தமிழ்நாட்டில் கரோனா பற்றி முதன்முதலில் பேசிய பெரிய கட்சி, தி.மு.க. தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் கரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்ச் தொடக்கத்திலேயே வலியுறுத்தினர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அப்போது அதனை அலட்சியப்படுத்திய நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தனது கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்குழுக்கூட்டம் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைப்பதாக அறிவித்து, கரோனா சமூக ஒழுங்குக்கு வழி வகுத்தார்.
கொளத்தூர் தொகுதிவாசிகளுக்கும், ஊடகத்தினருக்கும் தி.மு.க. சார்பில் மருத்துவ பாதுகாப்பு கருவிகள் வழங்கப்பட்டன. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதிகளில் இதுபோல வழங்கத் தொடங்கினர். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்கிற தி.மு.க.வின் கோரிக்கையை ஆரம்பத்தில் அலட்சியப்படுத்தியது அ.தி.மு.க அரசு. பின்னர், தி.மு.க-காங்கிரஸ்-இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்தபிறகே, சட்டப்பேரவையை ஒத்திவைக்கும் முடிவினை அ.தி.மு.க. அரசு எடுத்தது.
கரோனா பரவலால், மார்ச் 22ல் கடைப்பிடிக்கப்பட்ட ஒரு நாள் ஊரடங்கினால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியை அறிந்த தி.மு.க., தனது சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தை அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலத்திற்காக வழங்குவதாக அறிவித்தது. அதன்பிறகே, 144 தடையுத்தரவை அறிவித்து, ரூ.1000 உள்ளிட்ட சிறப்புத் தொகுப்பையும் அறிவித்தது எடப்பாடி அரசு.
ஊரடங்கு என்பதாலும் அ.தி.மு.க.வுக்குள் தொடரும் அதிகாரப் போட்டியினாலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த நிலையில், தி.மு.க எம்.எல்.ஏக்கள் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அவரவர் தொகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு வாங்க வேண்டிய கருவிகளக்காக நிதி ஒதுக்கினர். தி.மு.க. எம்.பிக்களும் இதனைக் கடைப்பிடித்தனர்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தோழமைக் கட்சிகளும் வலியுறுத்தின. இந்த செய்திகள் வெளியான நிலையில்தான், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கரோனா பரவல் தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்கத் தொடங்கினார். அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி அரசியல் செய்ய முடியாது என்றார். அம்மா உணவகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அரசியல் இமேஜை உயர்த்தும் வேலைகளை மேற்கொண்டார்.
தி.மு.க.வின் மாவட்டசெயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வீடியோ காலில் பேசிய மு.க.ஸ்டாலின், அவரவர் பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ளச் செய்தார். அதுமட்டுமின்றி, தி.மு.க.வின் மருத்துவர்கள் அணி ஒருங்கிணைப்பான பணியை மேற்கொள்ளும்படி செய்தார். கரோனாவுக்கான சிகிச்சைகளே முதன்மை பெற்றுள்ள நிலையில், ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்து மற்ற நோயாளிகள் தங்களின் மாதாந்திர அல்லது வாராந்திர சிகிச்சைக்கு என்ன செய்வது என்று தவித்த நிலையில், அவர்களுக்கு தி.மு.க.வின் மருத்துவர் அணி டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா தலைமையில் ஆன்லைன் வாயிலாக சிகிச்சை முறைகளை மேற்கொண்டது.
இளைஞரணி சார்பில் தொடர்பு எண்ணை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் உதயநிதி. அதில் தொடர்பு கொண்டவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள இளைஞரணி வாயிலாக உதவிகள் அளிக்கப்பட்டன. இதில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்பட அதிகம் கவனிக்கப்படாத மக்கள் பயன் பெற்றனர். தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் பலரும் அவரவர் மாவட்டங்களில் களமிறங்கி வேலை செய்தனர். இதில் சில இடங்களில் குறைபாடுகள் இருந்தன. முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசிய ஆடியோ வைரலாக்கப்பட்டது போன்ற நெருக்கடிகள் உருவாக்கப்பட்டன.
களப்பணியைத் தொடர்ந்து மேற்கொண்டால் களங்கங்கள் சுமத்துபவர்ளால் ஒன்றும் செய்யமுடியாது என்று தி.மு.க. தலைமை தொடர்ந்து இத்தகைய பணிகளை வேகப்படுத்தியது. தி.மு.க.வின் தோழமைக் கட்சியினரும் பணிகளை மேற்கொண்டனர். எம்.பி. கனிமொழி இரவோடு இரவாக சென்னையிலிருந்து தனது தூத்துக்குடிக்கு சென்று உதவிகளை மேற்கொண்டது பெருமளவில் கவனம் பெற்றது.
