''ஐரோப்பிய நாடுகள் ஒரு வைரஸுடன் போராடிக் கொண்டிருக்க, ஈரான் இரண்டு வைரஸ்களுடன் (கரோனா வைரஸ், பொருளாதாரத் தடை) போராடிக் கொண்டிருக்கிறது!'' என்று கூறினார், ஈரான் அதிபர் ஹசன் ரஹ்வானி.
அதுபோலவே, இந்தியாவில் உள்ள வெகுமக்கள் கரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் போது, இந்திய முஸ்லிம்களோ கரோனாவுடன் மட்டுமின்றி தமக்கு எதிரான வெறுப்புப் பரப்புரையுடனும் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
உலகில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா பரவி, பெரும் பாதிப்புகளை மக்கள் சந்தித்த போதும், எங்கும் இதற்கு மதச் சாயம் பூசப்படவில்லை. ஆனால், இந்தியாவிலோ தப்லீக் அமைப்பினர் தான் கரோனாவை பரப்பியதாக மிகப்பெரும் பரப்புரை செய்யப்பட்டது. சமூக வலைத்தளங்களில் புழங்கும் முகம் தெரியாத தற்குறிகள் மட்டுமின்றி, மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, கேரளா ஆளுநர் ஆரிப் முஹம்மது கான், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போன்றோரும், ரிபப்ளிக் டிவி போன்ற வட இந்திய ஊடகங்களும், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள் என்ற அடையாளங்களுடன் அறியப்படும் வலதுசாரிகள் பலரும் இத்தகைய வெறுப்புப் பரப்புரையை வெளிப்படையாகச் செய்தனர்.
பாலிவுட் நடிகையும் பா.ஜ.க ஆதரவாளருமான கங்கணாவின் சகோதரி ரங்கோலி சாண்டெல், தமது ட்விட்டர் பதிவில், ''முஸ்லிம்களையும், மதச் சார்பின்மை பேசும் ஊடகத்தினரையும் வரிசையில் நிற்கவைத்து சுட்டுத்தள்ள வேண்டும்; இதனால் நாம் நாஜிகள் என அழைக்கப்படலாம்; அதுபற்றி எனக்கு கவலை இல்லை'' என்று எழுதியிருந்தார். இவர்தான், ''தேர்தலே நடத்தாமல் மோடியை மீண்டும் பிரதமர் ஆக்க வேண்டும்!'' என்று எழுதி சர்ச்சையில் சிக்கியவர். அத்தகையவர், முஸ்லிம்களை இன அழிப்பு செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக எழுதினார்.
இத்தகைய வெறுப்புக் கருத்துக்களின் விளைவாக, சமூகப் பதற்றம் உருவானது. முஸ்லிம்களை கண்டாலே ஐயத்துடனும் அச்சத்துடனும் எரிச்சலுடனும் எதிர்கொள்ளும் நிலைக்கு வெகுமக்கள் தள்ளப்பட்டனர். ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உணவின்றி வாடிய மக்களுக்கு, உணவு கொடுக்கச் சென்ற முஸ்லிம்கள் கூட சில இடங்களில் விரட்டப்பட்டனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சென்ற முஸ்லிம்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. உத்தரபிரதேசம் மீரட் நகரில் இயங்கும் ஒரு தனியார் புற்றுநோய் மருத்துவமனை, முஸ்லிம்களுக்கு இனி மருத்துவம் பார்க்க மாட்டோம் என வெளிப்படையாக பத்திரிகைகளில் அறிவிப்பு செய்தது. பொதுவாக வட மாநிலங்களில்தான் இத்தகைய நிலை இருக்கும். ஆனால், இம்முறை இந்த வெறுப்பு நெருப்பு தமிழ்நாட்டிலும் பற்றிப் பரவியது.
