Skip to main content

"ஆளுநர் மாளிகையில் எதையோ பார்க்கக் கூடாததைப் பார்த்த பழனிசாமி; அவர்கள் கூட்டத்திலேயே எங்களுக்கு ஸ்பை இருக்கு - புகழேந்தி டாக்

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

kjl

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். அப்போது ஆளுங்கட்சியான திமுக மீது பல்வேறு ஊழல் புகார்களைக் கொடுத்ததாகச் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுதொடர்பாக பன்னீர்செல்வம் அணியின் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தியிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் பின்வருமாறு,

 

இன்றைக்கு உங்கள் பழைய சகாக்கள் ஆளுநரைச் சந்தித்துப் பேசியுள்ளார்கள். தமிழக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்துள்ளார்கள். உள்ளாட்சித் துறையில் எண்ணற்ற ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்கள். போஸ்டர் அடித்ததில் ஊழல் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? எதிர்க்கட்சி என்ற பாதையில் எடப்பாடி தரப்பிலான அணி சரியான திசையில் பயணிப்பதாகக் கருதுகிறீர்களா? 

 

எடப்பாடி குரூப் எதற்காக ஆளுநரைச் சந்தித்தார்கள். என்ன தவறு நடைபெறுவதைக் கண்டுபிடித்ததாகச் செய்தியாளர்களிடம் கூறினார்கள். அங்கே எடப்பாடியின் அடிப்பொடிகள் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தீர்களா? அவர்கள் எல்லாம் ஆளுநரை சந்தித்துவிட்டு தெம்போடு நின்று கொண்டிருந்தவர்களைப் போல் அவர்கள் இருந்தார்களா? ரஜினி ஒரு படத்தில் ஐயோ பாத்துட்டேன், ஐயோ பாத்துட்டேன்னு அதகளம் செய்து படம் முழுவதும் சிரிக்க வைத்திருப்பார். அதைப்போல தற்போது எதையோ பார்க்கக்கூடாததைப் பார்த்ததைப் போல் எடப்பாடி தரப்பினர் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளனர். ஆனால் யாருடைய முகத்திலாவது சந்தோஷம் துளி அளவாவது இருந்ததா என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அனைவரும் பேய் அறைந்ததைப் போல் இருந்ததை நாம் எல்லாம் பார்த்தோம். 

 

இவர்கள் ஆளுநரிடம் என்ன புகாரை அளித்துள்ளார்கள். எடப்பாடியுடன் அங்கே சென்ற அவரது நண்பர்கள் பேசிக்கொண்டதை அருகிலிருந்தவர்கள் என்னிடம் கூறினார்கள். நாம் அவர்கள் கூட்டத்திலேயே ஸ்பை வைத்துள்ளோம். அதில் ஒருவர் அருகிலிருந்தவரிடம் அண்ணன் சொன்ன ஊழல் நடைபெற்றபோது யார் பதவியிலிருந்தார்கள் என்று கூடவா அவருக்குத் தெரியாது என்று கேட்டுள்ளார். அருகிலிருந்தவர் ஏதோ அண்ணன் ஞாபக மறதியில் எடுத்து வந்திருப்பார் என்று தங்களுக்குள்ளாகவே கிண்டலாகப் பேசிக் கொண்டுள்ளார்கள். அந்த அளவுக்குத்தான் அவர்களின் தரம் இருக்கிறது. இவர்களால் குற்றத்தைக் கண்டுபிடித்துச் சொல்லும் ஆற்றல் இருந்திருந்தால் இவர்களை ஏன் மக்கள் துரத்தப் போகிறார்கள். இவர்கள் திறமையற்றவர்கள், அதுதான் மக்கள் இவர்களைக் கண் காணாத இடத்தில் தூக்கி எறிந்துள்ளார்கள்.

 

இவர்கள் முதலில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அவர்கள் ஆட்சியிலிருந்த வரைக்கும் முறையாகத் தேர்தல் நடத்தினார்களா? ஆட்சி முடியப்போகின்ற நிலையில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தினார்கள். அதிலும் 50 சதவீத இடங்களை திமுக பெற்றது. இதுதொடர்பாக எடப்பாடி வீட்டில் நடைபெற்ற சந்திப்பில் அண்ணே என்ன இப்படி ஆயிடுச்சு அண்ணே... என்று நான் அவரிடம் நேரடியாகக் கேட்டேன். நானும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் முடிந்த கையோடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தி விடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது தேர்தல் நடத்தினால் சரியாக இருக்காது; அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றார். நானும் வெற்றி பெறுவதற்காக அவ்வாறு அவர் கூறுகிறார் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதிலும் இவர்களுக்குப் பெரிய நோக்கம் இருந்தது.

 

அவர்கள் ஆட்சியில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் உள்ளாட்சி அமைப்புக்களுக்குத் தேர்தல் நடத்தவில்லை. அப்போது அதனை நிர்வகித்தது யார்? உள்ளாட்சித் துறை அமைச்சர், அவர் யார் கண்ட்ரோலில் இருப்பார். இந்த எடப்பாடியின் பின்புலத்திலிருந்துதான் செயல்படுவார். தேர்தலை நடத்தாமல் அதில் எவ்வளவு கோல்மால்களைச் செய்ய முடியும் என்ற நோக்கில் தேர்தலைக் கூட இவர்கள் தள்ளி வைத்திருந்தார்கள் என்பது இவர்களின் செயல்பாடுகளுக்குப் பின்பே புரிய வந்துள்ளது. ஆகவே இவர்கள் கொடுத்த புகார்களை விசாரித்தால் இவர்கள் மீதுதான் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.


