Skip to main content

177 ஆண்டுகளுக்கு முன்பான தமிழகக் கோவில்; சுவடிகளால் கிடைத்த பல அரிய தகவல்கள்

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

Tamil Nadu Temple 177 years ago; A lot of rare information found by traces

 

தமிழர்களின் வரலாற்றை அறிய பயன்படுத்தக் கூடிய வரலாற்று ஆவணங்களில் மிகவும் முக்கியமானவை ஓலைச்சுவடியும் செப்புப்பட்டயமும் ஆகும். இத்தகைய ஆவணங்கள் பெருமளவில் திருக்கோயில்களில் உள்ளன. இந்த வரலாற்று ஆவணங்களை முறையாகக் கண்டறிந்து அவற்றைப் பராமரித்துப் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

 

அதற்காக, இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள திருக்கோயில்களில் இருக்கின்ற ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க “திருக்கோயில்கள்/மடங்களின் ஓலைச்சுவடிகள் பராமரிப்பு - பாதுகாப்பு – நூலாக்கத்திட்டப்பணி” என்ற ஒரு அரிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. இத்திட்டப் பணியின் முதன்மையராக இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் சி.ஹரிப்ரியா, திட்டப்பணியின் கண்காணிப்பாளராக முனைவர் ஜெ.சசிகுமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

இச்சுவடித் திட்டப்பணிக் குழுவில் 12 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இச்சுவடித் திட்டப்பணிக் குழுவினர் இதுவரை தமிழ்நாட்டில் 282 திருக்கோயில்களில் கள ஆய்வு செய்து 29 செப்புப்பட்டயங்கள், 1,80,280 சுருணை ஓலைகள், 351 இலக்கியச் சுவடிக் கட்டுகள், இரண்டு வெள்ளி ஏடு, ஒரு தங்க ஏடு கண்டறிந்துள்ளனர்.

 

இந்நிலையில் இத்திட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. தாமரைப்பாண்டியன் வழிகாட்டுதலின்படி சுவடிக் கள ஆய்வாளர்களான கோ. விஸ்வநாதன், நா. நீலகண்டன் ஆகிய இருவரும் கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்திற்குட்பட்ட சிவாயம் சிவபுரீஸ்வரர் திருக்கோயிலில் கள ஆய்வு செய்தனர். திருக்கோயிலின் இராஜகோபுரத்தின் இரண்டாவது தளத்தில் ஆய்வு செய்து பார்த்தபோது சுமார் 29,000த்திற்கும் மேற்பட்ட சுருணை ஓலை ஆவணங்கள் குவிந்து கிடப்பதைக் கண்டுபிடித்தனர்.

 

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட ஓலை ஆவணங்கள் குறித்து இச்சுவடித்திட்டப் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. தாமரைப்பாண்டியன் கூறியதாவது: தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் திருக்கோயில்களில் இருக்கின்ற அரிய ஓலைச்சுவடிகளைப் பராமரித்துப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் இருக்கின்ற 46,020 திருக்கோயில்களிலும் கள ஆய்வு செய்து கண்டறிந்து அட்டவணைப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

 

இச்சூழலில் கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகில் உள்ள சிவாயம் ஊரில் அமைந்துள்ள சிவபுரீஸ்வரர் திருக்கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் குறிப்பிடத்தக்கதாக அமைகின்றது.  இச்சுவடிகள் மிக நீண்டகாலமாகப் பராமரிக்கப்படாமல் இருந்ததால் முதலில் அவற்றைப் பராமரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கிடைத்துள்ள சுருணை ஆவண ஏடுகளில் சிவாயம் திருக்கோயில் சார்ந்த பல்வேறு வரலாற்றுச் செய்திகள் காணப்படுகின்றன.  