டில்லியில் இருந்து திரும்பிய முஸ்லிம்களை அடையாளங்கண்டு, அவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்காக அரசு முயன்றபோது, ஆங்காங்கே பொதுமக்கள் ஒன்று கூடி ''இவர்களை இங்கே வைக்காதீர்கள்!'' என தடுத்தனர். முஸ்லிம்களும் பிறமக்களும் அருகருகில் வாழும் ஊர்களில் இருதரப்பும் பயன்படுத்தும் பொதுப்பாதைகள், முஸ்லிம்கள் பயன்படுத்தக்கூடாது என்பதற்காக அடைக்கப்பட்டன. வாடகைக்கு குடியிருந்து வரும் முஸ்லிம்களை தங்களது வீடுகளில் இருந்து வெளியேறுமாறு பல இடங்களில் வீட்டு உரிமையாளர்கள் நிர்பந்தித்தனர்.மதுரையைச் சார்ந்த முஸ்தபா என்ற இளைஞருக்கு கரோனா தொற்றே இல்லாத நிலையிலும், அவருக்கு கரோனா இருப்பதாக பரப்பிவிடப்பட்ட வதந்தியின் காரணமாக, மன உளைச்சலுக்கு உள்ளாகி அவர் தற்கொலை செய்து கொண்டார். இப்படி, எண்ணற்ற சம்பவங்கள்.
நிலைமை மோசமாவதை உணர்ந்த அரசு, கரோனாவுடன் மதத்தை தொடர்பு படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியது. பதற்றத்தை தணித்து நல்லிணக்கச் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் தலைமைச் செயலகத்தில் மதத் தலைவர்களுடனான கலந்துரையாடலை நடத்தியது. ஒரு கட்டத்தில், தமிழ்நாடு காவல்துறை தலைவர் ஜே.கே.திரிபாதி; ''மத வெறுப்புப் பரப்புரையால் கலவர அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே உடனடியாக இதுகுறித்து நடவடிக்கைகள் எடுக்கும்படியும்'' காவல்துறைக்கு ஆணையிட்டார். ஆனால், இந்த அளவுக்கு இங்கு நிலைமை சென்றதற்கு, வெறுப்புப் பரப்புரையாளர்கள் மட்டும் காரணமல்ல; அரசும் காரணம்.
ஏனெனில், டில்லி தப்லீக் நிகழ்வில் பங்கேற்ற சிலருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தவுடன், அங்கு சென்றுவந்த மற்ற அனைவரையும் கண்டறிந்து தனிமைப்படுத்துவதற்கு அரசு கையாண்ட முறை அபத்தமானது. டில்லி சென்றுவந்த அத்தனைபேரின் பெயர், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட முழு விபரங்கள் கிடைத்த பிறகும், அவர்களை எளிதில் கண்டறிய வாய்ப்புகள் இருந்தும், நிலைமையை சிக்கலாக்கியது அரசு.
சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், ஊடகங்களைச் சந்தித்து, மிக வெளிப்படையாக அறிவிப்புச் செய்து, ஒரு தேடுதல் வேட்டை நடத்துவது போன்ற சித்திரத்தை ஏற்படுத்தியதால், ஒட்டுமொத்த மக்களும் பீதியில் உறைந்தனர். அதிலும், ''டில்லிக்குச் சென்ற பாதி பேரைத்தான் கண்டு பிடித்துள்ளோம்; மீதி பேரை தேடிக் கொண்டிருக்கிறோம்; அதில் பலரின் தொலைபேசிகள் அணைக்கப்பட்டுள்ளன!'' என்று அவர் சொன்னது, மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
அதாவது, தப்லீக் அமைப்பினர், தமக்கு நோய் தொற்று இருப்பது தெரிந்தும், உரிய சிகிச்சைக்கு முன்வராமல், தொலைபேசியை அணைத்துவிட்டு பதுங்கி இருப்பதோடு, வேண்டுமென்றே மற்றவர்களுக்கும் கரோனாவை பரப்பிக் கொண்டிருப்பதாக மக்கள் நம்பத் தொடங்கினர். ஆனால், யாரையெல்லாம் தொடர்புகொள்ள முடியவில்லை என்று பீலா ராஜேஷ் ஊடகங்களிடம் சொன்னாரோ, அவர்கள் அனைவரும் உடனடியாக தாமாக முன்வந்து தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு சிகிச்சைக்கு வந்தனர். அரசு சொன்ன சிலமணி நேரத்தில் இப்படி ஒட்டுமொத்தமாக சிகிச்சைக்கு வந்தவர்களா; கரோனாவை பரப்பும் நோக்கத்துடன் பதுங்கி இருந்திருப்பார்கள்?