 

Next Story

'ஜெயலலிதாவின் வாரிசு ஓபிஎஸ் என்பதை நிரூபித்துவிட்டார்' - புகழேந்தி பேட்டி

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

'Jayalalitha's successor has proved that he is OPS'-pugazhendi interview

 

கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் ஆர். காமராஜ். அப்போது பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவுப் பொருள் கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி முறைகேடு செய்துள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

மேலும் 2015 முதல் 2021 ஆம் ஆண்டு வரை பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவுப் பொருள் கொள்முதல் செய்ததில் 2 ஆயிரத்து 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி பல முறை புகார் அளித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் இரு வழக்குகளும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, “இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 6 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும்” எனத் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு எதிரான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் புகார்தாரர்கள் இருவரும் டிசம்பர் 6 ஆம் தேதி புலன் விசாரணை அதிகாரி முன்பு ஆஜாராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

 

'Jayalalitha's successor has proved that he is OPS'-pugazhendi interview

 

பின்னர் நீதிமன்றத்தின் வெளியில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, 'நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா அவர்கள் அளித்த தீர்ப்பினை தலை வணங்கி ஏற்பதாகவும் வரவேற்கிறேன். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்டும் தீர்மானத்திற்கு இரண்டாவது முறையாக ஆதரவளித்தார். ஒப்புதல் தராமல் ஆளுநர் வைத்திருந்து திருப்பி அனுப்பியது தவறு என மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசிற்கு ஆதரவாக குரல் வாக்கெடுப்பின் மூலம் ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்தார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன், உசிலம்பட்டி ஐயப்பன் ஆகியோரும் ஆதரவு தெரிவித்தார்கள்.

 

ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் உருவாக வேண்டும் என்று 2020இல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் இருந்த போது கொண்டுவரப்பட்ட தீர்மானம் என்பதனை மறந்து ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் பழனிசாமி வெளிநடப்பு செய்தார். அவரை சார்ந்தவர்களும் வெளிநடப்பு செய்தனர். இதனை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் உள்ள அமைச்சர் சுட்டிக் காட்டி ஜெயலலிதா மீது அக்கறை இல்லாத பழனிசாமி என்பதை விவரித்து பேசியதை மறந்து விட முடியாது.. யாருக்கோ பயப்படுகிறார்கள் என்பதையும் குறிப்பிட்டார்கள். ஜெயலலிதா பெயரில் மீன்வள பல்கலைக்கழகம் என்ற தீர்மானத்திற்கு ஆதரவளித்து ஜெயலலிதாவின் வாரிசு ஓபிஎஸ் என்பதை ஓபிஎஸ் அவர்கள் சட்டமன்றத்தில் நிரூபித்து விட்டார்கள்'' என்றார்.

 

 

Next Story

“இதே மழையில் தான் திராவிட இயக்கமே உருவானது; எடப்பாடிக்கு சிறை உறுதி” - புகழேந்தி பேச்சு

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

"It was in the rain that the Dravidian movement was born; Imprisonment guaranteed for Edappadi'' - Pugazhendi speech

 

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி காஞ்சிபுரத்தில் நேற்று மாலை ஓ. பன்னீர்செல்வம் 'அதிமுகவை மீட்டெடுப்போம்' எனப் புரட்சி பயணம் தொடங்க இருந்தார். இந்த விழா நடைபெற இருந்த இடத்தில் கனமழை பெய்தது. விழாவிற்கு வந்திருந்தவர்கள் ஒதுங்கக் கூட இடம் இல்லாமல் தவித்து வந்தனர்.

 

சிறிது நேரம் மழை ஓய்ந்த பிறகு மீண்டும் தொண்டர்கள் கூடினர். இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் மேடையில் பேசினர். ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேசுகையில், ''ரஞ்சித் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னால் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார். பேரறிஞர் அண்ணா பிறந்த இந்த பூமியில் தெரிவிக்கிறேன். ராபின்சன் பூங்காவில் மழையில் தான் திராவிட இயக்கமே உருவானது. அதேபோல் நாடாளுமன்ற தேர்தலை நோக்கிய புரட்சி பயணத்தை ஓபிஎஸ் துவங்கியிருக்கிறார். இந்த மழையில் தான் இந்த புரட்சி பயணம் தொடங்கி இருக்கிறது.

 

இந்தப் பயணம் நடக்கும் போது எடப்பாடி பழனிசாமி என்கிற துரோகி கோடநாடு கொலை வழக்கில் சிறையில் இருப்பார் என்பதையும் உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். மழையை பொருட்படுத்தாமல் இங்கு வந்த அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மீண்டும் சந்திப்போம்'' என்றார். இதையடுத்து மழை அதிகரித்ததால் புரட்சி பயண துவக்க விழா ஒத்திவைக்கப்படுவதாக பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார்.