அன்னம், சாப்பாடு, மனிதன் உயிர் உடல் வாழ மிக மிக அவசியம் என்பதை அனைவரும் அறிவோம். பொதுவாக உணவு சாப்பிடும் முன்பு பலர் 'அன்னபூரணி தாயே' என்று வணங்கிவிட்டு சாப்பிடுவார்கள். பலர் பிரார்த்தனை செய்த பிறகே உணவை உண்பார்கள். காலம் மாறிப்போச்சு. மனிதர்களுக்கு எதிலும் அவசரம். அதேபோல் சாப்பாட்டிலும் அவசரம். நின்று கொண்டே சாப்பிடுகிறார்கள், சிலர் நடந்து கொண்டும் சாப்பிடுவார்கள். பஸ், ரயில், கார் பயணத்தின்போதும் வாகனங்களிலேயே சாப்பிடும் பழக்கங்கள் உள்ளது.
கிராமங்களில் உணவு தானியங்களை சேமிக்கும் களம் போன்ற இடங்களில் செருப்புப் போட்டு நடக்க மாட்டார்கள். தானியத்தைக் காலால் மிதிக்க மாட்டார்கள். ஆனால் இப்போது சாலைகளில் எல்லாம் தாறுமாறாகப் போட்டு காய வைப்பது, உலர்த்துவது, சேமிப்பது சாலையில்போகும் வாகனங்கள் அதன் மீது ஏறிச் செல்வது, செருப்பு கால்களோடு நடப்பவர்கள் அதன் மீது நடப்பதை கண்களால் நாம் பார்க்கிறோம்.
உணவு தானியத்தை இறைவனுக்கு ஒப்பாக கருதிய காலம் மாறிப்போனது. அது மட்டுமா? உணவுப் பொருளை சேமித்து அதை பத்திரப்படுத்தும்போது சானத்தினால் ஆன இரு பிள்ளையார்கள் பிடித்து வைத்து இடையில் அருகம்புல் சொருகி சந்தனம், குங்குமத்தினால் பொட்டு வைத்து அதை தானியத்தின் மீது வைத்து வணங்கிய பிறகே அள்ளி பத்திரப்படுத்துவார்கள். இப்போதெல்லாம் தானியங்களை நிலத்தில் இயந்திரங்களால் அறுவடையாகும்போதே வீட்டுக்குக் கூட கொண்டுவராமல் நேரடியாக வியாபாரிகளுக்கு விற்று விடுகிறார்கள்.
இப்படிப்பட்ட காலத்திலும் உணவுக்கு மதிப்பளித்து வருகிறார் உளூந்தூர்பேட்டை டவுனில் மெஸ் நடத்தி வரும் பெரியவர் ஒருவர். இவரது மெஸ்சில் மதிய சாப்பாட்டின்போது அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், அரசியல்வாதிகள் என பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். காரணம் வீட்டு சாப்பாடு போன்று கலப்படமில்லாத உணவு தானிய முறையில் தயாரிப்பதால்தான்.
அப்படிப்பட்ட இவரது மெஸ்சிஸ் சாப்பிட எவ்வளவு பெரிய ஆட்கள் போனாலும் அவர்கள் காலில் அணிந்துள்ள செருப்பை (காலணிகளை) வாசலில் கழட்டி விட்டுத்தான் உள்ளே போய் டேபிளில் அமர்ந்து சாப்பிட வேண்டும். சிலர் மறதியாக செருப்போடு போய் உட்கார்ந்தாலும் அவர்களிடம் பக்குவமாக சொல்லி செருப்பு போடாமல் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பதை எடுத்து சொல்லுவார்.
'பெரிய பெரிய ஓட்டல்களில் எல்லாம் செருப்போடு அமர்ந்து சாப்பிடுகிறார்களே, நீங்கள் மட்டும் கண்டிஷன் போடுகிறீர்கள்' என்று ஏடாகூடமாக சிலர் கேட்பார்கள். அதற்கு அந்த பெரியவர், சாப்பாடு... அன்னம்... அது தெய்வத்திற்கு சமம். வீடுகளில் உட்கார்ந்து சாப்பிடும்போது செருப்பு போட்டுக்கொண்டு உட்கார்ந்து சாப்பிடுகிறோமா? இல்லையே. வீட்டில் அன்னத்திற்கு தெரிந்தோ, தெரியாமலோ கொடுக்கும் மரியாதையை ஓட்டலுக்குப் போனாலும் கொடுக்க வேண்டும். காலம் மாறலாம், விஞ்ஞானம் வளரலாம். தொழிற்சாலைகள் பெருகலாம். அதை உருவாக்கும் மனிதர்கள் அனைவரும் உயிர் வாழ அன்னத்தைதானே சாப்பிடுகிறோம் என பக்குவமாக பேசும்போது அவர் மீது மட்டுமல்ல, சாப்பாட்டின் மீதே மிகப்பெரிய மரியாதை வந்துவிடும்.
இந்த ஓட்டல் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை மிளகு மாரியம்மன் கோவில் தெருவில் உள்ளது. இதன் உரிமையாளரான 68 வயது கண்ணாயிரம் சொல்கிறார், "எனது தந்தை கோவிந்தன் இந்த ஓட்டலை ஆரம்பித்தார். 1965ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறோம். அப்போது சாப்பாடு 2 ரூபாய் 50 பைசா. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தினால் இப்போது சாப்பாடு 50 ரூபாய். எடுப்பு சாப்பாடு 60 ரூபாய். வீட்டு முறை உணவகம் மட்டுமல்ல, என் குடும்பத்தினர்களை கொண்டே தயார் செய்கிறேன். சம்பள ஆள் இல்லை. உணவுகள் தயாரானதும் தெய்வங்கள் முன்பு வைத்து படையல் செய்ததும், உணவு பரிமாறப்படும். சாதம், சாம்பார், ரசம், மோர், ஒரு பொறியல், இரண்டு மசால் வடை, இவைகளோடு சாப்பாடு கொடுக்கப்படுகிறது. உணவு அருந்த வருபவர்களிடம் செருப்பை வெளியே கழட்டிவிட வேண்டும் என்று சொல்லும்போது, யாரும் அதற்கு மறுப்பு தெரிவிப்பதில்லை. இங்கு சாதாரண ஏழை எளிய மக்கள், விவசாயிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், அதிகாரிகள் என பலரும் சாப்பிட வருவார்கள்" என்றார்.
கலப்படமில்லாத உணவுகள் சாப்பிட விரும்புபவர்கள் உளுந்தூர்பேட்டைக்கு வரும்போது ஒருமுறை சாப்பிட்டுத்தான் பாருங்களேன்.