Skip to main content

என்னது, இதெல்லாம் பார்டரா... வித்தியாசமான எல்லைகள், விளையாடும் மக்கள்!

Published on 15/03/2018 | Edited on 16/03/2018

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில்  இருக்கும் பரபரப்பான எல்லையை பாத்துருப்பீங்க, இந்தியாவுக்கும் சீனாவுக்குமான சிடு, சிடு எல்லையை பார்த்திருப்பீங்க, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கோட்டை தாண்டினா சுட்டு தள்ளுற கடல் எல்லையை பார்த்திருப்பீங்க... ஆனா ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையில் இருக்கும் எல்லைகளில், வாலிபால் விளையாடுற எல்லையை பாத்திருக்கீங்களா, ஒரு காஃபி ஷாப்ல ரெண்டு நாடுகளோட எல்லைகள் சந்திக்கிறதை பார்த்திருக்கிறீங்களா?  இந்த கட்டுரையில் பார்ப்பீங்க...    

 

borders

 

நாடுகளுக்கிடையேயான எல்லைகள் என்றாலே பொது மக்கள் நடமாட்டம் அதிகமில்லாமல், ராணுவ வீரர்கள் நிறைந்து பரபரப்பாக, தீவிர கண்காணிப்புடன் இருப்பதையே பார்த்திருப்போம். ஆனால் நாம் இங்கு காணப்போகும் நாட்டின் எல்லைகளோ மிகவும் வித்தியாசமானவை.

 

borders

 

பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கிடையேயான எல்லைக் கோடு ஒரு தேநீர் விடுதியின் நடுவே செல்கிறது. இதனால் ஒருநாட்டின் வழியே  உள்ளே சென்றால் இன்னொரு நாட்டின் வழியே வெளியே வரலாம். இதனாலேயே இந்த விடுதி பிரபலமானது. ஒரு குறிப்பிட்ட தூரம் வரை இருநாடுகளுக்கு இடையேயும் பயணிக்கலாம். (டீயை ஒரு நாட்டில் வாங்கிவிட்டு இன்னொரு நாட்டில் உட்கார்ந்து குடிக்கலாம்)

 

borders

 

அர்ஜென்டினா - பராகுவே - பிரேசில்.. இந்த நாடுகளுக்கிடையே ஒரு நதி மட்டும் பாய்கிறது. இது இயற்கையாகவே அமைந்த எல்லையாக உள்ளது. இந்த நதியின் பெயர் பரானா. (நதி பிரச்சனை மாநிலங்களுக்கிடையேயே தலைவிரித்தாடுகிறது. இவர்கள் எப்படி பிரித்துக்கொள்வார்களோ?!)

 

borders

 

அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கிடையே போடப்பட்டுள்ள எல்லைக் கோடு அங்குள்ள வீடு, கடை என அனைத்தையும் பிரித்திருக்கிறது. ஒரே வீட்டில் இரண்டு நாடுகளில் அங்குள்ள மக்கள் வசிக்கிறார்கள். (சமையலறை ஒருநாட்டில், படுக்கையறை ஒரு நாட்டில்... எவ்வளவு அற்புதமான வீடு பாத்தீர்களா?) 

 

borders

 

அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கிடையே முன்பிருந்தே பகை இருப்பதால் அங்குள்ள எல்லைகள் எப்போதும் பலத்த கண்காணிப்புடனேயே இருக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இருநாட்டு மக்களும் பகையை மறந்து எல்லைக் கம்பியை மையமாக வைத்து வாலிபால் விளையாடுவார்கள். இதில் என்ன சுவாரசியம் என்றால் அந்த வேலியில் எப்போதும் மின்சாரம் பாய்ந்துகொண்டே இருக்கும். (நாடு விட்டு நாடு குறிவச்சு அடிப்பேன்டா என்று சிங்கம் சூர்யா போல பன்ச் பேசினாலும் பேசுவார்கள்)

 

borders

 

நார்வே மற்றும் சுவீடன் உலகிலேயே மிக அழகான எல்லைப் பகுதியாகும். ஏனெனில் இங்கு கம்பியோ, வேலியோ இதுபோன்ற எதுவும் கிடையாது. அங்கிருக்கும் அடர்ந்த மரங்களுக்கு நடுவே ஒரு நேர்கோட்டில் மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டிருக்கும். இதுவே அங்குள்ள எல்லை. மேலும் இங்கு கடுமையான பனிப்பொழிவு இருக்கும். ஐரோப்பாவின் எல்லைகளிலேயே இதுதான் மிகவும் வித்தியாசமானது.

 

borders

 

போலந்து மற்றும் உக்ரைன் இந்த நாடுகளுக்கிடையே ஒரு சாலை மட்டுமே எல்லையாக உள்ளது. சாலைக்கு இரண்டு பக்கமும் உள்ள வயல்வெளியில் செடிகளை வைத்து  மீன் போன்ற தோற்றம் உருவாக்கபட்டுள்ளது. மீன்களின் நடுவேதான் இந்த எல்லை உள்ளது. இது நட்புறவை  குறிக்கும்.

 

borders

 

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் (last but not least)... ஸ்பெய்ன் மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கிடையேயான எல்லைதான் மிகவும் சுவாரசியமானது. இந்த இரு நாடுகளுக்கும் இடையே ஒரு நதி பாய்கிறது. இதைக்கடக்க ஒரே வழி ஜிப் வயர் (zip wire) மட்டுமே. அதாவது, கயிற்றில் தொங்கியபடி கடப்பது மட்டுமே. ஸ்பெய்ன் மலையிலிருந்து கீழேயிருக்கும் போர்ச்சுகல்லுக்கு செல்ல முடியும். இதற்கு 12 டாலர் கட்டணமும் பாஸ்போர்ட்டும் இருந்தால் மட்டும் போதும், ஒரு நிமிடத்தில் சென்றுவிடலாம். போர்ச்சுகல்லில் இருந்து ஸ்பெயின் வர படகு போக்குவரத்து உள்ளது. (சர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு போய்ட்டு வந்தரலாம் போல)  

எல்லையற்ற பிரபஞ்சத்தில் எல்லைக்குள் வாழும் மனிதன், எல்லையற்ற அறிவை எல்லை தாக்குதலுக்கு பயன்படுத்துகிறான். யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்பதை ஆறறிவு மனிதன் மனிதன் மறந்து பலகாலம் ஆகிவிட்டது போல...