Skip to main content

கழிவறையைக் காணோம்!!! ஜோக்கர் படபாணியில் ஊழல்...

Published on 28/06/2018 | Edited on 28/06/2018
toilet

 


கடந்த 2014-ம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளான அக்டோபர்02, 2019’க்குள் திறந்தவெளிக் கழிப்பிடங்களே இல்லாத நாடாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமென அறிவித்தார். இத்திட்டத்தின் மீது பல ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2016-ல் இயக்குனர் ராஜுமுருகன் ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் டாய்லெட் ஊழலை அம்பலப்படுத்தும் விதமாக ஜோக்கர் என்ற திரைப்படத்தில் கதை அமைத்திருந்தார். இத்திரைப்படம் அரசியல் மற்றும் அதிகாரிகள் செய்யும் ஊழலை வெளிச்சம் போட்டு காட்டியது. ஆனால் இப்போது இந்த மாதிரியான சம்பவம் உண்மையிலேயே நடந்திருக்கிறது. நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியத்தில் உள்ள ஆ.திருமலாபுரம் பஞ்சாயத்தில் நடந்த மிகப்பெரிய டாய்லெட் ஊழல் இப்போது ஆதாரத்தோடு வெட்ட வெளிச்சமாயிருக்கிறது.

 


ஆ.திருமலாபுரத்தைச் சேர்ந்த மதிசேகர் என்பவர் 2015 முதல் 2018ம் நிதியாண்டுவரை இந்த பஞ்சாயத்தில் கட்டி முடிக்கப்பட்ட கழிவறைகளின் எண்ணிக்கை, அதற்காக செலவிடப்பட்ட மொத்த தொகை மற்றும் பயனாளிகளின் விபரம் இவை அனைத்தையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டுள்ளார். இதற்கு வள்ளியூர் ஒன்றிய பொதுத்தகவல் அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அளித்த தகவலின்படி, இந்த பஞ்சாயத்தில் 276 கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டதாகவும், இதற்காக 33,12,000 ரூபாய் செலவிடப்பட்டதாகவும், கழிவறை கட்டுவதற்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின்(MGNREGS) கீழ் 51 நபர்களுக்கு 95,965 ரூபாய் ஊதியம் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

 

toilet

 

இத்தகவல் அறிந்தவுடன் நாம் ஆ.திருமலாபுரத்திற்கு சென்று மதிசேகரை சந்தித்து கேட்டபோது, அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆதாரத்தோடு காண்பித்தார். அப்போது அவர், இத்திட்டத்தின் மூலம் கழிவறை கட்டிய பயனாளிகளின் பட்டியலை பி.டி.ஓ-விடம் கேட்டேன், அவர் தர மறுத்து விட்டதால் RTI-ல் கேட்டேன். அதிகாரிகள் அளித்த தகவலை பரிசோதித்து பார்த்தபோது அதிர்ச்சியூட்டும் அளவில், நிர்வாகத்தில் பல இலட்ச ரூபாய் கொள்ளை நடந்தது தெரியவந்தது. என்னவென்றால் `276 பேரையும் ஆய்வு செய்ததில், எங்க ஊர்ல மட்டும் 70 பேருக்கு மேல் கழிவறை கட்டி, பணம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட பயனாளிகளிடம் கேட்டதற்கு, இதுவரை நாங்கள் யாரும் பணம் வாங்கவில்லை` என்று தெரிவித்தனர். மேலும் இறந்து போனவர்கள், சொந்த வீடே இல்லாதவர்கள், பல வருடங்களுக்கு முன்னரே ஊரைக் காலி செய்துவிட்டு வெளியூருக்கு சென்றவர்கள், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மூலம் இலவசமாக கழிப்பறையுடன் வீடு கிடைத்தவர்கள், சொந்த செலவில் கழிவறைகள் கட்டியவர்கள், ஒரே வீட்டில் இரண்டு நபர்கள் மற்றும் ஒரே நபரின் பெயர் இரண்டு முறை என்று பெயர் பட்டியலில் உள்ளது. இவர்கள் அனைவரும் கழிவறை கட்டி பணம் பெறப்பட்டது போலும் பட்டியலில் உள்ளது. எனவே இந்த சம்மந்தப்பட்ட ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே டாய்லெட் ஊழலை ஒழிக்க முடியும் என்று கோரிக்கை வைத்தார்.


