Skip to main content

ஒரு கோயில் ஓஹோ வாழ்க்கை – ஒரு ஊரின் கிடுகிடு வளர்ச்சி

Published on 16/06/2018 | Edited on 20/06/2018

ஒரு தொழிற்சாலை ஒரு ஊரை வளர்ச்சி பெறச் செய்தது என கேள்விப்பட்டிருப்போம், ஒரு சாலை ஒரு ஊரை வளர்ச்சி பெற வைக்கும் என்றும் கேள்விப்பட்டதுண்டு. ஒரு சின்னஞ்சிறு கோயில் ஒரு கிராமத்தை வளர்ச்சி பெறவைக்குமா என்று யோசித்தால் வைக்கும் என்பதற்கு அடையாளமாக உள்ளது அந்த கிராமம். 
 

temple tower



விழுப்புரம் மாவட்டம், கிராமங்கள் நிறைந்த மாவட்டம். மாவட்டத்தின் வடமேற்கே திருவண்ணாமலை – விழுப்புரம் மாவட்ட எல்லைக்கு அருகில் உள்ள கிராமம் மேல்மலையனூர். 15 ஆண்டுகளுக்கு முன்புவரை அந்த கிராமம் வெகு சாதாரண கிராமமாகத்தான் இருந்தது. விவசாயம்தான் இந்த கிராமத்தின் அடிநாதமே. விவசாயம், விவசாயம் இதைத் தவிர அந்த கிராம மக்களுக்கு எதுவும் தெரியாது.

அந்த கிராம மக்கள் வணங்கிய அங்காளபரமேஸ்வரி கோயிலும் சாதாரணமாகத்தான் இருந்தது. அந்த அம்மன் பல கிராம மக்களின் குலதெய்வ கோயில் என்பதால் பலரும் வந்து வணங்கிச் செல்வார்கள். அந்த கிராமங்களை சேர்ந்தவர்கள், வேலைக்காக வெளியூர்களுக்குச் சென்று குடும்பத்தாருடன் இடம்பெயர்ந்தவர்கள் என பலரும் ஆண்டுக்கு ஒரு முறை இக்கோயிலுக்கு வந்து செல்வார்கள். அப்படித்தான் இந்த கோயில் பிரபலமானது.

 

 


அதன்பின் அக்கோயிலை நிர்வகித்து வந்த குறிப்பிட்ட சமுதாயத்தினர் ஒவ்வொரு மாதமும் அம்மாவசையன்று ஊஞ்சல் உற்சவம் நடத்தத் துவங்கினர். அந்த ஊஞ்சல் உற்சவம் வெகுவேகமாக பிரபலமடைந்தது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு அந்த கோயில் சென்றது. அதன்பின் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் மேல்மலையனூர் வந்து குவியத் துவங்கினர். அதோடு, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் பக்தர்கள் வருகை தரத்துவங்கினர். வருபவர்களில் 80 சதவிதம் பெண் பக்தர்கள்.

  temple front



பக்தர்கள் வருகை அதிகமாக, சாதாரணமாக அடிப்படை வளர்ச்சியே பூர்த்தியாகாத, விவசாயத்தையே நம்பிய கிராமமாக இருந்த மேல்மலையனூர், தற்போது வளர்ந்த கிராமமாக உள்ளது. அந்த கிராமத்தில் இருந்து சென்னை, பெங்களூரு உட்பட பெரும் மாநகரங்களுக்கு நேரடி பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதிக பக்தர்கள் வருவதால் வங்கி, தனியார் தங்கும் விடுதிகள் அதிகரித்துள்ளன. கோயிலைச் சுற்றி 300க்கும் அதிகமான கடைகள் உருவாகியுள்ளன.

 

 


தற்போது மாதந்தோறும் அமாவசையன்று சராசரியாக 3 லட்சம் பக்தர்கள் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு வரும் பக்தர்களை நம்பியே அனைத்து வியாபாரங்களும் நடைபெறுகின்றன. மாதம் 50 லட்சத்துக்கும் குறையாமல் வருமானம் வந்தாலும் கோயில் நிர்வாகம் ஊருக்கென எதுவும் செய்யவில்லை. கோயிலை சுற்றியுள்ள அசுத்தங்களை, குப்பைகளை அப்புறப்படுத்துவதில் கூட கவனம் செலுத்தவில்லை என்பதை அங்கு நாம் சென்றபோது அறியமுடிந்தது.

  melmalaiyanur



மேல்மலையனூரை விட மக்கள் தொகையில் பெரிய ஊரான அவலூர்பேட்டை இருந்தாலும் அதற்கு பதில் மேல்மலையனூர் பிரபலமானதால் அந்த ஊரைத் தலைநகராக கொண்டு மேல்மலையனூர் தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இன்னும் பல வசதிகள் அந்த கிராமத்தை நோக்கி வரவுள்ளன. என்னதான் பக்தர்களை நம்பி கடைகள் இந்த கிராமத்தில் அதிகரித்திருந்தாலும் மக்கள் இன்றும் விவசாயத்தை கைவிடாமல் உள்ளனர் என்பது மகிழ்வாக இருந்தது. இதே ரீதியில் வளர்ந்த மேல்மருவத்தூர் வரிசையில் மேல்மலையனூரும் சேர்கிறது, என்றாலும் வளர்ச்சி வேகம் அதிகமாக இருக்கிறது.