Skip to main content

தமிழர்களின் ஆதி இசை பறை! பறை இசைக் கலைஞன் மு.பிராபகரனுடன் ஒரு நேர்காணல்!

Published on 20/07/2018 | Edited on 20/07/2018
Prabhakaran


மௌனத்தைப் போலவே இசையும் ஓர் அமைதிக்கான பாதை தான். இதனால் தான் இந்திய திருத்தலங்கள் இசையோடு ஆய்ந்து இருக்கின்றன.  
 

பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள ‘’பறை’’ ஓர் இசைக் கருவி மட்டுமல்ல... தொல்குடி தமிழ்ச் சமூகத்தின் சொத்து என்றும்,  உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம்.. என தெருக்களிலும், பள்ளி,  கல்லூரிகளிலும், சமூகப் பொதுக் கூட்டங்களிலும், கிராமப்புற மக்களிடையேயும் இந்த ‘’பறை’’ இசையைக் கொண்டு செல்லும் முயற்சியில் தீவிரத்துடன் செயல் பட்டு வரும்’’விடியல் அறக்கட்டளை’’யின் இயக்குனரான கோவையைச் சேர்ந்த ‘’பறை’’ இசைக் கலைஞன் மு.பிரபாகரனுடன் ஒரு நேர்காணல் செய்தோம்.
 

நக்கீரன்: இந்திய திருத்தலங்களின் கடவுள்கள் இசையோடு (இசைக் கருவிகளோடு) நின்று இருப்பதை எப்படி உணர்கிறீர்கள்? 
 

பிரபாகரன்: ஆமாம். தெய்வங்கள் இசைக் கருவிகள் சுமந்து நிற்பதற்கு இசையின் தத்துவமும் மேலாண்மையையுமே காரணமாக இருக்கிறது.
 

சிவன் கையில் மருகம், பிரம்மா கையில் தாளம், வாரசி கையில் சங்கு, சரஸ்வதி கையில் வீணை, நாரதர் கையில் தம்புரா, நித்தியின் கையில் மத்தளம் என தெய்வங்கள் இசையை தூக்கிப் பிடித்திருப்பதை காணும் போது உண்டாகும் இன்பம் அலாதியானது.
 

 

 

நக்கீரன்:  ஐந்திணை நிலங்கள் இசையை எவ்வாறு பொருத்திக் கொண்டன?
 

பிரபாகரன்: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப்படும் ஐந்திணை நிலங்களுக்கும் தனித்துவமான இசையும், இசைக்கருவிகளும் இருந்ததை தொல்காப்பியம் சுட்டிக்காட்டுகிறது. சிலப்பதிகாரம் நூற்றுக்கும் மேற்பட்ட இசைப் பண்களை குறிப்பிடுகிறது .இந்த இசைப் பண்கள்தான் உலகெங்கும் இசையை இயக்குகிறது 
 

அதிலும் ‘’பறை’’ இசைக் கருவி மட்டுமல்லாது ஐந்திணை நிலத்தின் அடையாளமாகவும், நிலத்து மக்களின் அடையாளமாகவும், அம்மக்களின் செய்யும் தொழில் பயன்படும் கருவியாகவும் இருந்து வருகிறது.
 

குறிஞ்சியில் தொண்டகச் சிறுபறை, முல்லையில் ஏறுங்கோட்பறை, மருதத்தில் தண்ணும்மை, நெய்தலில் மீன் கோட்பறை, பாலையில் ஆறெறி பறை என்ற வரையறை பொருத்தமாக உள்ளது.
 

நக்கீரன்: இலக்கியத்திலும், வாழ்வியலிலும் ‘’பறை’’யின் பங்களிப்பு குறித்து?  
 

பிரபாகரன்: ‘’பேசுவதை இசைக்கவல்ல தாளக்கருவி’’ பறை எனப்பட்டது. போரில் அடைந்த வெற்றியை பறையால் சாற்றியதை ‘’இசைப் பறையொடு வென்றி நுவல’’என்று புறநானூறு கூறுகிறது.
 

திட்டைப் பறை, தொண்டகச் சிறுபறை, தொண்டகப் பறை, அரிப்பறை, மண்றோல் சிறுபறை, மென்பறை, இன்னிசைப்பறை, பொருநர் பறை, ஆடுகளப் பறை என சங்க இலக்கியங்களில் பல்வேறு பெயர்களில் ‘’பறை’’ குறிப்பிடப்படுகிறது.
 

உலகப் பொதுமறையாம் திருக்குறளில் ‘’அறைபறை யன்னர் கயவர்’’ என்றும், ‘’எம்போல் அறைபறை கண்ணாரகத்து’’ என்றும், ‘’அறைபறை நின்று மோதிட’’ என்ற இடங்களிலும் பறை ஓங்கி ஒலிக்கிறது.
 

