2020, தற்கால மனித இனம் சந்தித்த மிக விசித்திரமான ஆண்டுகளில் ஒன்று. கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்த்துப் போராட ஒட்டுமொத்த உலகும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த ஒரு ஆண்டு. காலில் வெந்நீர் ஊற்றியதுபோல ஓடிக்கொண்டிருந்த உலகத்தைச் சற்று நின்று நிதானிக்க வைத்துள்ளது 2020. லட்சக்கணக்கான மரணங்கள், பசி, பட்டினி, இனவாதம், மதவாதம் எனச் சோதனைகள் பல நிறைந்ததாகவே நம்மைக் கடந்து சென்றிருக்கும் 2020, சில விளக்கம் தெரியாத மற்றும் விளக்கம் வெளியிடப்படாத நிகழ்வுகளையும் நிகழ்த்திச் சென்றுள்ளது. அவ்வாறான சில விடை தெரியா மர்மங்களின் தொகுப்பே இது.
கரோனா;
இவ்வாண்டின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்று கரோனா. எங்கிருந்து தோன்றியது, எவ்வாறு உலகம் முழுவதும் பரவியது, இதற்கான முடிவு எப்போது உள்ளிட்ட பல பதில் தெரியாத கேள்விகளை மனிதர்களிடம் விதைத்துள்ளது இந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸ். சீனாவின் வுஹானில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், 2020 ஆம் ஆண்டு முழுவதையும் முடக்கிப்போட்டுவிட்டது என்றே சொல்லலாம். இது சீனாவில் செயற்கையாக உருவாக்கப்பட்டது என உலக நாடுகள் பலவும் கூறும்போது, இல்லவே இல்லை என சத்தியம் செய்யும் சீனா, இது வேறு நாட்டில் உருவாகி சீனாவுக்குள் பரவியது என விடாப்பிடியாகக் கூறுகிறது. இப்படியாக தோற்றம், பரவல், புதியபுதிய பிறழ்வுகள், எண்ணிலடங்காத அறிகுறிகள் என இன்று வரை மர்மங்கள் நிறைந்ததாகவே 2020 -ஐ கடந்து 2021 லும் நம்முடன் பயணிக்கத் தயாராகி வருகிறது கரோனா.
மாயமான கிம் ஜாங் உன் மற்றும் மனைவி;
ஒற்றை பட்டனை வைத்துக்கொண்டு அமெரிக்காவிற்கே சவால்விட்டு உலக நாடுகளையே உருட்டிமிரட்டியவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். இவரும், ட்ரம்ப்பும் மாற்றிமாற்றி அணுஆயுத பட்டனை அழுத்திவிடுவேன் என பூச்சாண்டிகாட்டியதை உலகம் அவ்வளவு சீக்கிரம் மறக்காது. வடகொரிய மக்களின் மூச்சுக்காத்துக்கூட வெளியே வரமுடியாத அளவு அந்நாட்டைக் கட்டிக்காத்துவரும் கிம், கடந்த ஏப்ரல் மாதம் திடீரென பொதுவெளியிலிருந்து காணாமல் போனார். வடகொரியாவின் மிகமுக்கிய அரசு விழாவான கிம் இல் சங் (கிம் ஜாங் உன்னின் தாத்தா) பிறந்தநாள் விழாவில் கூட அவர் பங்கேற்கவில்லை. இந்த செய்திகள் வெளியில் தெரிந்தவுடன், கிம் ஜாங் உன்னிற்கு உடல்நிலை சரியில்லை, அவர் இறந்துவிட்டார், ஆட்சிப் பொறுப்பு அவரது தங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது என டிசைன் டிசைனாக கதைகள் பரவ ஆரம்பித்தன. மூன்று வாரகால பரபரப்பிற்குப் பிறகு பொதுவெளிக்கு வந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கிம். இவ்வாறு, திருவிழாவில் காணாமல்போன குழந்தையைப் போல இந்த ஆண்டு கரோனாவுக்கு மத்தியில் பலமுறை காணாமல் போயுள்ளார் கிம்.
