Skip to main content

கூடுதல் விலைக்கு வாங்கியது ஏன்? கரோனாவால் நடந்த மெகா ஊழல்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 24/04/2020 | Edited on 24/04/2020


கரோனா நோய்த் தொற்று விவகாரத்தில் இப்பொழுது டிரைலர்தான் வந்திருக்கிறது. மெயின் பிக்சர் இன்னும் ஆரம்பிக்கவில்லை என உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. தமிழகத்திலோ டீசரே மிரட்டலாக உள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தடுப்பிற்காக சோடியம் ஹைட்ரோ குளோரிக் என்கிற திரவத்தைத் தெளிக்க வேண்டும். இதை வாங்க கடந்த ஜனவரி மாதமே தமிழக அரசு முடிவு செய்ததாகச் சொல்கிறது. ஜனவரி மாதம் தமிழக அரசு எடுத்த முடிவின்படி சுமார் 3 லட்சம் லிட்டர் சோடியம் ஹைட்ரோ குளோரிக் திரவம் வாங்கப்பட்டது. தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்தத் திரவத்தைக் கிருமி நாசினியாகத் தண்ணீருடன் கலந்து தெளிக்கும் வேலை நடைபெற்று வருகிறது எனத் தமிழக அரசு சொல்கிறது.


 

 

kit


கரோனா நோய் தென்படும் இடங்களை 'ஹாட் ஸ்பாட்' என்று சொல்லுவார்கள்.சோடியம் ஹைட்ரோ குளோரிக் திரவத்தை சுமார் 3 லட்சம் லிட்டர்கள் வாங்கியதாகச் சொல்லும் தமிழக அரசு, இதை முழுவதுமாக கரோனா பாதித்த பகுதிகளில் பயன்படுத்திவிட்டது. இப்பொழுது தமிழகம் முழுவதும் தெளிக்கப்படுவது சோடியம் ஹைட்ரோ குளோரிக் திரவம் அல்ல. அதற்குப் பதில் வெறும் சோப்பு கலந்த தண்ணீரைத் தெளித்து ஊழல் கணக்கு காட்டுகிறார்கள் என்கிறார்கள் நேர்மையான தமிழக உள்ளாட்சித் துறை அதிகாரிகள்.

இந்த ஊழலின் அளவே பல நூறு கோடிகளைத் தாண்டும் எனவும் மதிப்பிடுகிறார்கள். இது பேரிடர் கால நிதியில் இருந்து செலவழிக்கப்படுவதால் இதற்கு ஆடிட் கணக்குள் எதுவும் பொருந்தாது. இந்த வேலைகளைச் செய்யும் அரசு அதிகாரிகள் சொல்வதுதான் கணக்கு என நடைபெற்ற ஊழலின் மொத்த பரிணாமத்தையே விளக்குகிறார்கள் நேர்மையான அதிகாரிகள்.
 

kit


 

http://onelink.to/nknapp


அடுத்தது ராபிட் கிட் எனப்படும் விரைவு சோதனைக் கருவிகளை வாங்குவதில் நடந்துள்ள முறைகேடுகள். சத்தீஸ்கர் மாநிலம் தற்பொழுது தமிழக அரசு வாங்கியுள்ள ராபிட் கிட் கருவிகளை வெறும் 337 ரூபாய்க்கு ஜி.எஸ்.டி. உடன் ஒரு சவுத் கொரியன் கம்பெனியிடம் இருந்து 75 ஆயிரம் எண்ணிக்கையில் வாங்கியதாகச் சத்தீஸ்கரின் நிதி அமைச்சர் டி.எஸ். சிங் டியோ ஏப்ரல் 17- ஆம் தேதி அறிவித்தார். நாங்கள் வாங்கியதுதான் இந்தியாவிலேயே மிக குறைந்த விலையில் ஒரு மாநில அரசு வாங்கிய ராபிட் டெஸ்டிங் கருவி என அவர் மார்தட்டியிருந்தார்.

