
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து 2000 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் விழா நடைபெற்று வருகிறது.
இதில் கலந்து கொண்ட தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில்,''நானும் டெல்டா காரன் தான். இன்னும் சொல்லப்போனால் மண்ணின் மைந்தன். அதைவிட இன்னும் சொல்லப்போனால் மயிலாடுதுறையில் மாப்பிள்ளை நான். மாப்பிள்ளை தான் எப்போதும் வீட்டுக்கு வருவோர்களை வரவேற்பார்கள். அதுபோல் நான் உங்கள் மாப்பிள்ளையாக உங்களை வருக வருக வருக என வரவேற்கிறேன்.
உங்களை நாங்கள் அரவணைத்து உங்களை இந்த இயக்கத்தில் சேர்த்து இருக்கிறோம் என்று சொன்னால் திமுக என்பது மக்களுக்காக, இன்னும் சொல்லப்போனால் இந்த இயக்கம் தொடங்கப்பட்ட போது ஆட்சிக்கு வரவேண்டும், ஆட்சியில் வந்து அமர்ந்திட வேண்டும், ஆட்சி தான் நமது குறிக்கோள் லட்சியம் என்றெல்லாம் எண்ணம் கொண்டு இந்த இயக்கம் தொடங்கப்படவில்லை. ஆனால் இன்றைக்குத் தொடங்கப்படும் கட்சியையெல்லாம் பார்க்க வேண்டும். நான் தான் நாளை முதலமைச்சர் என நேற்றுக்கு கட்சியைத் தொடங்கியவன் எல்லாம் அடுத்த முதலமைச்சர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அரசியலில் அரிச்சுவடி கூட தெரியாதவர்கள் எல்லாம் நான் தான் அடுத்த முதலமைச்சர் சொல்லும் சூழல் இருக்கிறது. அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
எதற்காக சொல்கிறேன் என்று சொன்னால் அவர்களையெல்லாம் கேவலப்படுத்த வேண்டும் கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் சொல்லவில்லை. இந்த இயக்கத்தைப்பற்றி பலபேர் உணர்ந்திருப்பீர்கள், பலபேர் உணர வேண்டும் என்பதற்காகத்தான் இதை நினைவுபடுத்த விரும்புகிறேன். 1949ல் இந்த இயக்கம் தொடங்கப்பட்ட பொழுது அறிஞர் அண்ணா கொட்டுகின்ற மழையில் வடசென்னை பகுதியில் இருக்கக்கூடிய ராபின்சன் பூங்காவில் தொடங்கும் பொழுது அவர் சொன்னார் 'ஆட்சிக்காக கட்சி தொடங்கப்படவில்லை. ஏழை எளியவர்கள்; பிற்படுத்தப்பட்ட மக்கள்; விவசாய பெருங்குடி மக்கள்; தாழ்த்தப்பட்ட மக்கள்; நெசவாளர் தொழிலாளர்களுக்காக ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த கழகம் தொடங்கப்படுகிறது என்று அறைகூவல் விடுத்து இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடங்கிய உடனே தேர்தலில் நாம் தேர்தல் களத்திற்கு வரவில்லை 1949-ல் தொடங்கிய திமுக 1957ல் தான் தேர்தல் களத்தில் திமுக இறங்கியது'' என்றார்.