கிம் மாயமானது பற்றிய கதைகள் காணாமல் போவதற்குள், அவரது மனைவி கடந்த ஒன்பது மாதங்களாக மாயமாகியுள்ளது இவ்வாண்டின் புதிய மர்மங்களில் ஒன்று. இவர்கள் மாயமானதற்கான காரணங்கள் இன்று வரையிலும் விளக்கப்படாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது.
மர்ம விதைகள்;
கரோனா பரவலால் உலகம் முழுவதும் பீதியிலும், சீனாவின் மீது கோபத்திலும் ஆழ்ந்திருந்த நேரத்தில், சீனாவிலிருந்து வந்ததாகக் கூறப்பட்ட மர்ம விதைகள், ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு அனுப்பப்பட்ட சம்பவம் இன்றுவரை விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் உள்ள மக்களுக்குத் தபால் மூலம் வந்த பார்சல்களில் சில மர்மமான விதைகள் கண்டறியப்பட்டன. முதற்கட்டமாக, சில விதை பார்சல்களில் இருந்த முத்திரையை வைத்து அவை சீனாவிலிருந்து வந்தவை எனக் கண்டறியப்பட்டது. ஏற்கனவே பரபரப்பாகப் பேசப்பட்ட இந்த விவகாரம், சீனாவின் பெயர் அடிபட்டதும் இன்னும் பெரிதானது. பல நாடுகள் விதைகள் குறித்த எச்சரிக்கை அறிவிப்புகளைப் பொதுமக்களுக்கு வெளியிட்டன.
பின்னர், இதுகுறித்த விசாரணையில் இறங்கியது அமெரிக்காவின் வேளாண்மை மற்றும் வனவியல் துறை. நாடு முழுவதும் சுமார் 16,000 மாதிரிகள் பெறப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், இந்த பார்சல்களில் இருந்தவை சாதாரண கடுகு, முட்டைக்கோஸ், புதினா போன்ற 5,000 வகையான விதைகள் என அடையாளம் காணப்பட்டன. இவற்றின் ஆபத்துத்தன்மை குறித்துத் தெரியாததால் மக்கள் இவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என அரசாங்கங்கள் அறிவித்தன. விதைகளின் வகைகள் கண்டறியப்பட்டாலும், அவற்றின் தன்மை என்ன, எதற்காக இவை அனுப்பப்பட்டது, யார் இவற்றை அனுப்பியது உள்ளிட்ட கேள்விகள் இன்னும் விடை தெரியாதவையாகவே உள்ளன.
மக்களுக்கு விதைகள் அனுப்பப்பட்டது ஆன்லைன் வணிக நிறுவனம் மேற்கொண்ட ஒரு மோசடியாக இருக்கலாம் என ஒருசிலர் கூறுகின்றனர். ஈ-காமர்ஸ் தளத்தில் செயல்படும் ஒரு சிறு நிறுவனம், தங்களது தர மதிப்பீட்டை (Rating) அதிகரிப்பதற்காகப் போலியான நுகர்வோர் கணக்குகளை உருவாக்கி, அவர்களுக்கு விலை மலிவான பொருட்களை அனுப்பும். அதன்பின் அவர்களது பெயரில் உருவாக்கப்பட்ட கணக்கிலிருந்து தங்கள் நிறுவனத்தின் தர மதிப்பீட்டை அதிகரிக்கும். Brushing Scam எனப்படும் இந்த மோசடிதான் இந்த விதை பார்சல்களின் நோக்கமாக இருக்கும் என ஒருசிலரால் நம்பப்படுகிறது.
