Skip to main content

உலகின் புகழ்பெற்ற புகைப்படத்தின் கதை !!!

Published on 14/06/2018 | Edited on 14/06/2018

சே - பிறந்த தினம் இன்று 

 

che


சென்னை இளைஞர்களின் டீ-ஷர்ட்களிலும், பைக் வைசர்கள், சாவிக்கொத்துகளிலும், ஃபேஸ்புக் புகைப்படங்களிலும்,  கடிகாரங்கள்,  ஏன், காலணிகளிலும்  கூட இருக்கும் இந்தப் படம் உலகப் புகழ் பெற்றது. சென்னை மட்டுமல்ல, ஜியோ  நெட்வொர்க் சரியாகக்  கிடைக்காத குக்கிராமங்களிலும் இவரைப் பார்க்கலாம்.  இவர் யாரென்றே தெரியாதவர்களுக்கும் கூட,  தீர்க்கமும் கோபமும் உறைந்த இந்தப் புகைப்படமும், 'சே' என்னும் சொல்லும், இன்று வரை புரட்சியின் அடையாளமாக இருக்கிறது. இந்தப் படத்திற்கும் படம்  போட்ட பொருள்களுக்கும்  உலக இளைஞர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பினால்,   உலகின் மிகப்பெரிய வணிக அடையாளமாக ஆக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் புகழ் பெற்ற கலைகளுக்கான கல்லூரியான மேரிலாண்ட் கல்லூரி, இந்தப் படத்தை உலகின் மிகப் புகழ் பெற்ற புகைப்படமாக அறிவித்துள்ளது. லண்டனில் உள்ள, விக்டோரியா-ஆல்பர்ட் அருங்காட்சியகம், 'இந்தப் படம் அளவுக்கு உலகில் வேறு எந்தப் படமும்,  பல வடிவங்களில் மிக அதிகமாக மருவுருவாக்கம் செய்யப்படவில்லை"  என்று கூறியுள்ளது. 
 

இத்தகைய புகழ் பெற்ற இந்தப் புகைப்படத்தை எடுத்தவர், ஆல்பர்டோ கோர்டா என்ற பத்திரிகை புகைப்படக்கலைஞர். 1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் தேதி, கியூபாவின் தலைநகரான ஹவானாவில் நடந்த ஒரு நினைவஞ்சலி நிகழ்வின் போது இது எடுக்கப்பட்டது. இந்தப் புகைப்படத்தின் முதல் பிரதியில் சேகுவேராவுக்கு அருகில் ஒரு மரத்தின் பகுதியும், இன்னொரு பக்கம் வேறொருவரும் இருந்தனர். "சேவின் கண்களில் நான் கண்ட சலனமற்ற தன்மையும், கோபமும், சோகமும் ஒருங்கே இருந்த முகமும் என்னை ஆச்சரியப்படுத்தின", என்று கூறிய  ஆல்பர்டோ, அந்தப் புகைப்படத்தில் சே மட்டும் தனியே இருக்கும் வண்ணம் வடிவமைத்துக் கொடுத்தார். பின்னர், 1963 ஆம் ஆண்டு, அயர்லாந்தைச் சேர்ந்த ஜிம் ஃபிட்ஸ்பாட்ரிக் என்ற மாணவர், சேகுவேராவைச் சந்தித்து, பழகி அவர் மீது மிகுந்த மதிப்பு உருவாகி, இந்தப் புகைப்படத்தை மேலும் மெருகூட்டி வடிவமைத்தார். அந்த வடிவம் மெல்லப் புகழ் பெற்றது. இணையம் உலகத்தை இணைத்த பின், கட்டுக்கடங்காத சுதந்திரத்தையும், எந்த அடக்குமுறையையும் எதிர்க்கும் தைரியத்தையும் வெளிப்படுத்தும் அந்தப் புகைப்படம் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானது. சே, எதிர்த்த அமெரிக்காவிலும் கூட அவரது படம் போட்ட பொருட்களின் விற்பனை அதிகம் தான்.
 

che


சேகுவேராவைப் பற்றிய மேலும் சில தகவல்கள்...
 

'சே' ஒரு மருத்துவர். தொழுநோய்க்கான சிகிச்சையில் மிகுந்த ஆர்வமும் அறிவும் கொண்டவர்.
 

அயர்லாந்தைப் பூர்விகமாகக் கொண்ட தந்தைக்கு  அர்ஜென்டினாவில் பிறந்த எர்னஸ்டோ குவேரா, கியூபா மக்களால் நேசிக்கப்பட்டு, பின் உலகப் புகழ் பெற்றிருக்கிறார்.    
 

1950ஆம் ஆண்டு, ஒரு சைக்கிளில் தனியாக சுமார் 4500 கிமீ வடக்கு அர்ஜென்டினா முழுவதும் சுற்றினார். பின்னர், 1951இல் தன் நண்பர் அல்பர்டோ க்ரேனடோவுடன் இணைந்து இவர் சென்ற 8000 கிமீ  மோட்டார் சைக்கிள் பயணம் புகழ்பெற்றது. 'சே' வின் புரட்சி வாழ்வுக்கு அடித்தளமாக அமைந்த இந்தப் பயணம்,   'மோட்டார் சைக்கிள் டைரிஸ்' என்ற புத்தகமாகவும், பின்னர் திரைப்படமாகவும் வந்தது.   
 

che fidel


சே - ஃபிடல் இருவருக்குமான நட்பும் உலகப்புகழ் பெற்றது. இவர்கள் இருவரும் முதலில் சந்தித்தது 1955இல். முதல் சந்திப்பிலேயே தொடர்ந்து பத்து மணிநேரம் புரட்சி குறித்து உரையாடினர். அடுத்த வருடம் 'மெக்சிகோ'வில் இவர்கள் இருவரும் சிறைவைக்கப்பட்டனர். ஃபிடலை மட்டும் முதலில் விடுவித்தபோது, 'சே இல்லாமல் நான் போக மாட்டேன்' என்று காத்திருந்து சேகுவாரவுடன் தான் விடுதலையானார் ஃபிடல்.         
 