 

 

வாழ்வியலில்... பண்டைய அரசர் காலத்தில் அரசரின் அறிவிப்புகளை முரசு அறைந்து அல்லது பறை அடித்து  மக்களுக்கு சொல்வது வழக்கமாக இருந்தது. பெருகி வரும் தண்ணீரை அடைக்க, உழவர் மக்களை அழைக்க, போருக்கு எழுமாறு வீரர்களை அழைக்க, உழவு செய்வோருக்கு ஊக்கமளிக்க, விதைப்பதற்கும், அறுவடை செய்வதற்கும், விலங்குகளை விரட்டுவதற்கும், நாட்டின் செய்தியினை மக்களுக்கு தெரிவிக்கவும், இயற்கை வழிபாடு, விழாக்கள் நடத்துவதற்கும் என மக்களின் வாழ்வியலோடு இணைந்தே வந்திருக்கிறது இந்தப் ‘’பறை’’.
 

தமிழ் நாட்டில் பல இடங்களில் முரசு மண்டபம் அமைத்து செய்தி அறிவிக்கும் முறை இருந்துள்ளது. பறை பிறத் தாளக் கருவிகளுக்கு அடிப்படையாக அமைந்தது என்பதை காலப்போக்கில் தமிழர்கள் அறியாமல் இப்பறையின் மூலம் வளர்ச்சிப் பெற்ற பிறத் தாள இசைக் கருவிகளுக்கு முக்கியத்துவம் அளித்து விட்டது ஆகப் பெரிய வருத்தம் தான். 
 

‘’பறை’’ அனைத்து சமூக மக்களையும் ஒன்றிணைக்கும் பெருங் கருவியாக இருந்தது. ஆனால் நம்முடைய அடையாளங்களில் மண்ணில் புதைப்பதற்கு சமமாக பறை இசையை புறக்கணித்து விட்டோம் என்பது இசைக்கான சாபக் கேடுதான்.
 

நக்கீரன்: இந்தியாவின் பிற மாநிலங்களில் ‘’பறை’’ மக்களிடையே பயன்படுத்தப் படுகிறதா? 
 

பிரபாகரன்: நான் முன்பே சொல்லியது போல பறை இல்லாத இசையை யாரும் செய்து விட முடியாது. பிற மாநிலங்களில் மக்களிடையே பறை வெவ்வேறு வடிவங்களில், பெயர்களில் பயன் படுத்தப்படுகின்றன.
 

ஆந்திராவில் ‘’ரோன்ஸ்’’, ‘’டோல்’’, ‘’புர்ர’’, ‘’சூரியப்பறை’’ , ‘’சந்திரப்பறை’’ என்ற பறை வகைகள் உள்ளன. அந்த ‘’ரோன்ஸ்’’ என்ற பறை செங்குத்தலான வடிவில் பயன்படுத்தப்படுகிறது. 
 

கர்நாடகத்தில் பழங்குடிகள் ‘’டாபா ‘’ என்ற பறை வகையை பயன்படுத்துகின்றனர். நாம் இங்கே பயன்படுத்தப்படும் ‘’தப்பட்டை’’ என்ற பறையைப் போலவே  ‘’ஹாலிகே’’ என்ற பறை கர்நாடகத்தில் இசைப் படுகிறது.
 

கேரளாவில் ‘’செண்டை’’, ‘’ துடி’’, ‘’இடக்கா’’ என்ற பறை வகைகள் நாட்டுப்புற இசை நடனங்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
 

ராஜஸ்தானில் ‘’கேரோ’’, ‘’நிஸ்ஸான்’’ ,’’பாபுஜிகிமாதே’’ என்ற பறை வகைகள் உள்ளளன.
 

காஷ்மீரில் பெரிய கூம்பு வடிவிலான ‘’தும்பத்னாரி’’ என்ற  பறையும், கோவாவில் உடும்பு தோலால் ஆனா ‘’குமட’’ என்ற பறையும், அஸ்ஸாமில் ‘’கர்ரம்’’ என்ற ‘’மரப்பறை’’யும் பயன்படுத்தப் படுகிறது.
 

வங்காளத்தில் ‘’ஸ்ரீகோல்’’ , ஒரிசாவில் ‘’செங்கு’’, மணிப்பூரில் ‘’புல்’’ என்ற ‘’பறை’’ வகைகளையும் மக்கள் இசைத்து வருகின்றனர்.
 

இன்னும் சொல்லப் போனால் இந்தியாவில் உள்ள சுமார் 427 பழங்குடியினக் குழுக்களில் 63 விழுக்காடு மக்கள் தங்களின் வாழ்க்கையில் ஆடல், பாடல், செய்தித் தொடர்பு போன்றவற்றிற்கு ‘’பறை’’யைப் பயன்படுத்துகின்றனர்.
 