சுருணை ஓலை ஆவணம் என்பது இலக்கிய ஏடுகளின் அளவில் இருந்து மாறுபட்டது ஆகும். சுருணை ஏட்டின் அளவு சுமார் 100 செ.மீ. நீளம் வரை காணப்படுகின்றது. சுருணை ஆவணங்களில் சொத்து விவரம், திருக்கோயில் வரவு செலவு கணக்கு விவரம், நில குத்தகை முறைகள், திருக்கோயில் அலுவல் குறிப்புகள், நில தானங்கள், பூசை முறைகள், பண்டாரக் குறிப்புகள், வரலாற்றுச் செய்திகள் போன்ற பல்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன. 

 

தேவதாசிகளுக்கான நிலதானமும் பரிவட்டமும்: 

சிவபுரீஸ்வரர் திருக்கோயிலில் முன்பு தேவதாசிகள் இருந்துள்ளனர். இவர்கள் இறைவனுக்குத் திருப்பணி செய்து வந்துள்ளனர். திருக்கோயிலில் கச்சி, மருது, பாப்பா, குட்டி, ராமி, கருப்பி, சின்னி, கொழுந்தி, மீனாட்சி, காமாட்சி, முறைச்சி முதலிய பல தேவதாசிகள் இருந்துள்ளனர் என்று தெரிகிறது.

 

இத்தேவதாசிகளுக்கு திருக்கோயிலுக்குச் சொந்தமான 3 காணி நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தேவதாசிகள் நடனம் ஆடுகின்றபொழுது மேளம் அடிக்க தனியாக மேளக்காரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. அதோடு, தேவதாசிகளுக்குத் திருக்கோயிலில் பரிவட்டம் கட்டும் வழக்கமும் இருந்துள்ளதைச் சுருணை ஆவண ஏடுகள் வழி அறியமுடிகிறது.

 

திருக்கோயில் வரவு செலவு குறிப்புகள்:

சிவபுரீஸ்வரர் திருக்கோயிலில் அன்றாடம் நடைபெற்ற பூசைகளுக்கு சிவாய தேவஸ்தானம் கருவூலத்தில் இருந்து செலவுகள் செய்யப்பட்டுள்ளன. இத்திருக்கோயிலுக்கு கோமாளிப்பாறை, திம்மன்பட்டி, ரெற்றித்தான்பட்டி, மேல்மோடு, பெருமாபட்டி போன்ற பல ஊர்களில் இருந்து அரிசி, நெல், தேங்காய், வாழைப்பழம், உணவு பொருள்கள், மாட்டுக் கொம்பு, பணம், இளநீர், தானியங்கள், ஆநிரைகள், எண்ணெய் வித்துக்கள், ஆபரணங்கள், மரப்பொருள்கள் உள்ளிட்டவை உபயங்களாக வழங்கப்பட்டுள்ள செய்திகளும் விரிவாக சுருணை ஏடுகளில் எழுதிவைக்கப்பட்டுள்ளன. 

 

திருக்கோயில் குத்தகை முறைகள்:

திருக்கோயிலுக்குச் சொந்தமான தென்னந்தோப்பு, புளியந்தோப்பு, குளத்தங்கரை தோப்பு ஆகியவை ஏல முறையில் குத்தகை விடப்பட்டுள்ளது. இவ்வாறு குத்தகை விடப்பட்ட நிலங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற நெல், கம்பு, எள், துவரை, சோளம், வரகு, ஆமணக்கு, சாமை, பயிர் வகைகள் போன்றவற்றைக் குத்தகை வருமானமாகப் பெறப்பட்டுள்ளது. மேலும், குத்தகைப் பணங்களைச் சரியாகச் செலுத்தாத நபர்களுக்கு இருமடங்கு வரி விதிக்கப்பட்டதோடு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதுவன்றி ஆடு மாடுகள் மேய்க்க திருக்கோயில் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்ட செய்திகளும் சுருணை ஏடுகளில் காணப்படுகின்றன.  