படிஸ்டா அரசை வீழ்த்தி, க்யூபப் புரட்சி பெற்ற வெற்றிக்குப் பின் சில காலம் கியூபாவில் அமைச்சராகப் பணியாற்றினார் சே. அப்பொழுது, கல்வியில் மிகுந்த அக்கறை காட்டினார். 60 சதவிகிதமாக இருந்த கியூபாவின் கல்வி விகிதம், 'சே'வின் காலத்தில்  96  சதவிகிதமாக  உயர்ந்தது.
 

இறுதிக்காலத்தில், சே-ஃபிடல் நட்பில் விரிசல் உருவானது. ரஷ்யாவுடனான உறவு விஷயத்தில் இருவருக்கும் மாற்றுக்கருத்துக்கள் இருந்தன. இதனால், சேகுவேராவை ஃபிடல் கேஸ்ட்ரோ ஒதுக்கினார் என்றும் கூறப்படுகிறது. கியூபாவின் தலைவனாகத் தான் மட்டுமே அறியப்படவேண்டுமென ஃபிடல் விரும்பியதாகவும் கூறப்பட்டது.
 

போராடிப் பெற்ற கியூப வெற்றியில் சொகுசாக நிற்காமல், காங்கோ, பொலிவியா மக்களின் புரட்சியை வழிநடத்தச் சென்றார் சே. ஆனால், அவை வெற்றி பெறவில்லை.
 

che family

 

சேகுவேராவின் முதல் மனைவி கில்டா. இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. ஆனால், காதல் வாழ்க்கை நீடிக்கவில்லை. இரண்டாம் மனைவி அலீடா மார்ச்சுடன் வாழ்ந்த காதல் வாழ்வில் நான்கு பிள்ளைகள் பெற்றார்கள்.
 

பொலிவியாவின் காடுகளில், அமெரிக்காவின் உதவியுடன் செயல்பட்ட பொலிவிய ராணுவம், 1967 ஆம் ஆண்டு அக்டோபர் 8  அன்று இவரைப் பிடித்தது. அடுத்த நாளான அக்டோபர் 9 அன்று கொல்லப்பட்டார் சே. கொல்லப்பட்ட போதும் கண்கள் மூடாத நிலையில் இருக்கும் இவரது புகைப்படம் அடக்கப்படும்  ஒவ்வொரு தேசத்தின் இளைஞர்களையும் போராட அழைப்பதாய் இருக்கும். இவர் கொல்லப்பட்ட பின், இவரது கைகள் வெட்டப்பட்டு, கைரேகைச் சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் உறுதி செய்யப்பட்டது. இந்தக் கதை நமக்கு நெருக்கமாகத் தோன்றுகிறதல்லவா?
 

கொல்லப்பட்ட பின், இவரது உடலைத் தர மறுத்து, புதைத்த இடத்தையும் ரகசியமாக வைத்திருந்தது பொலிவியா. முப்பது ஆண்டுகள் கடந்து, 1997இல் அவரது மிச்சங்களைக் கொண்டு சென்று, நினைவிடத்தில் வைத்தது கியூபா.
 

இத்தகைய வாழ்வு வாழ்ந்த சேகுவேராவை வெறுப்பவர்களும் இருக்கிறார்கள். அவர், தேவையே இல்லாமல், பல உயிர்களைக்  கொன்றார் என்றும் ஒரு பேச்சு உண்டு. ஆனால், அவர் ஒரு போதும், மக்களை சந்தையாக மாற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தை விரும்பியதில்லை. இன்று, அவரது படமே ஒரு மிகப்பெரிய நுகர்பொருளாக மாற்றப்பட்டு, கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யப்படுவது, மிகப்பெரிய முரண். என்றாலும்,  அம்பேத்கர், காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் எல்லாரும் நமக்கு மத்தியில் படும் பாட்டில், இது நமக்குப் பெரிய விஷயமல்ல...

Next Story

அமெரிக்காவில் தமிழக மாணவி அதிரடி கைது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Tamil Nadu student arrested in America

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், உலகில் உள்ள பல்வேறு மாணவர்கள் அமைப்பினர், பொது மக்கள் பலரும் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள், காசா போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேலுக்கான ஆயுதங்களை அமெரிக்கா ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும், போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளைத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகங்களில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதாக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று (25-04-24) காலை பல்கலைக்கழக வளாகத்தில், காசா போரை நிறுத்த வேண்டும் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக விதிகளை மீறி இந்தப் போராட்டம், நடத்தப்பட்டதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹசன் சையத் மற்றும் மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் உள்ளிட்ட ஏராளமான மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதில், அச்சிந்தியா சிவலிங்கம், கோவை மாவட்டத்தில் பிறந்து அமெரிக்காவில் படிக்கும் மாணவி ஆவர். இந்தக் கைது நடவடிக்கைக்கு அங்குள்ள மாணவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போராட்டங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை; அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
US Action Announcement on Sanctions on Indian companies

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில், தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

US Action Announcement on Sanctions on Indian companies

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்தது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாகக் கூறி இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் கருவூலத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, ‘போருக்கு ஈரான் நாட்டின் யுஏவிக்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களை ரகசியமாக விற்பனை செய்வதற்கும், நிதியுதவி செய்வதற்கும் இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆதலால், இந்த நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது’ எனத் தெரிவித்தது.