Skip to main content

நிபந்தனை வைத்த இ.பி.எஸ்... சரணடைந்த ஓ.பி.எஸ்.! - சசிகலா பராக்! 

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

ddd

 

ரஜினியின் அரசியல் துறவு அறிவிப்புக்குப் பிறகு அடுத்த ஆப்ஷனாக சசிகலாவை கையில் எடுத்திருக்கிறது பா.ஜ.க. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு குடைச்சல் கொடுத்த அதிகாரி ரூபா, கர்நாடகத்தின் உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ரூபா உள்துறைச் செயலாளராக இருந்தால் சசிகலாவின் விடுதலையை எதிர்ப்பார் எனச் சொல்லப்பட்டது. அந்த ரூபாவை உள்துறைச் செயலாளர் பதவியிலிருந்து, கைவினைப் பொருட்கள் உற்பத்தி துறைக்கு மாற்றியிருக்கிறது எடியூரப்பா தலைமையிலான கர்நாடக பா.ஜ.க. அரசு.


 
"சசிகலாவின் விடுதலைக்கும் ரூபாவின் மாற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை மாற்றியது ஒரு சாதாரண மாற்றம்தான். ரூபா தேவையில்லாமல் சில நடவடிக்கைகளை ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொண்டார். அவரை உள்துறைச் செயலாளர் பதவியில் வைத்திருந்தால் ஆபத்து என ஐ.பி.எஸ் அதிகாரிகள் போர்க்கொடி தூக்கினார்கள். அதனால்தான் அவர் மாற்றப்பட்டார் எனச் சொல்லப்பட்டாலும், ரூபாவின் மாற்றம் சசிகலாவுக்காகச் செய்யப்பட்டது'' என்கிறார்கள் கர்நாடக அரசு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

 

கர்நாடக சிறையில் இப்பொழுது சசிகலா கிட்டத்தட்ட விடுதலையாகிவிட்டதைப் போல ஃப்ரீயாக நடந்துகொள்கிறார். அவரை சந்திக்க வருபவர்களுக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்காமல் கர்நாடக சிறை அதிகாரிகள் அனுமதிக்கிறார்கள். (நெருக்கடி இருந்தபோதே வெளியே போய் ஷாப்பிங் செய்துவிட்டு வந்தவராயிற்றே!) தற்போது தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. இவையெல்லாம் ரூபா உள்துறைச் செயலாளராக இருக்கும்பொழுது நடக்காத விஷயங்கள். அங்கிருந்தபடியே அனைவரிடமும் சசிகலா பேசுகிறார். அரசியல் நடவடிக்களை மேற்கொள்கிறார். அதற்கு உதாரணமாக தமிழகத்தில் நடக்கும் சில நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள் அ.தி.மு.க.வினர்.

 

"எடப்பாடி பழனிசாமி சில தினங்களாக ஊடகங்களில் 'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற பெயரில் சில விளம்பரங்களைக் கொடுத்து வருகிறார். அதில் அவர் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஜெயலலிதாவின் வாரிசு நான்தான் எனக் கூறி வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிறன்று திடீரென ஓ.பி.எஸ்.ஸும் ஒரு விளம்பரத்தை எடப்பாடிக்குப் போட்டியாகக் கொடுத்தார். 'ஓ.பி.எஸ். என்கின்ற தலைவரின் பலம் சொல் அல்ல செயல்'. 'அவரின் வெற்றி அவருக்கானது மட்டுமல்ல மக்களுக்கானது'. 'ஜெயலலிதா தான் நடத்திய ஆட்சிக்கு மட்டுமல்ல கட்சிக்கும் ஓ.பி.எஸ்.சையே பொருளாளராக்கி மாநிலத்தின் கஜானா பெட்டியின் கை சாவியோடு, அ.தி.மு.க.வின் பொருளாதார நிர்வாகத்தையும் ஓ.பி.எஸ் கரங்களிலேயே ஒப்படைப்பதன் மூலம் நேர்மைக்கும் கண்ணியத்திற்கும், நிர்வாகத்திறமை பெயர் பெற்றவர் ஓ.பி.எஸ். அவரை மூன்று முறை முதலமைச்சர் ஆக்கியிருக்கிறார்' என ஒரு விளம்பரத்தைக் கொடுத்திருக்கிறார்.