அதேநேரம் தமிழக அரசு அதே ரேபிட் டெஸ்ட் கருவியை 600 ரூபாய்க்கு வாங்கியிருந்தது. இது ஒரு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. சத்தீஸ்கர் மாநிலம் ராபிட் டெஸ்டிங் கருவியை வாங்க ஆர்டர் கொடுத்த நேரம் வேறு. தமிழக அரசு ரேபிட் டெஸ்டிங் கருவியை வாங்க ஆர்டர் கொடுத்த நேரம் வேறு.

தமிழக அரசு கடந்த ஜனவரி 22- ஆம் தேதியே கரோனாவின் பாதிப்புகளை உணர்ந்திருந்தது. தமிழ்நாடு மருத்துவச் சேவை கழகத்தின் நிர்வாக இயக்குநரான பி.உமாநாத் என்கிற அதிகாரி, ஜனவரி 22- ஆம் தேதியே கரோனாவின் பாதிப்பு தமிழகத்திற்கு வரும் என உணர்ந்தார். அவர் அன்றைய தினம் தமிழக அரசுக்கு மாத்திரைகளை சப்ளை செய்யும் வியாபாரிகளின் கூட்டத்தை கூட்டினார். மருந்து, மாத்திரைகள் தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்களெல்லாம் சீனாவில் இருந்துதான் வர வேண்டும். இப்பொழுது இரண்டு, மூன்று மாதத்திற்கான மருந்து, மாத்திரைகள்தான் கைவசம் இருக்கிறது என பாராசிட்டமால், ஹைட்ராக்சில் குளோரோ குயின் போன்ற மாத்திரைகளை வாங்கி நிரப்பினார்.

ஜனவரி மாத இறுதியில் கேரளாவில் கரோனா வைரஸ் நோய்த் தாக்கியவுடன் ஐந்து லட்சம் மூன்று அடுக்கு மாஸ்குகள், ஐம்பதாயிரம் என்- 95 மாஸ்குகள், 40 ஆயிரம் பிபிஇ கிட்டுகள், மூன்று லட்சம் லிட்டர் கிருமி நாசினிகள் வாங்குவதற்கு ஆர்டர் செய்யப்பட்டன.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று வந்தவுடன் இதேபோல 204 கோடியே 85 லட்சத்துக்கு பொருட்களை வாங்க ஆர்டர்கள் கொடுக்கப்பட்டன. அதில் 51 கோடியே 49 லட்சத்துக்கான பொருட்கள் வந்து சேர்ந்தன. அதன்படி ஏப்ரல் 21- ஆம் தேதி நிலவரப்படி ட்ரிபுள் லேயர் மாஸ்க்குகள் 68.45 லட்சம், என்95 3.25 லட்சம், பி.பி.இ. ஆடைகள் 2.9 லட்சம், பி.சி.ஆர். சோதனைக் கருவிகள் 1.73 லட்சம் ஆகியவை அரசின் கைவசம் உள்ளது.
 

kit


இந்த நிலையில்தான் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்த கம்பெனிகளில் தமிழக அரசு ராபிட் கிட் வாங்க கடந்த ஏப்ரல் மாதம் 6- ஆம் தேதி ஆர்டர் கொடுத்தது. சத்தீஸ்கர் மாநிலம் ஏப்ரல் 14- ஆம் தேதி ஒரு டெண்டர் மூலம் தென் கொரிய கம்பெனிக்கு ஆர்டர் கொடுத்தது. தமிழக அரசு கொடுத்த ஆர்டரின் அடிப்படையில் 50 ஆயிரம் ராபிட் சோதனைக் கருவிகள் வந்திருக்கிறது. அந்த 50 ஆயிரம் சோதனைக் கருவிகளுக்கும் மத்திய அரசு விதிக்கும் சுகாதார பொருட்கள் மீதான வரி மற்றும் சுங்க வரி செலுத்தப்பட்டுள்ளது.
 


