Skip to main content

"இது கலவரம் அல்ல போராட்டம்" உலகையே திரும்பி பார்க்க வைத்த ஹாங்காங் போராட்ட பின்னணி...

Published on 05/09/2019 | Edited on 05/09/2019

தோலுரிக்கப்பட்ட தோள்கள், உடைக்கப்பட்ட கைகள், குருடாக்கப்பட்ட கண்கள் என பல இன்னல்களுக்கு பிறகும் கூட ஒரு மிகப்பெரிய மக்கள் கூட்டமே வெற்றி கொண்டாட்டத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறது இன்று. ஹாங்காங் முழுக்க கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக நடந்த ஒரு போராட்டம். லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வேலைகளை விட்டுவிட்டு, படிப்பை விட்டுவிட்டு, தாங்கள் வசிக்கும் பகுதியின் உரிமைக்காக போராடியுள்ளனர். இதற்கான வெற்றியையும் இன்று அவர்கள் பெற்றுள்ளனர் என்றே கூறலாம். இப்படி இந்த உலகத்தையே இன்று திருப்பி பார்க்க வைத்துள்ள இந்த ஹாங்காங் போராட்டம், ஒரு 20 வயது பெண்ணின் கொலை வழக்கால் தான் வீரியம் பெற்றது என்பதும் பலரும் அறியாத ஒன்று. 

 

hongkong extradition bill protest

 

 

ஹாங்காங்கில் வசிக்கும் 19 வயதான சான் டாங், தனது 20 வயதான காதலியுடன் கடந்த 2018 ஆம் ஆண்டு தைவானுக்கு சுற்றுலா செல்கிறார். சுற்றுலா சென்ற இடத்தில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த பெண்ணை கொன்று பெட்டிக்குள் வைத்து அப்புறப்படுத்திவிட்டு மீண்டும் ஹாங்காங் திரும்புகிறான் சான் டாங். அதே நேரத்தில் பெண்ணின் பிணத்தை கண்டறிந்த தைவான் போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த பெண்ணை கொன்றது சான் டாங் தான் என சந்தேகிக்கின்றனர். இதனை அடிப்படையாக கொண்டு சான் டாங் ஹாங்காங் போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதில், கொலைசெய்யப்பட்ட போது தனது காதலி கர்ப்பமாக இருந்ததாகவும், அதற்கு அந்த பெண்ணின் முன்னாள் காதலர் தான் காரணம் எனவும், அதனால் ஏற்பட்ட கோபத்தில்தான் தனது காதலியை கொன்றேன் எனவும் கூறியுள்ளார். 

இதன் நீட்சியாக ஏற்பட்ட இந்த போராட்டத்தை குறித்த முழு புரிதலுக்கு ஹாங்காங் குறித்த சில அரசியல் வரலாற்று அடிப்படைகளும் முக்கியம். 1997 முதல் சீனாவின் சிறப்பு நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பகுதிதான் ஹாங்காங். 1841 முதல் ஹாங்காங் பகுதியை ஆட்சிசெய்துவந்த பிரிட்டிஷ் அரசு, அப்பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பை கடந்த 1997 ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைத்தது. முதலாளித்துவத்திற்கு முன்னுரிமை வழங்கும் ஹாங்காங் நாட்டிற்கு தனித்துவமான நாணயம், சட்டத் திட்டங்கள், அரசியல் விதிகள் ஆகியவை உள்ளன. ஆனால் எல்லை பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்களில் சீனாவின் கட்டுப்பாட்டிலேயே ஹாங்காங் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் சீனா, ஹாங்காங் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது என்ற எண்ணம் சிலகாலங்களாக ஹாங்காங்கில் பரவ ஆரம்பித்தது. 