 

ஆங்கில சர்க்காரின் உத்தரவுகள்:

கி.பி. 1846 காலகட்டங்களில் சிவாயம் சிவபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பினியார் (ஆங்கிலேயர்கள்) சர்க்காருக்குக் கீழ் இயங்கி வந்துள்ளது. அப்போது, சிவாயம் தேவஸ்தான கிராம முனிசிப்பாக முத்துவீரன்செட்டி என்பவர் இருந்துள்ளார். அவரின் மேற்பார்வையிலுள்ள கிராமங்களில் கைப்பிடிச்சுவர் இல்லாத கிணறுகளுக்குச் சுவர் அமைக்க சர்க்கார் தரப்பில் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், திருக்கோயிலுக்கு உட்பட்ட புஞ்சை நிலங்களில் சாகுபடியான பொருட்களை வசூல் செய்வதற்கும் சர்க்கார் உத்தரவு அனுப்பியுள்ளது. அதோடு சிவாயம் தேவஸ்தானம் சார்ந்த தெரு மற்றும் சரகத்திற்கு மின்கம்பம் அமைக்கவும் சர்க்கார் தரப்பிலிருந்து உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு பல அரிய குறிப்புகளும் சுருணை ஏடுகளில் காணப்படுகின்றன.

 

சிவாய தேவஸ்தானமும் நீதி விசாரணைகளும்:

சிவாயம் சிவபுரீஸ்வரர் திருக்கோயிலின் தேவஸ்தானம் பழமையானதாக இருந்துள்ளது. கி.பி. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் சிவாயம் சிவபுரீஸ்வரர் தேவஸ்தானத்துடன் இணைந்து இருந்துள்ளது. அய்யர்மலைக்கோயிலை சிவாயம் மலைக்கோயில் என்றே அழைத்து வந்துள்ளனர் என்ற குறிப்பும் சுருணை ஏடுகளில் காணப்படுகின்றன. மேலும், இதே காலகட்டத்தில் சிவாயம் கோயில் தேவஸ்தானம் ஒரு நீதிமன்றம் போல் செயல்பட்டு வந்துள்ளது.  அங்கு பல்வேறு வழக்குகள் சர்க்கார் சார்பில் விசாரிக்கப்பட்டுள்ளன.  

 

சிவாயம் தேவஸ்தானத்தில் ஸ்தானிகராகப் பணிபுரிந்த வீரபத்திரன் பிள்ளை என்பவர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் பற்றி தேவஸ்தானம் விசாரணை நடத்தியுள்ளது. அதுபோல, அப்புவய்யன் என்ற பணியாளர் குளித்தலை பெருமாள் கோயில், கடம்பர் கோயில், ஈஸ்வரன் கோயில், இராஜேந்திரன் கோயில், கிருஷ்ணராயபுரம் கோயில், மகாதாதனபுரம் கோயில், சேரகல் கோயில், சூரியனூர் கோயில், ஆண்டார் திருமலைக் கோயில் ஆகிய கோயில்களில் பணி செய்துள்ளாரா என்று விசாரித்து, பணிபுரிந்திருந்தால் அவருக்கு மூன்று மாதம் சம்பளம் வழங்குவது குறித்து விசாரணை செய்யப்பட்ட செய்தியும் சுருணை ஏடுகளில் காணப்படுகின்றன.

 

இவ்வாறு சிறிய அளவில் சுருணை ஏடுகளை ஆய்வு செய்தபோது பல அரிய செய்திகள் இருப்பதை அறியமுடிந்தது. மேலும், இக்கோயிலிலுள்ள சுருணை ஏடுகள் அனைத்தையும் முழுமையாகப் பிரதி செய்து ஆய்வு செய்தால் சிவாயம் கோயில் சார்ந்த பல வரலாற்றுச் செய்திகள் வெளிப்படும் என்று அவர் தெரிவித்தார். அதோடு, தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் பிற இடங்களிலும் பாதுகாக்கப்பட்டு வரும் பல இலட்சம் சுருணை ஆவண ஏடுகளைப் பதிப்பிக்க பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.