
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் கோடை விடுமுறையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா கொண்டாடப்படும். இந்த கோடை விழாவின் ஒரு பகுதியாக மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதே சமயம் சீசன் தற்போது களைகட்டி உள்ளது. இதன் காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றலா பயணிகள் உதகைக்குப் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் சுற்றலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பாக பல்வேறு கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாகக் கருதப்படும் 127வது மலர் கண்காட்சியைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (15.05.2025) தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் மிகவும் பிரசித்தி பெற்ற பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. 275 வகையான மலர்கள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பூங்காவில் உள்ள அலங்கார மேடைகளில் 40 ஆயிரம் மலர் தொட்டிகள் பல வண்ணங்களில் சுற்றலா பயணிகளில் பார்வைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 7.5 லட்சம் மலர் மலர்களைக் கொண்டு 24 மலர் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அதோடு பண்டைய கால ராஜாக்களின் அரண்மனை மற்றும் அவர்களது கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான 70 அடி நீளத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் மலர்களைக் கொண்டு அரண்மனையின் நுழைவாயில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. 2 லட்சம் மலர்களைக் கொண்டு 75 அடி நீளம் 25 அடி உயரத்தில் அரண்மனை வடிவம், அரண்மனையின் முகப்பு பகுதியில் யானை மற்றும் அதில் போர் வீரர்கள் அமர்ந்திருப்பது போன்ற வடிவமைப்பு, அரண்மனையின் சிம்மாசனம் போன்ற உருவங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மலர் கண்காட்சியானது இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை மொத்தம் 11 நாட்கள் நடைபெற உள்ளது. மேலும் ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட இரணியன் இல்லத்தையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அங்குள்ள 25 அரங்குகளையும் பார்வையிட்டார். அப்போது அங்கு நடைபெற்ற கலைநிகழ்ச்சியையும் கண்டு ரசித்தார்.