட்சம் (21%) ஓட்டுக்களை மட்டுமே பெற்றது.


இப்போது 2019 தேர்தலிலோ, அதிமுக பிஜேபி கூட்டணியின் ஓட்டு சதவீதம் 72.64% லில் இருந்து 46.5% சதமாக குறைந்து, திமுக வாங்கிய ஓட்டு, 21% சதத்திலிருந்து 47.3% சதமாக உயர்ந்து, அதுவும் மாநிலத்திலும், மத்தியிலும் எதிர் கட்சியாக இருந்து இவ்வளவு ஓட்டுக்களை பெற்று வென்றுள்ளது.
 

திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளை பெற்றார். அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகள் பெற்றார். 8141 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். 
 

இந்த தேர்தலில் திமுக பெற்றுள்ள வாக்குகள் கடந்த தேர்தலை விட 2 மடங்கு அதிகரித்துள்ளது. 
 

அதாவது வேலூர் மக்களவை தொகுதிக்கு கடந்த 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக அணியில் இடம் பெற்றிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட்டது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட அப்துல் ரஹ்மான் 2,05,896 வாக்குகளை பெற்றார். ஆனால் தற்போது வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4 லட்சத்து 85 ஆயிரத்து 340 வாக்குகள் பெற்றுள்ளார். 
 

கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் விஜய இளஞ்செழியன் 21,650 வாக்குகளை பெற்றார். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. இந்த இரு கட்சிகளும் சேர்ந்து கடந்த தேர்தலில், 2,27,546 வாக்குகளை பெற்றிருந்தன. 
 

அதே நேரத்தில் கடந்த 2014ம் ஆண்டு வேலூர் மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. அந்த தொகுதியில் போட்டியிட்ட பா.செங்குட்டுவன் 3,83,719 வாக்குகளை பெற்றார். பாஜக, பாமக, தேமுதிக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் 3,24,326 வாக்குகளை பெற்றார். 

 

mganamoorthy


 

தற்போது அதிமுக அணியில், கடந்த முறை 3வது அணியாக போட்டியிட்ட அத்தனை கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தக் கூட்டணி சார்பில், புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் இந்த தேர்தலில் போட்டியிட்டார். கடந்த தேர்தலில் இந்த இரண்டு கூட்டணி கட்சிகளும் சேர்ந்து 7,08,045 வாக்குகளை பெற்றது.
 

ஆனால் தற்போது நடைபெற்ற வேலூர் மக்களவை தேர்தலில் திமுக 4,85,340 வாக்குகளை பெற்றுள்ளது. அதாவது திமுக கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் 2,57,794 வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளது. சுமார் 2 மடங்கு அளவுக்கு திமுகவின் வாக்கு வங்கி கூடியுள்ளது. 
 

மாநிலத்தில் அதிமுக ஆளும் கட்சி, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு என்ற பெரும் அதிகார செல்வாக்கு, பணபலம் ஆகியவை இருந்தபோதிலும் அதிமுகவுக்கு இந்த அளவுதான் வாக்குகளை பெற முடிந்துள்ளது. இதன் மூலம் அதிமுகவின் வாக்கு வங்கி அதள பாதாளத்துக்கு சென்றுள்ளது.