 

toilet


இது குறித்து விசாரிக்கும்போது, இதே ஊரைச் சேர்ந்த ராமசுந்தரம் என்பவரின் மனைவி காந்தி என்பவர் 11.01.2014-ம் ஆண்டு இறந்துவிட்டார். ஆனால் இவரின் பெயரில் 06-12-2017-ம் தேதியன்று கழிவறைக் கட்டி, அவர் 12,000 ரூபாய் (Voucher No.149) பணம் பெற்றதாகவும் பட்டியலில் உள்ளதை கண்டுபிடித்தோம். அவருடைய மருமகள் பத்திரசெல்வம் என்பவரிடம் கேட்டபோது, எனது அத்தை 2014லேயே இறந்துட்டாங்க, ஆனா 2017ல் பணம் எடுத்துருக்காங்கனு வந்துருக்கு என்றார். அவருடைய இறப்பு சான்றிதழையும் பெற்றுக்கொண்டோம்.

 


மேலும் செல்லத்தாய் என்ற 75 வயது பாட்டியிடம் சென்று இது குறித்து கேட்டபோது, “நான் தெனமும் மோர் வித்துதாம்யா காலத்தை ஓட்டிட்டுருக்கேன், எங்க வீட்ல பாத்ரூம்லாம் கெடையாது, ஆனா என் பேர்லயும் போட்டு பணம் எடுத்ருக்காங்க” என வருத்தத்தோடு சொல்லிவிட்டு வியாபரத்திற்கு போய்விட்டார்.

 

 

 


இக்கிராமத்தின் தூய்மை இந்தியா திட்டத்தோட மோட்டிவேட்டர் திருமதி.சுடர் என்பவரிடம் பேசினோம், இந்த கழிவறையின் கதை என்ன ஆகியது என்று கேட்டதற்கு,  “2014-ல இருந்து நான்தான்  மோட்டிவேட்டரா இருக்கேன், ஆனா எந்த தப்பும் பண்ணல. எங்க ஊரோட டாய்லெட் டார்கெட் மொத்தம் 509, ஆனா இந்த 509 டாய்லெட்டும் கட்டி முடிச்சாச்சினு டிசம்பர் மாசமே ஆபிஸ்ல, திறந்த வெளியில் இங்கு யாரும் மலம் கழிக்கவில்லைனு சொல்லி ஓ.டி.எப்  ஆக்கிவிட்டுட்டாங்க. ஆனா இன்னும் எங்க ஊர்ல டாய்லெட் இல்லாம 35 வீடு இருக்கு. அப்ப ஆபீஸ்ல குடுத்த ரிப்போர்ட்தான் தப்பு. நாங்க 1000 ரூபாய் பணம் வாங்குறது உண்மைதான், அது எதுக்குனா போட்டோ எடுக்குறதுக்கு, ஜெராக்ஸ் எடுக்க, ஒர்க் ஆர்டர் எடுக்குறதுக்காகதான் வாங்குவோம். இதுவரை எங்க ஊர்ல 309 பேருக்கு டாய்லெட்க்கு பணம் வந்துருக்கு, ஆனா 276 பேருக்குதான் பணம் கொடுத்திருக்கோம்னு இப்பவும் தப்பான ரிப்போர்ட்டதான் அனுப்பிருக்காங்க. ஆபிஸ்ல வேலை பாக்குற கோ-ஆர்டினேட்டர் முருகன்தான் ஆன்லைன் ரிப்போர்ட்ட எடுத்து அனுப்பிருக்காரு. அதனால ஆபிஸ்லதான் தப்பு நடந்துருக்குனு தெள்ளத்தெளிவா சொல்றாங்க.

 

toilet

 

 

 


