Skip to main content

இறந்தவர்களைப் புதைக்கவும் நிலமில்லை! - பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்புகளின் அவலம்

Published on 29/10/2018 | Edited on 29/10/2018
Perumbakkam

 

 

 

சென்னையில் கூவம் நதியோரத்தில் குடிசை அமைத்து வாழ்ந்துவந்த பெருவாரியான மக்களை, ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பெயருடன் அப்புறப்படுத்தியது சென்னை உயர்நீதிமன்றம். அவர்கள் சென்னையோடு தொடர்பில் இல்லாத பெரும்பாக்கம், கண்ணகி நகர் போன்ற பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியமர்த்தப்பட்டனர். வானுயர்ந்த கட்டடங்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் அந்த மக்களுக்கு இன்றுவரை எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டும், அரசு இதுவரை கண்டுகொள்ளவில்லை. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பே சுடுகாடு அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு கூறிய மாநில மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய உத்தரவை குடிசை மாற்று வாரியம் கிடப்பில் போட்டதே அதற்கான சாட்சி.
 

சென்னையில் இருந்து கண்ணகிநகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை நோக்கி வெளியேற்றப்பட்ட மக்கள் படும் இன்னல்களைப் பற்றி தொடர்ந்து குரலெழுப்பி வரும் மக்களிசைப் பாடகரும், தண்டோரா நடுவம் அமைப்பைச் சேர்ந்தவருமான இசையரசுவிடம் பேசினேன்.
 

 

​Isai

“பெரும்பாக்கத்தில் 21,820 குடியிருப்புகள் இருக்கின்றன. 8 மாடிக் கட்டிடங்களில் வரிசைக்கு ஐந்து/ஆறு வீடுகள் என 200 ப்ளாக்குகள் இருக்கின்றன. இங்கு ‘வசித்து’வரும் மக்கள் தாங்கள் ‘வாழ்ந்து’வந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. ‘ரேஷன், ஆதார் கார்டுகள் இருப்பதால் மட்டுமே உங்களை பூர்வகுடிகளாக ஏற்கமுடியாது; நீங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள்தான். பெரும்பாக்கம் செல்லுங்கள். உங்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் ஏற்படுத்தித் தர உத்தரவிடுகிறோம்’ என்றது சென்னை உயர்நீதிமன்றம். கையோடு, ‘இந்த மக்களை பெரும்பாக்கம் குடியிருப்பில் வைத்து புகைப்படம் எடுக்கவேண்டும். அவர்கள் அங்கேயே இருப்பதை உறுதிசெய்ய தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்’ என காவல்துறைக்கு உத்தரவிட்டார் நீதிபதி வைத்தியநாதன். நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் பெரும்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து குடியமர்த்துவது எந்தவிதத்தில் நியாயம்?
 

இங்கு மருத்துவமனை, பள்ளிக்கூடம், காவல்நிலையம், நூலகம் என எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தாமல் வெறுமனே கட்டிடங்களை எழுப்பி மக்களைத் தங்க வைத்துள்ளனர். சிசிடிவி கேமராக்கள், குப்பைத்தொட்டிகள் என எதுவுமே கிடையாது. இறந்தவர்களைப் புதைக்க சுடுகாடு கூட இல்லை. இங்குள்ள பெண் குழந்தைகள் உடல்சார்ந்த மிக மோசமான தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு இளம் வயது விதவைகள் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தும் அவலத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆரம்ப சுகாதார நிலையம்கூட இல்லாததால் மழைக்காலங்களில் வரும் வியாதிகளுக்கு இந்த மக்கள் என்ன செய்வார்கள் என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் யோசிப்பதே கிடையாது.
 

 

 

இதுபோலவே கண்ணகி நகர், செம்மஞ்சேரி பிரச்சனைகள் இருந்தபோது மக்கள் ஒன்றுதிரண்டு போராடியதாலும், மீடியாக்கள் தொடர்ந்து எழுதியதாலும் குறைந்தபட்ச வசதிகள் செய்துதரப்பட்டன. அதனாலேயே பெரும்பாக்கத்தில் மக்கள் அரசியலாக ஒன்று திரள்வதை நூதனமுறையில் தடுத்துவருகிறது குடிசைமாற்று வாரியம். இங்கு குடிசைமாற்று வாரியம்தான் பிரதமர், சி.எம்., அமைச்சர்கள் எல்லாமே. அரசின் நிழலே படாததுதான் பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்புகள்” என்றார் ஆதங்கத்துடன். 
 

இதுபற்றி சோழங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், “இந்த மக்களைப் பற்றி குடிசைமாற்று வாரியம் துளியளவும் யோசிப்பதில்லை. அலட்சியமாக செயல்படுகிறது” என குற்றம்சாட்டுகிறார்.
 

 

 

முன்னதாக பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட இசையரசு, “ஐம்பது வருடங்களாக ஆக்கிரமிப்பில் வாழ்ந்துவந்த மக்கள், ஏன் நாம் சொந்த நிலம்கூட இல்லாமல் வாழ்கிறோம் என்கிற கேள்வியை சுயமாக எழுப்பிக் கொள்ளவில்லை. அவர்களின் சென்னை வாழ்க்கையான முதல்பாதியின் வரலாற்றை அவர்களுக்குப் புரியவைக்காமல், சென்னைக்கு வெளியில் இருக்கும் அவர்களது மீதிப்பாதி மோசமான வாழ்வைப் பற்றி பேசிப் பிரயோஜனமில்லை” என்றார்.
 

தமிழகத்திலேயே தனித்தீவு போல் வாழும் இம்மக்களின் அவலக்குரல் அரசுக்கு எப்போதுதான் கேட்குமோ?