அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. நேற்று பாமக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் சௌமியா அன்புமணி மற்றும் பாமகவினர் பலர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் அம்பத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், ''பொள்ளாச்சியில் வன்முறையில் ஈடுபட்ட அந்த சார் யார் என்று இன்று உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இங்குமாத்திரம் ஈடுபட்ட குற்றவாளியை உடனுக்குடன் கைது செய்து முதல்கட்ட நிவாரணமாக அந்த குற்றவாளி கட்டுடன் நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீதி முன் நிறுத்தப்பட்டு நிச்சயமாக தண்டிக்கப்படுவார். நேற்றைய தினம் நீதிமன்றத்தினுடைய தீர்ப்பு ஒரு பெரிய வரவேற்பு மிக்க தீர்ப்பு. அனைவரும் இந்த பிரச்சனையை ஊதி ஊதி பெரிதாகுகிறார்கள் என்பதை அனைத்து மக்கள் மனதிலும் கல்வெட்டாக பதிந்து விட்டது. ஆகவே இதோடு எடப்பாடி பழனிசாமி நிறுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும்.
இல்லையென்றால் அவரை நோக்கி மக்கள் போராடுகின்ற சூழல் உருவாகிவிடும் என்பதை இந்த சூழ்நிலையில் சொல்ல விரும்புகிறேன். நாங்கள் எங்கு போராட்டத்தை ஒடுக்குகிறோம். எந்த போராட்டமாக இருந்தாலும் அந்த போராட்டத்தை நோக்கம் என்னவென்றால் போராட்டம் குறித்த கவனத்தையும் அரசின் கவனத்தையும் ஈர்ப்பது தான் ஒரு போராட்டத்தினுடைய நோக்கம். இவர்கள் கையில் எடுத்திருக்கும் போராட்டத்தை பொறுத்த அளவில் குற்றவாளி கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஜாமீனில் வெளிவர முடியாத கடுமையான குற்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது பயன்படுத்தப்படும் சட்ட நடவடிக்கை பயன்படுத்தி கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
இப்படி நாள்தோறும் போராட்டம் என்று வீதிக்கு வருகின்ற பொழுது தங்களுடைய சுய விளம்பரத்திற்காக அப்படி செய்கின்ற போராட்டங்களை பாதிக்கப்பட்ட மக்களுடைய நிலையைச் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். தினந்தோறும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. காலையில் பள்ளிக்கு செல்வர்கள் சொல்ல முடியவில்லை; பணிக்கு செல்பவர்கள் நேரத்திற்கு செல்ல முடியவில்லை; விமான நிலையத்திற்கு, ரயில் நிலையத்திற்கு, பேருந்து நிலையத்திற்கு செல்பவர்கள் செல்ல முடியவில்லை, மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்கள் நேரத்திற்கு செல்ல முடியவில்லை. போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து விடுவித்து விடுகிறார்கள். இந்த விதமான அடக்கு முறையும் இல்லை'' என்றார்.