இந்தத் தகவலை கையெழுத்திட்டு அளித்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.அலி அவர்களை போனில் தொடர்புகொண்டு பேசினோம், அவர் கூறியது “அது என்னன்னா சார், 2013-ல கணக்கெடுத்த லிஸ்ட்ட கம்ப்யூட்டர்ல வச்சிருப்போம். திடீர்னு அவசரமா சென்னை, டெல்லி ஆபிஸ்ல இருந்து பாத்ரூம் கட்டி முடிச்சி கம்ப்லீட் ஆன லிஸ்ட்ட (MIS) அப்லோடு பண்ண சொல்லுவாங்க. அப்ப எல்லாருக்கும் சும்மா ஓ.டி.எப் போட்டு அனுப்பிருவோம். அப்படி அனுப்புன ரிப்போர்ட்டதான் சார் இங்க (RTI) அனுப்பீட்டாங்க” என்றார். அப்படினா எல்லாரோட பெயருக்கு நேரா பணம், வவுச்சர் நம்பர்லாம் போட்ருக்கே சார்னு நாம் கேட்டபோது, அதுக்கு அவர்,  “எங்க ஆபீஸ்ல உள்ள கோ-ஆர்டினேட்டர் முருகன் ஒருத்தர் இருக்காரு, அவரு இஷ்டத்துக்கு வவுச்சர் நம்பர் போட்டு வச்சிருப்பாரு,  இந்த மாதிரியான தவறுகள் தமிழ்நாடு முழுக்க நடக்கலாம் சார்னு” அசால்ட்டா சொன்னாரு. நம்ம மேலும் பேச்சுக் கொடுக்க, “அதே மாதிரி ஊர்ல உள்ள சில பேர் எனக்கு டாய்லெட் வேண்டாம், எனக்கு பதில் என் மாமன், மச்சினிச்சிக்கு கட்டி கொடுங்கனு சொல்வாங்க, என்ன பண்ண அத கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிதான் போக வேண்டியதிருக்கு. அந்த ஊர்ல சுசிலானு ஒருத்தங்கதான் பாத்ரூம் காண்ட்ரெக்ட் எடுத்து வேலை பாத்தாங்க, அவங்க அக்கவுண்ட்லயும் பணத்த போட்டு விட்ருவோம்” என்றார். அப்படி காண்ட்ரக்ட்காரர் பேர்ல பணம் போடுறது சரியானு கேட்டதற்கு, மேலதிகாரிகள் குறிப்பிட்ட தேதிக்குள்ள பாத்ரூம் கட்டி முடிக்கனும்னு ஆர்டர் போடுறாங்க, ஆனா மக்கள் பாத்ரூம் கட்ட முன் வர மாட்டேங்றாங்க, அதனாலதான் இப்படி பண்ண வேண்டியதாயிருக்குனு” பொறுப்பா சொல்லிட்டு போனை வச்சிட்டாரு.

 


மேலும் ஸ்கீம் பீ.டி.ஓ திருமதி.சுசிலா பீட்டரைத் தொடர்பு கொண்டோம், “இந்தப் பிரச்சனை நடக்கும்போது நான் இல்லை, சுப்பிரமணியன் சார்தான் இருந்தாரு. அந்த ஊர் மக்கள், கலெக்டர்கிட்ட புகார் கொடுத்ருக்காங்க விசாரணை நடந்துட்டு இருக்கு, அதைப் பத்தி உங்க கிட்ட போன்ல சொல்ல முடியாதுனு” கோபமாக போனை கட் பண்ணிட்டாங்க.

 

 

 


இந்தப் பிரச்சனை இருந்த மாதத்தில் ஸ்கீம் பி.டி.ஓவா இருந்த திரு.சுப்பிரமணியன் சார்ட்ட பேசியபோது, “அந்த ரிப்போர்ட்டதான் ஏதோ தப்பா அனுப்பிருக்காங்க போல, பணம் கொடுக்காதவங்களுக்கும், விடுபட்டவங்களுக்கும் பணத்தை கொடுக்க சொல்லி, ரெகுலர் பீ.டி.ஓ ருக்குமணி சார் எங்கிட்ட சொன்னாங்க. அதனால எப்படியும் கொடுத்ருவாங்க சார், அதனால இந்த விஷயத்த ரொம்ப பெருசு பண்ணிற வேண்டாம் பாபு, இத உங்க லெவல்லயே வச்சுக்கங்க பாபு, அத சரி பண்ணி விட்ருவோம்னு” ரொம்ப கனிவா பேசிவிட்டு போனை வச்சிட்டாரு. இதுதான் பெரிய சந்தேகத்தைக் கிளப்பியது.

 


மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, ஒவ்வொரு ஒன்றியத்திலிருந்தும் மத்திய, மாநில அரசுக்கு கொடுக்கப்படும் தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட கழிவறைகளின் எண்ணிக்கை முற்றிலும் தவறானது என்றும், இதை வைத்துக்கொண்டு கோடிக்கணக்கில் கழிவறை கட்டி இந்தியாவை தூய்மைப்படுத்திவிட்டோம் என்று மக்களை ஏமாற்றியது வெட்ட வெளிச்சமாயிருக்கிறது.

 

“ஜோக்கர் டாய்லெட்” கட்டுவதை விட்டுட்டு “ஒரிஜினல் டாய்லெட்” கட்டி கொடுங்கள். அப்போதுதான் நாடு தூய்மையாகும்.

-விநாயக்பாபு