இவையெல்லாம் அ.தி.மு.க.வினரை நேரடிக் களத்திற்கு வரவேண்டிய சூழலுக்குத் தள்ளியது. ஆனாலும், தி.மு.க.வும் பொதுநல அமைப்பினரும் தன்னார்வலர்களும் களத்தில் செய்யும் பணிக்கு அ.தி.மு.க.வின் பணி ஈடாகவில்லை. அதிலும், ஆளுங்கட்சியினரிடம் மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. பல ரேஷன் கடைகளில் அ.தி.மு.க.வினர் கரைவேட்டியுடன் நின்றுகொண்டு அதிகாரம் செய்தது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆளுந்தரப்பு மீது அவநம்பிக்கையும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பிற அமைப்பினர் மீது எதிர்பார்ப்பும் அடித்தட்டு மக்களிடம் உருவான நிலையில்தான், தன்னிச்சையாக யாரும் நல உதவிகள் செய்யக்கூடாது என தமிழக அரசு அறிவித்தது. இது, பேரிடர் காலத்தில் மக்களுக்கு செய்யப்படும் அநீதி என தி.மு.க தரப்பு, நீதிமன்றத்தை நாடத் தொடங்க, தனது அறிவிப்பை மாற்றி வெளியிட வேண்டிய கட்டாயத்திற்குள்ளானது எடப்பாடி அரசு.
ஊரடங்கை நீடிப்பதற்கு முன்பு, மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்யவேண்டும் என்றும், மருத்துவர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் எனவும் முதல்வருக்கு ஆலோசனை தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் கடிதம் எழுதினார். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார்” என பதில் அறிக்கை தந்தார்.
பதிலுக்குப் பதில் தந்த ஸ்டாலின், “சந்தர்ப்பாவாத அரசியலை கூவத்தூர் தொடங்கி இன்றுவரை தொடர்வது எடப்பாடிதான்” என்றும், “மக்கள் நலனுக்காக இந்த சந்தர்ப்பத்தில் பேசாமல் எந்த சந்தர்ப்பத்தில் பேசுவது?” என்றும் கேட்டார். மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர் ஓரங்கட்டப்பட்டது, தலைமைச் செயலாளரை முன்னிறுத்துவது என அ.தி.மு.க.வின் உள்அரசியலையும் வெளிப்படுத்தியதுடன், ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள்-அம்மா உணவகத்தினர் குறித்து முதலமைச்சர் முன்பு என்ன சொன்னார்-இப்போது என்ன சொல்கிறார் எனப் பலவித நிலைப்பாடுகளையும் அம்பலப்படுத்தினார்.
அமைச்சரவைக் கூட்டம் நடத்தியும் ஊரடங்கை நீட்டிக்கும் முடிவை அறிவிக்கத் தயங்கி, மத்திய அரசு சொல்கிறபடி நடப்போம் என மாநில உரிமைகளை அடகு வைக்கும் அ.தி.மு.கவை தி.மு.க. விமர்சித்தது. மாநில நலன் கருதி எதிர்க்கட்சியாக இருந்தபோதும் பிரதமரிடம், தமிழ்நாட்டுக்கான 9000 கோடி ரூபாய் நிதியை ஒதுக்க தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கோரிக்கை வைத்ததை முன்னிறுத்தியது. மருத்துவர்கள்-காவல்துறையினர்-தூய்மைப்பணியாளர்களின் தொண்டினை மதிப்பதாகவும், மக்கள் நலனுக்காக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் தி.மு.க. தெரிவித்தது.
இவையெல்லாமே கரோனா காலத்து அரசியல்தான். தி.மு.க கையாண்ட இந்த அரசியல் உத்தி, அ.தி.மு.க.வை நெருக்கடியில் தள்ளி, உடனடி முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கிவிட்டது.
முதலமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டாத நிலையில் ஏப்ரல் 15ஆம் தேதி திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்துவிட்டார் மு.க.ஸ்டாலின்.
பேரிடர் காலத்தில் அரசியல் செய்யலாமா என்பது பொதுவான கேள்வி. தேர்தல் கால வாக்கு(றுதி) அரசியலைவிட பேரிடர் கால மக்கள் நன்மைக்கான அரசியல் கட்டாயம் தேவைதான். அந்த அரசியல் தொடரவேண்டும்.