Skip to main content

தொடரும் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு: சேலம் விவசாயிகள் அம்மனிடம் கோரிக்கை மனு கொடுத்து நூதன போராட்டம்!

Published on 28/06/2018 | Edited on 28/06/2018

தொடரும் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு: சேலம் விவசாயிகள் அம்மனிடம் கோரிக்கை மனு கொடுத்து நூதன போராட்டம்! ''சேலத்தில் கலவரம் வெடிக்கும்!!''


''எடப்பாடியும் கண்டுக்கல....மோடியும் கண்டுக்கல.... அதனால் எங்கள் கோரிக்கையை பெரியாண்டிச்சி அம்மனிடம் பொங்கலிட்டு மனு கொடுக்கிறோம்," என்று நூதன போராட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள் குள்ளம்பட்டி விவசாயிகள். எதிர்பாராத விதமாக அந்த இடத்தில் திடீரென்று பெண்கள் அருள் வந்து ஆட, கோயில் திடலே பெரும் களேபரத்தில் ஆழ்ந்தது.
 

சென்னை - சேலம் பசுமைவழி விரைவுச்சாலைக்காக சேலம் மாவட்டத்தில் 18 கிராமங்களில் 36.3 கி.மீ. தொலைவுக்கு விளை நிலங்கள், குடியிருப்பு நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கான நில அளவீட்டுப்பணிகள் ஜூன் 18ம் தேதி தொடங்கி, 25ம் தேதி வரை நடந்தது. கையகப்படுத்தப்பட வேண்டிய நிலங்கள் சேட்டிலைட் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அளந்து, முட்டுக்கற்கள் நடப்பட்டன.


 

Sleep farmers protest against eight continuing protests


 

சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி, ஹெக்டேருக்கு 21.3 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 9.04 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். எட்டுவழி பசுமைச்சாலையால் பறிபோக உள்ள தென்னை, பாக்கு, கொய்யா, மா, வாழை மரங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றார் ரோகிணி. ஆட்சியர் ஒருபுறம் ஆசை வலை விரித்தாலும், சேலம் - உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலைத் திட்டத்திற்கு கையகப்படுத்திய நிலத்திற்கு பத்து வருடங்கள் ஆகியும் இன்னும் முழுமையாக இழப்பீடு கிடைக்காத தகவல் அறிந்த விவசாயிகள், கலெக்டரின் வலைவீச்சுக்கு மயங்கவில்லை. இதனால் மீண்டும் நில எடுப்புக்கு கடும் எதிர்ப்புகள் தீவிரம் அடைந்துள்ளன. இது ஒருபுறம் இருக்க, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பசுமைவழி விரைவுச்சாலைக்காக விவசாயிகளே தாமாக முன்வந்து நிலம் கொடுத்து வருவதாக அப்பட்டமாக சொன்ன பொய்யால், சேலம் மாவட்ட விவசாயிகள் ரொம்பவே கொந்தளித்துக் கிடக்கின்றனர்.
 


ஆனாலும், மாவட்ட நிர்வாகம் காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு சொந்த மண்ணின் மைந்தர்கள் மீதே வழக்குப்பதிவு, கைது என அதிரடித்து வருவதால் விவசாயிகள் மிரண்டு கிடக்கின்றனர். ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இழந்த குள்ளம்பட்டி விவசாயிகள் நேற்று முன் தினம் தங்கள் வயல்வெளிகளில் கருப்புக்கொடிகளை நட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர். நேற்று குள்ளம்பட்டி பகுதி விவசாயிகள் அங்குள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்டு, பசுமைவழி விரைவுச்சாலை திட்டத்தை எப்படியாவது நீதான் தாயே நிறுத்த வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, கோரிக்கை மனுக்களை அளித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். அம்மனுக்கு வாழை இலையில் பொங்கல், வாழைப்பழங்கள் வைத்து படையிலிட்டபோது கோயில் மணி ஒலிக்கப்பட்டது. அப்போது திடீரென்று மூக்காயி என்ற பெண்ணுக்கு அருள் வந்து, சாமியாடினார்.
 


 

Sleep farmers protest against eight continuing protests



 

அப்போது அவர், ''இன்னும் கொஞ்ச நாளில் சேலத்தில் கலவரம் நடக்கப்போவுது இந்த இடத்துல இருந்து என்னையே தூக்கப் பாக்கறானுங்க. எடப்பாடியான் இந்த இடத்தை எடுத்தால் அவன் குடும்பம் அழிஞ்சு போயிடும்.. நான் இங்க இருக்கிற வரைக்கும் யாராலும் இந்த இடத்துக்கு வரவே முடியாது. நாட்டு மக்களை அவன் கலவரம் பண்ணிக்கிட்டு இருக்கான். அவன் உருப்பட மாட்டான்... உருப்பட மாட்டான்... இது சத்தியம்.....எடப்பாடி பிடிக்கிறதெல்லாம் பொய்... நான் இருக்கற வரைக்கும் உங்களுக்கு எந்த இடைஞ்சலும் வராது... இது இந்த மண்ணு மேல சத்தியம்...'' என்று கூறியபடியே கோயில் வளாகத்தில் மயங்கி விழுந்தார்.
 