 

திடீரென ஓ.பி.எஸ். இவ்வாறு ஒரு விளம்பரத்தை இ.பி.எஸ்.ஸுக்கு போட்டியாகக் கொடுத்திருப்பதன் மூலம், இ.பி.எஸ்.-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க பா.ஜ.க. மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை... கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்.ஸும் எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்கிற நிலையை தமிழகம் முழுவதும் ஒரே ஒரு விளம்பரத்தின் மூலம் நிலைநாட்டி இருக்கிறார் ஓ.பி.எஸ். இ.பி.எஸ் கொடுக்கும் விளம்பரங்கள் ஓ.பி.எஸ்.ஸை பாதித்திருக்கிறது என்பது மட்டுமல்லாமல், பா.ஜ.க.வின் குரலோடுதான் ஓ.பி.எஸ்-சின் குரலும் ஒத்துப்போகிறது என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்'' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

 

இது இ.பி.எஸ்.சுக்கு எதிரான குரல் மட்டுமல்ல சசிகலாவுக்கு ஆதரவான குரல். சசிகலா வந்தால் அ.தி.மு.க.வில் எந்த மாற்றமும் இருக்காது என இ.பி.எஸ். சொல்லிவருகிறார். சசிகலாவைப் பற்றி எந்த கருத்தும் சொல்லாத ஓ.பி.எஸ்., கட்சிக் கூட்டங்களில் பேசும்போது 'சசிகலா வந்தால் அ.தி.மு.க.விற்கு நல்லதுதான்' என்று பேசி வருகிறார். சசிகலாவை வரவேற்பதுடன் சசிகலாவுடன் இணைந்து இ.பி.எஸ்க்கு செக் வைக்கிறார் ஓ.பி.எஸ். அதற்கு பாரதிய ஜனதாவின் மறைமுக ஆதரவும் இருக்கிறது என்கிறார்கள் மன்னார்குடி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

 

இ.பி.எஸ்.சுக்கும் சசிகலாவுக்கும் இடையே உள்ள ஒரே ஒரு நெருடல் டி.டி.வி தினகரன்தான். அதனால்தான் டி.டி.வியை சைலன்ட்டாக்கி வைத்திருக்கிறார். வெளியே வரும் சசிகலா அ.தி.மு.க.விற்குள் பழையபடி நுழைய காத்திருக்கிறார். அதற்காக பா.ஜ.க.வின் மேல்மட்டத் தலைவர்களுடன் பேசிவருகிறார். குருமூர்த்தி போன்றவர்கள் சசிகலா மறுபடியும் அ.தி.மு.க.விற்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். குருமூர்த்தியை மீறி அ.தி.மு.க.விற்கு வரும் வியூகத்தில் உள்ள சசிகலாவிடம் ஓ.பி.எஸ் ஏற்கனவே தூது அனுப்பி சரணடைந்துவிட்டார்.

 

இ.பி.எஸ்.ஸும், தினகரன் ஒதுக்கப்படுவாரேயானால் சசிகலாவை ஏற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் முதல்வர் வேட்பாளர் நான்தான் என்பது இ.பி.எஸ் சசிகலாவுக்கு வைத்திருக்கும் நிபந்தனை. இந்த விஷயத்தில் இன்னமும் முடிவெடுக்காத சசிகலாவைத் தூண்டும் விதத்தில் ஓ.பி.எஸ், நானும் முதல்வர் ரேஸில் இருக்கிறேன் என இந்த விளம்பரத்தைக் கொடுத்து அ.தி.மு.க.வில் முதல்வர் பதவி குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

 

இந்நிலையில், "அ.தி.மு.க. இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நிற்கிறது. எடப்பாடிக்கு ஆதரவாக கொங்கு மண்டல நிர்வாகிகள் வேகமாக வேலை பார்க்கிறார்கள். அதேநேரத்தில் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதியில் உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தைச் சார்ந்த அ.தி.மு.க. தலைவர்கள் வேலை பார்க்கிறார்கள். அ.தி.மு.க. நியமித்த வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களில் ஒருவர் கூட முக்குலத்தோர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் இல்லை. ஆனால் கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த இ.பி.எஸ் முதல்வர் வேட்பாளராக வருவதை நாங்கள் விரும்பவில்லை'' என்கிறார்கள் ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக வேலைசெய்யும் தென் மாவட்ட அ.தி.மு.க.வினர்.

