திராவிட-இடதுசாரி சிந்தனைகளால் பின்னிப்பிணைந்தது நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி. கஜா புயலின் கோரதாண்டவத்தால் சின்னாபின்னமாகி இருக்கும் இந்தத் தொகுதி தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. அ.திமு.க. சார்பில் தாழை மா.சரவணன், தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ் மற்றும் அ.ம.மு.க. வேட்பாளராக செங்கொடியும் களமிறங்குகின்றனர். அ.தி.மு.க. வேட்பாளர் சரவணன் தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர். திடீரென்று நிறுத்தப்பட்டதால் சீனியர்களின் எதிர்ப்பு, கஜாவால் பாதிப்பில்லை என்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் பேட்டி, அதைக் கண்டித்துப் போராடிய மக்கள்மீது போடப்பட்ட வழக்கு, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகாயமார்க்கமாக விஜயம் செய்ததில் உண்டான கடுப்பு என தொடக்கமே ஏக மைனஸ்களாக இருக்கிறது சரவணனுக்கு. அவருக்கு நேரெதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செல்வராஜ், தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். மூன்று முறை எம்.பி.யாக இருந்தவர். மக்களோடு களத்தில் இறங்கி போராட்டங்களைச் சந்தித்தவர் என ஏகப்பட்ட சாதகங்களைக் கொண்டிருக்கிறார்.
சென்றமுறை இதே தொகுதியில் வெற்றிபெற்ற அ.தி.மு.க. எம்.பி. டாக்டர்.கோபால் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை என்கிற மக்களின் கோபம், சரவணனுக்கு எதிராக புதர்போல மண்டிக் கிடக்கிறது. பிரச்சாரத்திற்கு சென்றுவரும் கீழ்வேளூரைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் இதுபற்றி கேட்டபோது, “கடலில் கலந்து வீணாகும் காவிரி நீரைத்தடுக்க தடுப்பணை கட்டாதது, கிடப்பில் போடப்பட்டிருக்கும் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை பணிகள், வேதாரண்ய உப்பை சர்வதேச சந்தைக்கு எடுத்துச்செல்ல ரயில்வே வசதி, நாகை துறைமுகத்தை ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தக பயன்பாட்டிற்குக் கொண்டுவராதது என தொகுதிப்பக்கமே வராததால், எக்கச்சக்கமான பிரச்சனைகள். இப்படியிருக்க, சென்னைக்காரரான சரவணன் என்ன செய்துவிடப் போகிறார் என்ற எண்ணமே மக்கள் மத்தியில் இருக்கிறது. அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், காமராஜ் பணக்கணக்கு போடுகிறார்கள்''’என்றார் அவர்.
ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்த நாகை மக்களவை தொகுதியை, தி.மு.க. ஏ.கே.எஸ்.விஜயன் வெற்றிபெற்று கைப்பற்றினார். மூன்றுமுறை வெற்றிகண்டு ரெக்கார்ட் பிரேக்கும் செய்தார். ஆனால், சென்ற தேர்தலில் உ.பி.க்களின் உள்ளடி வேலைகள், கம்யூனிஸ்ட் கூட்டணி தனித்துப் போட்டியிட்டது என அ.தி.மு.க. டாக்டர்.கோபாலிடம் தொகுதியைப் பறிகொடுத்தார் விஜயன். “அமைச்சர் காமராஜை சுற்றிக்கொண்டு அவரின் சீடரைப் போலவே ஆகிவிட்டதால், அ.தி.மு.க.வுக்குள்ளேயே கோபால் மீது கோபம் இருக்கிறது. 2014 தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பழனிச்சாமி தனித்துநின்றே ஒன்றரை லட்சம் வாக்குகள் பெற்றார். "இந்தமுறை தி.மு.க.வோடு இணைந்திருப்பது எங்களுக்குக் கூடுதல் பலம்'’என்கிறார்கள் தோழர்கள்.
கஜா புயல் பாதிப்பின்போது பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டதால் வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, கீழ்வேளூர், முத்துப்பேட்டை போன்ற பகுதிகளுக்கு வேட்பாளரோடு செல்ல இன்னமும் தயங்குகிறார்கள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியனும், காமராஜும். ஒரேயொரு செயல்வீரர்கள் கூட்டம், முதல்வர் வந்தபோது என இரண்டேமுறை இந்தப் பகுதிகளுக்குச் சென்றிருக்கும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறையைப் பார்க்கப் போய்விட்டார். "திருவாரூரையும், நன்னிலத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று அமைச்சர் காமராஜும் கிளம்பிவிட்டார். இதனைக் கவனித்த இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்., ஓ.எஸ்.மணியனால் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயபாலை நாகை பொறுப்பாளராக நியமித்திருக்கின்றனர். "பெருசா எதிர்ப்பு இல்லாததால ஜெயபாலை வைத்து சமாளிக்கிறாங்க'’என்கிறார் அ.தி.மு.க. வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர்.
அதேசமயம், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்க வீதியில் இறங்கிப் போராடியவர் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ். இதனால், மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கும் அவருக்கு இருக்கிறது. ஆனால், அவர் தரப்பு பிரச்சாரப் பணிகளோ மிகமிக மந்தம். அ.தி.மு.க. அமைச்சர்கள் தரப்பு பணத்தால் அடித்துக் கொண்டிருக்கும் வேளையில், கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து தேர்தல் வேலைகளைச் செய்யாமல், ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தாமல் இருப்பது செல்வராஜுக்கு சரிவாகவே முடியும்.
இன்னொருபுறம், "அ.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகளை முறியடித்து வெற்றிபெறுவேன். நானும் இடதுசாரி குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். அதனால், இடதுசாரி வாக்குகள் எனக்கே கிடைக்கும். அரசியலுக்காக திருமணமே செய்யாமல் இருக்கிறேன்''’என்கிறார் அ.ம.மு.க. சார்பில் களமிறங்கியிருக்கும் செங்கொடி. இவர் சமூகப்பணி, சட்டப்பணி, அரசியல்பணி என பன்முகம் கொண்டவர். அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், காமராஜ் மீதான அதிருப்தி தனக்கே சாதகமாக இருக்கும் என்று கணக்கிட்டு வாக்கு சேகரித்து வருகிறார். இதை அறிந்திருக்கும் அமைச்சர்கள் செங்கொடி காட்டூர் கூட்டுறவு சங்கத்தில் தலைவராக இருந்தபோது ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர்.