அதற்குள் கோயில் பூசாரியான முருகேசன் என்பவரும் அருள் வந்து சாமியாடினார். அவரை அருகில் இருந்தவர்கள் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தும் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினர். அவர் திடீரென்று சாமி அருள் வந்த உணர்ச்சிப் பெருக்கில் 'ஹோய்...' என்று அலறியது எல்லோரையும் சில நிமிடங்கள் உலுக்கி எடுத்தது. அருள் வந்த ஆவேசத்தில் பெரியாண்டிச்சி அம்மன் கோயில் வளாகத்தில் இருந்த சூலாயுதத்தை பிடுங்க முயற்சித்தார். அருகில் இருந்த விவசாயிகள் நான்கைந்து பேர் அவரை அங்கிருந்து படாதபாடு பட்டு நகர்த்திக் கொண்டு சென்றனர். பின்னர் அவருக்கு வாயில் எலுமிச்சம்பழம் தின்னக் கொடுத்தனர். பிறகு, நெற்றியில் திருநீறு, குங்குமம் பூசிவிட்டனர். 'தாயே நீதாம்மா எங்களுக்கு பக்கத்துணை இருக்கணும்...,' என்று எல்லோரும் அவரிடம் வேண்டினர். முருகேசன் பூசாரியின் அருள் கட்டுக்குள் வர நீண்ட நேரம் ஆனது. இதற்கிடையே திடீரென்று பார்வதி, தனலட்சுமி ஆகியோரும் சாமி வந்து ஆடினர். அவர்களுக்கு நெற்றியில் திருநீறு பூசியதும் சிறிது நேரத்தில் அருள் வந்தவர்கள் சகஜ நிலைக்குத் திரும்பினர். இதையடுத்து குள்ளம்பட்டி கிராமத்தில் பசுமைவழி விரைவுச்சாலைக்காக நிலங்களை பறிகொடுக்க உள்ள 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி, பெரியாண்டிச்சி அம்மன் காலடியில் வைத்து வழிபட்டனர்.


 

Sleep farmers protest against eight continuing protests


இதுகுறித்து விவசாயிகள் பன்னீர்செல்வம், அமுதா ஆகியோர் கூறுகையில், ''ஆட்சியாளர்கள் எங்கள் நிலங்களை அராஜகமான முறையில் திட்டமிட்டு அபகரிக்கின்றனர். எங்களுக்கு வாழ்வாதாரமே இந்த நிலம்தான். இதுதான் எங்கள் அடையாளம். இருக்கின்றன நிலத்தையும், குடியிருக்கும் வீட்டையும் பிடுங்கிக் கொண்டால் நாங்கள் குடும்பத்துடன் தெருவில்தான் நிற்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி அய்யா மனசாட்சியே இல்லாமல் 96 சதவீதம் பேர் நிலங்களை தாங்களாகவே முன்வந்து கொடுப்பதாக பொய் பேசுகிறார். எப்படி அவரால் இப்படி பேச முடிகிறது? அதிகாரிகள் இந்த கிராமத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேசட்டும். யாராவது நிலம் கொடுக்க முன்வருகிறார்களா? என்பது அப்போது தெரியும். 
 


எங்கள் குறைகளை அதிகாரிகளிடம், ஆட்சியாளர்களிடமும் சொல்லிப் பார்த்தோம். யாரும் கண்டுகொள்ளவே இல்லை. பசுமைவழி விரைவுச்சாலையால் இந்த அம்மன் கோயிலும் பறிபோக இருந்தது. ஆனால் எப்படியோ இந்த கோயில் தப்பிவிட்டது. அதுமட்டுமில்லாமல், பெரியாண்டிச்சி அம்மன் சக்தி வாய்ந்தது. நாங்கள் இங்கு வேண்டிக்கொண்டால் நினைத்தது பலிக்கும். அதனால்தான், பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்துக்காக, எங்கள் பகுதியில் மட்டுமின்றி எந்த பகுதியிலும் விவசாய நிலத்தை எடுக்கக் கூடாது என்பதற்காக அம்மனிடம் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தை நடத்தினோம்,'' என்றனர்.

 

சார்ந்த செய்திகள்