நக்கீரன்: ஒரு காலத்தில் முக்கியப்பட்டதாய் இருந்த பறை இசை தற்போது பின் தங்கிவிட்ட நிலையில் பறை இசை மீண்டும் அதன் உச்சத்தை எட்டுமென நீங்கள் நினைக்கிறீர்களா? 
 

பிரபாகரன்: மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்து இருந்த பறை இசை தற்போது பின் தங்கி விட்டது என்பது உண்மைதான். அது மீண்டும் உச்சம் பெரும் என்பதற்கு உதாரண மனிதராக இருப்பது பறை இசைக் கலைஞர் கத்தார் தான். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குரலாக இயங்கி வரும் கத்தார் பறைமுழக்கம் விடுதலை சிந்தனை பரப்பி வருவது பறை இசை வரலாற்றில் ஒரு மைல்கல்.
 

 

 

தமிழர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் நுண்கலைகளைப் பிரிந்து எங்கோ ஓர் உலகுக்குள் சென்று விட்டார்கள். அவர்களை பறை இசையின் மூலம் மீண்டும் அவர்களை மீது வந்து இசைக்குடிகளாக மாற்ற வேண்டும், பறை இசை இழந்த தன் உச்சத்தை தொட வேண்டும் என்ற நோக்கோடுதான் என் போன்ற பறை இசை கலைஞர்கள் இப்போது தீவிரப்படுகிறார்கள்.
 

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னது போல...
 

‘’இன்னும் செல்லாது பிறர் செய்யும் சூழ்ச்சிகள்
என்று சொல்லி புயம் தட்டு –அட 
யானையின் மேல் வள்ளுவா சென்று நீ பறை 
கொட்டு கொட்டு கொட்டு.’’ – என்பதையும், 
அவரோட கண்மணித் திரளில்..
‘’நான்கு கோடி தமிழர் பட்டாளம் நாட்டை மீட்க கிளம்பிற்றுக் கண்டால்
தீங்கு செய்யும் வடவறின் ஆட்டம் செல்லாது என்று கொட்டு வெற்றிப்பறை.’’ -
என்பதுதான் எங்களின் முழக்கமாக இருக்கிறது’’ .
 

நக்கீரன்: சில காலங்களுக்கு முன்னால் பொதுவாக ‘’பறை இசை’’ என்பது சாதிய முத்திரையோடு பார்க்கப்பட்டது. இப்போது அதன் பார்வை மாறியிருக்கிறதா? 
 

பிரபாகரன்: ஆமாம். பறை என்பது தலித்களின் இசையாகவே பார்க்கப்பட்டது என்பது உண்மைதான். ஆனால் முற்றிலுமாக இல்லையென்றாலும் இப்போது அது மாறிக் கொண்டு வருகிறது. சாவுக்கு மட்டுமே அடிக்கப்படும் இசைதான் பறை என இருந்தது. இப்போது அவை மாறி, கல்யாணம், கல்லூரி விழாக்கள், அரசுப் பள்ளி விழாக்கள் என இப்போது பறை ஓசை கேட்கிறது. பறையடிக்கப்படும் போது பணக்காரர்களின் கால்கள் மெல்ல ஆடத் துவங்கியிருக்கிறது. 
 

 

 

பள்ளி, கல்லூரிகளின் அனைத்து சமுதாய மாணவர்களும் பறையடிக்க ஆர்வங்கொண்டு பயிற்சி எடுப்பதின் மூலம் பறை மேலான பார்வைக்கு வேறொரு கண்ணாடி போடப்படுகிறது. ஆனாலும் சில இடங்களில் அக்கண்ணாடியில் பசித்த வயிற்களோடு பரிதாபமாய் நிற்கும் மனிதர்கள் தெரிவதுதான் காலக் கொடுமை.

 

தன்னார்வ ஆர்வலரும், பறை இசைக்  கலைஞருமான ‘’பறை’’ இசைக் கலைஞர் மு.பிரபாகரனைப் பற்றி...
 

இலங்கையில் பிறந்தவர் இவர். 1980-ல் போடப்பட்ட சாஸ்திரி –ஸ்ரீமாவோ ஒப்பந்தப்படி பிராபகரனின் பெற்றோர் மலையகத் தோட்டத் தொழிலாளர்களாக இந்தியாவிற்கு இவரை கைக் குழந்தையாக தூக்கி வந்தனர். நீலகிரியில் குடியேறிய இவரின் பள்ளி, கல்லூரிக் காலங்கள் நீலகிரியிலேயே இருந்தன. தற்போது மனைவி, இரண்டு குழந்தைகளோடு கோவையில் உள்ளார்.