ஒருவருக்கு தொற்று ஏற்பட்டிருந்தாலும், அது அவருக்கே தெரியாது என்பதுதான் கரோனாவின் தன்மை என்னும்போது, டில்லி சென்று வந்த பலரும் தமக்கு அறிகுறிகள் இல்லாததால்கூட சிகிச்சைக்கு வராமல் இயல்பாக இருந்திருக்கலாம். கரோனா தொற்றின் இந்தத் தன்மையையும், தொற்றுக்கு உள்ளானவர்களின் அறியா நிலைமையையும் நன்கு அறிந்தவர்கள் சுகாதாரத்துறை நிபுணர்கள். அப்படியிருந்தும் இதில் ஏன் பதற்றமும் பரபரப்பும் உருவாக்கப்பட்டது?
ஒரு இடத்தின் மூலம் நோய் தொற்று பரவியிருந்தால், அந்த இடத்திற்குச் சென்ற அனைவரையும் தனிமைப்படுத்தி பரிசோதிக்க வேண்டும் என்ற அரசின் முனைப்பு சரி. ஆனால், அந்த ஒரு இடம் என்பது டில்லி நிஜாமுத்தீன் மர்க்கஸ் மட்டுமில்லையே! அரசே அறிவித்தபடி, பீனிக்ஸ் மால் உள்ளிட்ட ஏராளம் இடங்கள் அந்தப் பட்டியலில் உண்டு. டில்லியில் இருந்து வந்தவர்கள் சிலரின் தொலைபேசி அணைக்கப்பட்டிருந்ததாக பரபரப்பு கிளப்பிய அரசு, பீனிக்ஸ் மாலுக்கு வந்து சென்றவர்களை தேடும்போது மட்டும், பொதுவாக ஒரு அறிவிப்பைக் கொடுத்துவிட்டு இயல்பாகக் கடந்து போய்விட்டது. பீனிக்ஸ் மாலுக்கு வந்து சென்றவர்கள், தாமாக முன்வந்து பரிசோதிக்க வேண்டும் என்று அரசு அழைப்பு கொடுத்ததே தவிர, பீனிக்ஸ் மாலில் உள்ள அந்த குறிப்பிட்ட கடைக்கு, யார் யார் வந்து சென்றார்கள் என்று ஒவ்வொருவரையும் தேடிப்பிடிக்கவில்லை. அங்குள்ள கடையின் கேஷியருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், யார் யார் அங்கு பொருள் வாங்கிச் சென்றார்களோ, அவர்களையெல்லாம் கட்டாயம் கண்டறிந்து பரிசோதித்திருக்க வேண்டும். பொருள் வாங்கிச் சென்ற ஒவ்வொருவரின் தொடர்பு எண்ணும் அந்தக் கடையிலுள்ள கணினியில் இருக்கும். அந்த வகையில், அவர்களை கண்டறிவதற்காக எத்தனை பேரை சுகாதாரத் துறை தொடர்பு கொண்டது? அதில் யாருடைய தொலைபேசியெல்லாம் அணைத்து வைக்கப்பட்டிருந்தன? ''இத்தனைபேரை தொடர்பு கொண்டோம்; இத்தனை பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை!'' என்று அவர்கள் குறித்து சுகாதாரத் துறைச் செயலாளர் அறிவிப்பு ஏதும் செய்தாரா? அப்படியெனில், டெல்லிக்கு ஒரு அளவுகோல்; பீனிக்ஸ் மாலுக்கு ஒரு அளவுகோலா?
இன்னும் சொல்லப்போனால், டில்லி தப்லீக் நிகழ்வுக்கு சென்று வந்தவர்களின் விபரங்கள் அனைத்தும் அரசின் வசம் வந்துவிட்டன. ஆனால், பீனிக்ஸ் மாலுக்கு வந்து போனவர்களில் அந்த குறிப்பிட்ட கடையில் பில் போட்டவர்கள் தவிர மற்ற எவரின் விபரமும் தெரியாது. ஏனெனில், அனைவரும் பொதுவாக வந்து சென்றிருப்பவர்கள். அப்படியிருக்க, எளிதில் கண்டுபிடிக்க வாய்ப்புள்ள தப்லீக் அமைப்பினரை தேடப்படும் நபர்கள் போல சித்தரித்த அரசு, எளிதில் கண்டுபிடிக்க வாய்ப்பற்ற பீனிக்ஸ் மால் விசயத்தில் நிதானத்தை கடைப்பிடித்தது. யாரைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளதோ, அவர்களைப் பற்றித்தான் அரசுக்கு அதிக கவலையும், பதற்றமும் இருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கு நடந்ததோ தலைகீழ்.