 

இந்நிலையில், ஓ.பி.எஸ்.சின் இந்த பா.ஜ.க ஆதரவுபெற்ற இ.பி.எஸ் எதிர்ப்பு நிலையை சசிகலா வகையறாக்கள் விரும்பவில்லை. ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு ஆதரவைத் தெரிவித்தாலும் அவர் பா.ஜ.க. சொல்படி கேட்பவர். பா.ஜ.க.வின் மேல்மட்டத் தலைவர்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தாலும், சசிகலா முன்பு கூவத்தூரில் நடந்த சம்பவங்களை மறக்கவில்லை. ஓ.பி.எஸ் போல வெளிப்படையான பா.ஜ.க. ஆதரவு நிலையை சசிகலா மேற்கொள்ளமாட்டார். பா.ஜ.க.வுடன் ஒருவிதமான அண்டர்ஸ்டாண்டிங் உடன் செயல்பட சசிகலா சம்மதித்தாலும் வெளிப்படையாக அ.தி.மு.க.வை பா.ஜ.க. கட்டுப்படுத்துவதை சசிகலா விரும்பவில்லை.

 

cnc

 

ஓ.பி.எஸ்.ஸையோ எடப்பாடியையோ பகைத்துக் கொள்ளவும் சசிகலா தயாராக இல்லை. தினகரனின் அ.ம.மு.க.வை அப்படியே வைத்துவிட்டு அ.தி.மு.க.வில் இணைந்து செயல்பட சசிகலா தயாராகி வரும் நிலையில், ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இருவரையும் சம தூரத்தில் வைத்து அ.தி.மு.க.வை இயக்குவதைத்தான் அவர் விரும்புவார் என்கிறது அவரது சொந்த பந்தங்கள்.

 

இந்நிலையில், "எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்பட வில்லையென்றால், ஓ.பி.எஸ் மூலம் கட்சியை மறுபடியும் உடைப்போம். 'இ.பி.எஸ்.ஸும் சசிகலாவும் ஒன்றாகச் செயல்படட்டும்' என ஒரு நகர்வையும், இ.பி.எஸ் சசிகலாவை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், 'ஓ.பி.எஸ் சசிகலாவும் ஒன்றுபட்டு இரட்டை இலை சின்னத்தையே முடக்குவோம்' என்கிற இன்னொரு நகர்வையும் பா.ஜ.க. யோசித் துக்கொண்டு காய் நகர்த்திவருகிறது'' என்கிறார்கள் அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.

 

 

 

Next Story

'இனி அந்த வேட்டியைக் கூட கட்ட முடியாது'- கடம்பூர் ராஜூ பேச்சு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'We can't even build that dhoti anymore' - Kadambur Raju's speech

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதிமுக பெயர், கொடி, சின்னம் லெட்டர் பேடை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் ஓபிஎஸ்க்கு நிரந்தர தடை விதித்துள்ளது நீதிமன்றம். இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், 'இதற்கு முன்பாவது இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

துரோகம் பண்ணியவர்கள் இனி அந்த வேட்டியைக்கூட கட்ட முடியாது. பல்வேறு சோதனைகளுக்கு பிறகு இரண்டு கோடிக்கு மேற்பட்ட தொண்டர்களை அதிமுக சேர்த்துள்ளது.  நாள் முழுவதும் சோதனை தான். ஒன்று நீதிமன்றம் அல்லது தேர்தல் கமிஷன். இப்படி இத்தனை குழப்பங்களையும் சந்தித்து சவால்களை சந்தித்து அத்தனையும் சாதனைகளாக மாற்றியுள்ளோம். இன்று அதிமுகவை பழைய ஒழுங்கோடு இன்னும் சொல்லப்போனால் முன்பு இருந்ததை விட  நல்ல முறைக்கு கொண்டுவந்துள்ளார் எடப்பாடி. இன்றைக்கும் இந்த தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டதா? இல்லை சேருமா? இதுதான் இன்றைக்கு பட்டிமன்றம், விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கூட பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று தெளிவாக கட்சியின் பொதுச் செயலாளர் சொல்லிவிட்டார். இந்த கருத்து ஒவ்வொரு அதிமுக தொண்டர்களுடைய கருத்து தான்'' என்றார்.

Next Story

அ.தி.மு.க. கூட்டணி; தே.மு.தி.க.வுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கீடு? 

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
ADMK Alliance; Allotment of additional seats for DMDk

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது.

அதே சமயம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADMK Alliance; Allotment of additional seats for DMDk

இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமக இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தேமுதிக சார்பாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்கக் கோரும் சில தொகுதிகளில் தே.மு.தி.க.வும் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததால் அ.தி.மு.க. - பா.ம.க. - பா.ஜ.க. கூட்டணியை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.