இந்தியாவிற்கு வந்த ராபிட் கிட்டுகள் அனைத்துமே சரிவர செயல்படாதவை என்பதும் தாமதமாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

அதேபோல் மத்திய அரசு ஐந்து லட்சம் ரேபிட் சோதனை செய்யும் கருவிகளை வாங்கியுள்ளது. அதற்கும் சுங்க வரி, சுகாதார வரி ஆகியவை விதிக்கப்பட்டுள்ளது. அதன் விலையும் 600, நாங்கள் வாங்கிய பொருட்களின் விலையும் 600. எனவே இதில் எந்த விதிமுறை மீறல்களும் இல்லை. தமிழக அரசும், மத்திய அரசும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சொன்ன நிறுவனங்களிடம் இருந்துதான் ரேபிட் சோதனைக் கருவிகளை அதே விலைக்கு வாங்கியுள்ளது. அதே சோதனைக் கருவிகளை ஆந்திர அரசு 730 ரூபாய்க்கு வாங்கியுள்ளது என விளக்கம் அளிக்கிறார்கள் தமிழ்நாடு மருத்துவச் சேவை கழக அதிகாரிகள். நாங்கள் கரோனாவை ஒழிப்பதற்காக முன்கூட்டியே செயல்பட்டதால் ஒரு கருவிக்கு 270 ரூபாய் அதிகமாகக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்கிறார்கள்.

கரோனா என்பது ஒரு சர்வதேச பேரிடர் என மார்ச் மாதமே உலக சுகாதார நிறுவனமும் அறிவித்துவிட்டது. அது ஒரு தேசிய பேரிடர் என இந்திய அரசும் அறிவித்துவிட்டது. இந்த நிலையில் அதைக் கட்டுப்படுத்தும் கருவிகளுக்குச் சுகாதார வரி, சுங்க வரி போன்றவற்றை மத்திய அரசு தள்ளுபடி செய்துவிட்டது. ஏப்ரல் 17- ஆம் தேதி சென்னைக்கு வந்த ரேபிட் சோதனைக் கருவிகளுக்கு ஏற்கனவே மத்திய அரசு தள்ளுபடி செய்துவிட்ட சுங்க வரியையும், சுகாதாரப் பொருட்களுக்கான வரியையும் தமிழக அரசு கட்ட வேண்டிய அவசியம் இல்லை. அப்படிக் கட்டியிருந்தாலும் கூட அதைத் தமிழக அரசு கரோனா கால சூழ்நிலையை எடுத்துச் சொல்லி மத்திய அரசிடம் இருந்து திரும்பப் பெற்றிருக்கலாம் என்கிறார்கள் நேர்மையான சுகாதாரத்துறை அதிகாரிகள்.
 

http://onelink.to/nknapp


இவையெல்லாம் தமிழக அரசு அதிகாரிகளால் ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டு பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த பொருட்களில் 30 முதல் 40 சதவிகிதம் வரை கமிஷன் பெறுவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப் பட்ட கொள்முதல்களால்தான் ஒரு கிட்டின் விலை 600 ரூபாய் என மத்திய அரசும், மாநில அரசும் ஒரே ரேட்டிலும், ஆந்திர அரசு ஒருபடி மேலே போய் 700 ரூபாய் என வாங்குவதும் நடந்திருக்கிறது என்கிறார்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள்.

மத்திய அரசு ரத்து செய்த சுங்க வரியையும், சுகாதார வரியையும் செலுத்தி 600 ரூபாய் விலைக்கு ஒரு ரேபிட் சோதனைக் கருவியை வாங்குகிறது என்றால் நம்ப முடியவில்லை என்கிறார்கள் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள். இதுதவிர தமிழக அரசு 1,33,700 பி.சி.ஆர். சோதனைக் கருவிகள், 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள், 2571 வெண்டிலேட்டர்கள், 10 ஆயிரம் மெத்தைகள் என ஏகப்பட்ட பொருட்களைத் தமிழ்நாடு மருத்துவச் சேவை கழகத்தின் மூலம் ஆர்டர் செய்துள்ளது.

இவை அனைத்திலும் 30- இல் இருந்து 40 சதவிகிதம் கமிஷன் கொள்ளையை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள் என்கிறார்கள் நேர்மையான தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள்.

படங்கள் : குமரேஷ்