எப்படியோ, டில்லிக்குச் சென்று வந்த அனைவரும் கண்டறியப்பட்டு தனிமைப் படுத்தப்பட்ட பிறகும், அவர்கள் குறித்த பரபரப்பை விடவில்லை அரசு. தமிழ்நாட்டில் கரோனா நிலவரம் குறித்து அறிவிப்பு செய்வதற்காக அன்றாடம் செய்தியாளர்களை சந்தித்த பீலா ராஜேஷ், ஒவ்வொரு முறையும் கரோனா நோயாளிகளை அடையாளப் படுத்தும் போது, அதில் டில்லி நிகழ்வில் பங்கேற்றவர்களை மட்டும் தனியே பிரித்து அடையாளப் படுத்தினார். முதலில் சில நாட்கள் 'டில்லி மாநாடு; டில்லி மாநாடு' என அழுத்திச் சொல்லி வந்தவர், பிறகு 'டில்லி மாநாடு' என்று சொல்வதைத் தவிர்த்து, 'ஒரே தொற்று' என்று சொன்னார். பின்னர், அந்த 'ஒரே தொற்று' என்ற வார்த்தையையும் கூட, தலைமைச் செயலாளர் தவிர்த்தார். தலைமைச் செயலாளர், செய்தியாளர்களை சந்திக்கும்போது, நோய்த் தொற்று குறித்து பொதுவாக அறிவித்தாரே தவிர, நோயாளிகளை பிரித்து அடையாளப்படுத்தவில்லை. அரசின் இந்த தடுமாற்றத்தை கேலி செய்யும் வகையில், எச்.ராஜா தனது சமூகவலைதளப் பக்கத்தில், 'இங்கு மீன் விற்கப்படும்' என்ற திரைப்பட நகைச்சுவையை பகிர்ந்திருந்தார்.
கரோனா நோயாளிகளின் பெயர் உள்ளிட்ட விபரங்களை பொதுவில் அறிவிக்கக் கூடாது என்பதுவே மருத்துவ அறம். ஆனால், அரசோ அந்த நோயாளிகளில் ஒரு பிரிவினரை தனியே அடையாளப்படுத்திக் காட்டியது. அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் எதையும் சொல்லவில்லை என்றாலும், 'டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்' என்று தொடர்ந்து சொன்னதன் மூலம், மிகப்பெரிய உளவியல் நெருக்கடிக்கு அந்த நோயாளிகளும் அவர்களின் குடும்பத்தினரும் உள்ளானார்கள். அவர்களின் சமய மக்களோ மிகப்பெரும் சமூக நெருக்கடிக்குத் தள்ளப்பட்டனர்.
''இன்று புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 50 பேர் டில்லி இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்கள்!'' என்று மார்ச் 31-ஆம் தேதி அரசு அறிவிப்புச் செய்தது. உடனே களமிறங்கிய சங்கிகள், ''இன்றைய கரோனா நிலவரம்; தப்ளிக் 50, பப்ளிக் 7''என்று எழுதி சமூக வலைத்தளங்களில் பரப்பி மகிழ்ந்தனர். அடுத்தடுத்த நாள்களிலும் அரசு அவ்வாறே அறிவிக்க, சங்கிகளும் தங்கள் பாணியில் அந்த அறிவிப்பை தொடர்ந்தனர்.
அன்றாடம் நோய் தொற்று எண்ணிக்கையை அறிவிக்கும்போது, டில்லியில் இருந்து வந்தவர்களை அடையாளப் படுத்தியது போலவே, மற்றவர்களும் எங்கிருந்து வந்தார்கள் என்று சொல்லியிருந்தால், அரசு எல்லோருக்கும் ஒரே அளவுகோலைத் தான் கடைபிடிக்கிறது என்று கடந்து போயிருக்கலாம். ஆனால், டில்லியில் இருந்து வந்தவர்களை மட்டும் தனியே சொல்லிவிட்டு, மற்றவர்களை அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று சொல்லாமல் பொதுவாக அறிவித்ததன் மூலம், அரசின் பாரபட்ச அணுகுமுறை வெட்ட வெளிச்சமானது.