ஏலியன் இருப்பு;
ஆண்டாண்டு காலமாகத் தொடரும் ஏலியன் கதைகள் இந்த ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. நாசா வெளியிட்ட மர்ம விண்கல வீடியோ, இஸ்ரேல் விஞ்ஞானியின் ஏலியன் குறித்த கருத்து என வழக்கமான ஹாலிவுட் பாணியில் அமெரிக்காவைச் சுற்றியே இந்த ஆண்டும் சுழன்றுள்ளது ஏலியன் கதைகள். 2004 ஆம் ஆண்டு இரண்டு கடற்படை போர் விமானிகளால் வானில் படமாக்கப்பட்ட அடையாளம் தெரியாத பொருள் ஒன்றின் வீடியோவை வெளியிட்டது நாசா. பசிபிக் பெருங்கடலுக்கு சுமார் 100 மைல் தொலைவில் அந்த வட்டப் பொருள் தண்ணீருக்கு மேலே வட்டமிட்டதாக நாசா தெரிவித்தது. அதேபோல 2015 ஆம் ஆண்டு படமாக்கப்பட்ட இரண்டு அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களைக் கொண்ட வீடியோவையும் நாசா வெளியிட்டது. இந்த வீடியோவில் உள்ளவை பறக்கும் தட்டுக்கள் என உறுதியாகச் சொல்லாத நாசா, அடையாளம் தெரியாத வான்பொருள் என அதற்குப் பெயரிட்டது.
இதேபோல, இஸ்ரேல் நாட்டின் விஞ்ஞானி ஹைம் ஈஷத், ஏலியன்கள் இருப்பதாகவும், அவை அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறி பரபரப்பைக் கிளப்பினார். மேலும், அவை தங்களுக்குள்ளாகக் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்திச் செயல்படுவதாகவும் அவர் கூறினார். அதுமட்டுமல்லாமல், "ஏலியன்கள் மிக நீண்டகாலமாக நம்மோடு இருக்கின்றன. அவை 'கேலட்டிக் கூட்டமைப்பு' என்ற பெயரில், இணைந்து செயல்படுகின்றன. ஏலியன்கள் அமெரிக்காகவோடு இணைந்து செயல்படுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவற்றின் இருப்பை அறிவிக்கத் தயாரானார். ஆனால், அது தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்தும் எனவும், மனிதர்களுக்கு விண்வெளி பற்றியும், பறக்கும் தட்டுகள் பற்றியும் புரிதல் வரும்வரை, தங்கள் இருப்பை வெளியிட வேண்டாம் என ஏலியன்கள் கூறின" என்றும் அவர் தெரிவித்தார். இப்படி ஏலியன் குறித்து இந்தாண்டு அடுத்தடுத்து தகவல்கள் வெளியானாலும், நாசா வீடியோவில் இருப்பது என்ன பொருள், ஏலியன்களுடன் அமெரிக்காவுடனான தொடர்பு குறித்த தகவலின் உண்மைத்தன்மை போன்றவை விடை தெரியாத கேள்விகளாகவே கடந்து சென்றுள்ளன.
மெக்சிகோ பறவைகள் இறப்பு;
இவ்வாண்டின் மத்தியில், மேற்கத்திய நாடுகளிடையே கரோனாவுக்கு அடுத்து அதிகம் பேசப்பட்ட விஷயங்களில் மிகமுக்கியமானது, நியூ மெக்சிகோவைச் சுற்றி ஆயிரக்கணக்கான பறவைகள் இறந்துவிழுந்த சம்பவம். ஆண்டுதோறும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பறவைகள் அமெரிக்கா, மெக்சிகோ வழியாக இருதுருவங்களுக்கும் இடையே பயணம் மேற்கொள்கின்றன. ஆனால், எந்த வருடமும் இல்லாத வகையில், இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான பறவைகள் திடீரென இறந்து கொத்துக்கொத்தாக நியூ மெக்சிகோ வீதிகளிலும் வீடுகளிலும் விழுந்தன. இவற்றின் இறப்பு மிகப்பெரிய விவாதமான நிலையில், இவற்றின் இறப்புக்கான காரணம் இன்றுவரை தெளிவாக விளக்கப்படவில்லை. மேற்கு கடற்கரை பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயால் உருவான தூசு மண்டலம் இறப்புகளுக்கு ஒரு காரணியாக இருக்கலாம் எனவும், வடதுருவ பகுதியில் ஏற்பட்ட வழக்கத்துக்கு மாறான வெப்பநிலை குறைவு, பூச்சியினங்களை அதிகமாக அழித்ததால் உணவின்றி இப்பறவைகள் இறந்திருக்கலாம் எனவும் யூகங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இதுவரை இதற்கான காரணங்கள் குறித்து உயிரியலாளர்கள் மத்தியில் சரியான முடிவு எட்டப்படவில்லை.