இந்த நிலையில் சான் டாங் மற்றும் அவரை போன்று தைவான் மற்றும் சீனாவில் குற்றம் செய்தவர்களை அந்த நாடுகளிடமே ஒப்படைக்கும் விதமாக சட்ட திருத்தும் மேற்கொள்ள கடந்த மார்ச் மாதம் ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லேம் முடிவு செய்தார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் சீனா, தைவான் நாடுகள் சந்தேகிக்கும் ஹாங்காங்கை சேர்ந்தவர்கள் அந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள சட்டங்களின்படி விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். இதன் மூலம் யாரை வேண்டுமானாலும் சீனா சந்தேக வளையத்துக்குள் கொண்டுவந்து கைது செய்து சீனா அழைத்துச்செல்ல முடியும். இது ஹாங்காங் மீதான சீனாவின் ஆதிக்கத்தை அதிகமாக்கும் என கூறி இந்த திட்டத்திற்கு ஹாங்காங் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

 

hongkong extradition bill protest

 

இது குறித்த அறிவிப்பு வெளியான மார்ச் மாதமே ஹாங்காங் முழுவதும் போராட்டங்கள் தொடங்கின. பின்னர் இந்த சட்ட திருத்தம் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து ஜூன் மாதம் முதல் போராட்டங்கள் வலுப்பெற்றன. லட்சக்கணக்கான மக்கள் ஹாங்காங் வீதிகளில் இறங்கி போராடினர். ஹாங்காங் நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திருத்தம் குறித்த இரண்டாவது விவாதம் நடந்த ஜூன் 12 ஆம் தேதி, ஹாங்காங்கில் நடந்த போராட்டத்தில் காவல்துறை அடக்குமுறையால் கலவரம் வெடித்தது. கண்ணீர் புகை குண்டு, ரப்பர் குண்டுகள் கொண்டு கொடூரமாக தாக்கி மக்கள் கூட்டம் கலைக்கப்பட்டது.  

ஜூன் 15 ஆம் தேதி இந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கேரி லேம் அறிவித்தாலும்,  காவல்துறையினரின் அடக்குமுறை காரணமாக ஏற்பட்ட மக்களின் கோபத்தால் அடுத்த நான்காவது நாளே மீண்டும் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. ஜூன் 16 ஆம் தேதி 10 லட்சத்திற்கும் மேலானோர் ஹாங்காங் சாலைகளில் குவிந்தனர். சட்டதிருத்தத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்பதை கடந்து போலீஸாரின் அடக்குமுறை குறித்து சுதந்திரமான விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

 

hongkong extradition bill protest

 

ஆனால் மக்களின் போராட்டங்களை கண்டுகொள்ளாத அரசு இந்த மசோதாவை நிரந்தரமாக ரத்து செய்வதில்லை என்ற தனது பிடியில் உறுதியாக நின்றது. நாளுக்கு நாள் போராட்டக்களங்கள் விரியத்தொடங்கின. தொழிற்சாலைகள் முடங்கின, சாலைகள் மக்களால் நிரம்பியது. ஹாங்காங் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. மனித சங்கிலி போராட்டங்கள், ஊர்வலங்கள் என போராட்டங்கள் பல வகைகளில் பரிணமித்தது. ஆனால் மக்கள் தங்கள் கோரிக்கைகளில் உறுதியாக நின்றனர். மக்கள் கலவரத்தில் ஈடுபடுகின்றனர் என்று அரசாங்கம் குற்றம்சாட்டிய போது, "நாங்கள் செய்வது போராட்டமே தவிர, கலவரம் அல்ல" என்ற குரல்கள் அனைத்து மூலைகளிலும் ஒலிக்க துவங்கின. அதேநேரம் இந்த விஷயத்தில் உலக நாடுகளின் அழுத்தங்களும் ஹாங்காங் அரசை விரைவான முடிவை நோக்கி தள்ளின.

இறுதியாக மக்களின் ஆறு மாத கால போராட்டத்திற்கு பணிவதாக முடிவெடுத்துள்ள ஹாங்காங் நிர்வாகி கேரி லேம், சட்டத்திருத்த மசோதாவை நிரந்தரமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். கேரி லேமின் இந்த அறிவிப்பு தங்களின் போராட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றியாக கருதி மக்கள் கொண்டாடினாலும், போலீசார் மீதான விசாரணை, போராட்டத்தை கலவரம் என கூறி கொச்சைப்படுத்தியதற்கு கேரி லேம் மன்னிப்பு கேட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ள வரை மக்களின் போராட்டம் ஏதோ ஒரு வகையில் உயிர்ப்புடனேயே இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.