ஒரு செயல் சரியானது எனில், அது தொடக்கம் முதல் முடிவு வரை சரியாகவே அமையும். அதுவே தவறானது எனில், அதைத் தொடர முடியாமல் பாதியிலேயே தடுமாற வேண்டி வரும். அந்த வகையில், கரோனா தொற்று குறித்து அறிவிப்புச் செய்யும்போது, டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களை தனியே அடையாளப்படுத்தியது தவறு என்பதனால் தான், அரசால் அந்த வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்த முடியவில்லை. பின்னர், சுகாதாரத் துறைச் செயலாளரால் சொல்லப்பட்ட 'ஒரே தொற்று' என்ற வார்த்தையைக் கூட, தலைமைச் செயலாளரால் சொல்ல முடியவில்லை. கடைசியில், அந்த சுகாதாரத் துறை செயலாளரே கூட, ''எங்கு சென்றதால் பாதிப்பு என்பதைவிட, எத்தனை பேருக்கு பாதிப்பு என்பதுதான் முக்கியம்!'' என்றார். எனவே, இந்த அறிவிப்பு விசயத்திலும் அரசு செய்தது தவறு என்பதற்கு, அரசின் தடுமாற்றமே சாட்சியாக உள்ளது.
மேலும், வெறுப்புப் பரப்புரையால் கலவரம் நடக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கத் தெரிந்த அரசுக்கு, வெறுப்புப் பரப்புரை செய்வோரை கைது செய்ய தோன்றவில்லை. தப்லீக் அமைப்பினர் திட்டமிட்டே நோயைப் பரப்பிவிட்டனர் என்று சொல்லிய மாரிதாஸ் என்பவர் மீது, தமுமுக கொடுத்த புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகும் அவர் கைது செய்யப்படவில்லை. 'பொதுவாக நாய்கள் ஜாக்கிரதை என்பார்கள்; இப்போது பாய்கள் ஜாக்கிரதை என்கிறார்கள்!' என்று எழுதிய பா.ஜ.க.வின் கல்யாணராமன் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. தப்லீக் அமைப்பினருக்கு பயங்கரவாதத் தொடர்புகள் உண்டு என்று, எந்தச் சான்றுகளும் இன்றி அவதூறு கட்டுரை எழுதிய பத்திரிகையாளர் மாலன் மீதோ, அதை வெளியிட்ட துக்ளக் குருமூர்த்தி மீதோ, தப்லீக் அமைப்பு குறித்த பொய்யான தகவல்களை அடுக்கி தலையங்கம் தீட்டிய தினமணி வைத்தியநாதன் மீதோ எவ்வித சட்ட நடவடிக்கையும் இல்லை. ஆளுநர் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாகக் கூறி நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது அடக்குமுறையை ஏவிய அரசு, அவதூறுகள் மூலம் சமூகப் பதற்றத்தை உருவாக்கி வரும் வலதுசாரிகளை கைது செய்ய தயங்குகிறது.
டில்லி சென்று வந்ததாக அடையாளப் படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டவர்களில் உள்நாட்டைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளைச் சார்ந்தவர்களும் உண்டு. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நிறைய தப்லீக் அமைப்பினர் பள்ளிவாசல்களில் தங்கி இருந்தனர். அவர்களில் நோய்த் தொற்று இல்லாதவர்கள் மட்டும், அந்தந்த பள்ளிவாசல்களிலேயே தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர். அதற்கான அறிவிப்பையும் பள்ளிவாசல் முகப்பில் அதிகாரிகள் ஒட்டிச் சென்றதோடு, அவ்வப்போது வந்து கண்காணித்து பரிசோதித்தனர். இதில், திடீரென்று ஒருநாள், பள்ளிவாசலில் இருந்த அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சுற்றுலா விசாவில் வந்து மதப் பிரச்சாரம் செய்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என ஊடகங்களில் பரபரப்புச் செய்திகள் வந்தன. ''ஊரடங்கை மீறி பள்ளிவாசல்களில் பதுங்கி இருந்து மதப் பிரச்சாரம் செய்தார்கள் அவர்கள்!'' என்றும் கூட சில ஊடகங்கள் சொல்லின. இதுவும் பொது மக்களிடம் முஸ்லிம்கள் குறித்து எதிர்மறையான எண்ணம் வலுப்பெற வழிவகுத்தது.
அதாவது, அரசுதான் அவர்களை பள்ளிவாசல்களிலேயே தனிமைப்படுத்தி வைத்திருந்தது. அதே அரசுதான், அவர்கள் பள்ளிவாசலில் தங்கியிருந்து மதப் பிரச்சாரம் செய்ததாக கைதும் செய்கிறது. ஏன் இந்த நாடகம்?