உலோகத்தூண்;
ஹாலிவுட்டின் கிளாசிக் படங்களில் ஒன்றான 'ஏ 2001 ஸ்பேஸ் ஒடிஸி' படத்தில் இடம்பெறுவது போன்ற உலோகத்தூண்கள் கடந்த ஒரு மாதமாக உலகின் பல பகுதிகளில் தோன்றியும் மறைந்தும் வருவது இவ்வருடத்தின் தற்போதைய ஹாட் டாபிக். 'ஸ்பேஸ் ஒடிஸி' படத்தில் வருவதுபோன்ற இந்த உலோகத்தூண் அமெரிக்காவில் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவின் உட்டாவில் உள்ள பாலைவனப் பகுதி ஒன்றில், பெரிய கொம்புகளைக் கொண்ட ஆடுகளை எண்ணுவதற்காக ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருந்த வன விலங்குத்துறை அதிகாரிகள் கண்ணில் முதன்முதலாகச் சிக்கியது இந்த தூண். 10 முதல் 12 அடி உயரம் உடைய இந்த தூண் நவம்பர் 18 அன்று கண்டறியப்பட்டது, நவம்பர் 27 அன்று அப்பகுதியிலிருந்து மறைந்தது.
இதனைத் தொடர்ந்து, ருமேனிய நகரமான பியாட்ரா நீம்டுவில் நவம்பர் 27 அன்று தோன்றி டிசம்பர் 1 மறைந்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் டிசம்பர் 2 அன்று மீண்டும் ஒரு தூண் தோன்றியது. இதற்குப் பின், நியூ மெக்சிகோ, இங்கிலாந்து, நெதர்லாந்து, கொலம்பியா, போலந்து, ஆஸ்திரேலியா என அடுத்தடுத்து தோன்றி கண்ணாம்பூச்சி காட்டிய இந்தத் தூண்கள் முதலில் அச்சத்துடன் அணுகப்பட்டாலும், தற்போது மீம் மெட்டீரியலாக மாற்றப்பட்டுவிட்டது. ஆரம்பத்தில் இது நிஜமாகவே ஏலியன் வேலையாக இருக்குமோ என அச்சப்பட்டவர்கள் கூட தற்போது வேலையில்லாதவர்கள் யாரோ இதனை நட்டுவைக்கிறார்கள் எனக் கடந்துசெல்ல துவங்கிவிட்டனர்.
அதற்கேற்றாற்போல, 'தி மோஸ்ட் ஃபேமஸ் ஆர்டிஸ்ட்' என்கிற குழு உட்டா மற்றும் கலிஃபோர்னியாவில் உலோகத் தூணை நட்டுவைத்தது தாங்கள் தான் எனப் பொறுப்பேற்றுக்கொண்டது. அதேபோல, இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட தூணை வடிமைத்தது நான்தான் என ஒப்புதல் அளித்துள்ளார் டாம் டன்ஃபோர்ட் என்பவர். இப்படி மூன்று தூண்களின் தோற்றம் குறித்த பின்புலம் தெரியவந்துள்ள நிலையில், மீதி தூண்களை இவ்விடங்களில் வைத்தது யார், அவற்றைத் திரும்ப எடுத்து யார் என்ற விவரங்கள் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால், விரைவில் இதற்கான பதில்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.