ஊரடங்கு நேரத்தில், பள்ளிவாசல்கள் முழுக்க பூட்டப்பட்டிருக்கும் நிலையில், எங்கும் எவ்வித வழிபாடும் கிடையாது என்ற சூழலில், அப்படியே மீறி வழிபாடு நடந்தால் அங்கு தடியடி நடத்தி கலைக்கப்படுவார்கள் என்னும்போது, இவர்கள் யாரிடம் போய் மதப் பிரச்சாரம் செய்தார்கள்? பொதுவாக, சுற்றுலா விசாவில் வந்து பள்ளிவாசல்களில் தங்குவதும் வழிபாடுகளில் பங்கேற்பதும் சட்டப்படி குற்றமெனில், இந்தியா முழுவதும் உள்ள ஆசிரமங்களில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த ஆன்மீகவாதிகள் சுற்றுலா விசாவில் வந்து தங்கியுள்ளார்களே! அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா?
இந்தியாவிற்கு வெளிநாட்டினர் வருவதற்கு தடை ஏதும் இல்லாத காலத்தில், மற்ற எல்லா தரப்பினரும் வந்ததுபோல் இங்கு வந்தவர்கள்தான் தப்லீக் அமைப்பினரும். ஊரடங்கின் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டு எங்கும் நகர முடியாமல் முடக்கப்பட்டு விட்டதால், பள்ளிவாசல்களில் தங்கியிருக்கிறார்கள். அதுவும் அரசுதான் அவர்களை அங்கேயே தனிமைப்படுத்தி தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அப்படியிருக்க, பொய்யான காரணங்களைச் சொல்லி அவர்களை கைது செய்தது ஏன்? தப்லீக் அமைப்பினர் பலருக்கு கரோனா தொற்று இருந்தது என்கிற காரணத்தினாலேயே, அவர்கள் குற்றவாளிகள் ஆவார்களா? அவர்கள் அனைவருக்குமே நோய் தொற்றிவிட்டது என்று எடுத்துக் கொண்டாலும், அவர்கள் நோயாளிகள் தானே தவிர குற்றவாளிகள் அல்லவே! நோயாளிகளை குற்றவாளிகள் போல் நடத்தும் இந்த அவலம் வேறு எங்கேனும் உண்டா? கிடையாது என்பதற்கு பிரிட்டனே சான்று.
இஸ்கான் (ஹரே கிருஷ்ணா இயக்கம்) என்ற இந்துமத அமைப்பு, வெளிநாடுகளில் மிகுந்த செல்வாக்குடன் இயங்கி வருகிறது. அந்த அமைப்பைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் பிரிட்டனில் மரணமடைந்துள்ளார். அவரது இறுதிச் சடங்கு நிகழ்வு மார்ச் 12-ஆம் தேதி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்வில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், அதில் ஒருவருக்கு கரோனா தொற்று இருந்துள்ளது. பின்னர் அந்த இயக்கத்தைச் சார்ந்த 21 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 5 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்த 5 பேரில், இந்தியாவைச் சார்ந்த சாமியார் ராமேஸ்வர தாஸ் என்பவரும் ஒருவர். அவருக்கு வயது 70 என்றும், மேலும் 30 வயதுக்கு உட்பட்ட 3 பேர் இறந்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்நிகழ்வில் பங்கேற்ற 900 பேரைக் கண்டறிந்து பிரிட்டன் அரசு தனிமைப்படுத்தியுள்ளது. அவர்களின் வீடுகளில் உள்ளவர்களும் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இறுதிச் சடங்கு நிகழ்வில் பங்கேற்ற பலரும் பிரிட்டனின் பல பகுதிகளுக்கும் சென்று வந்துள்ளனர் என்பதால், பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என அந்நாட்டு மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனினும், இஸ்கான் இயக்கத்தைச் சார்ந்த யார் மீதும் பிரிட்டன் மக்கள் வெறுப்பை உமிழவில்லை. பிரிட்டனில் கரோனாவை இந்துக்கள் பரப்பிவிட்டார்கள் என்று எவரும் அவதூறு செய்யவில்லை. இஸ்கான் அமைப்பினர் எவரும் அங்கு குற்றவாளிகளாகக் கருதப்படவில்லை. ஆனால், இங்கோ நோயாளிகளை குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் அவலம் அரங்கேறுகிறது.