கரோனா பரவலை தடுப்பதற்காக பொது முடக்கத்தை ஆகஸ்ட் 30 வரை நீட்டித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சில தளர்வுகளுடன் பெரும்பாலான பழைய கட்டுப்பாடுகள் அப்படியே நீடிக்கின்றன. ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்படும் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், எடப்பாடியின் உத்தரவு ஏமாற்றமளிக்கிறது.
இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி, கொரோனா குளறுபடிகள் குறித்து, எடப்பாடிக்கு எதிராக வாள் சுழற்றி வருகிறார். அவரிடம் நாம் பேசியபோது, ‘’ மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இனிமேல் இ-பாஸ் வாங்க தேவை இல்லை; பொதுமக்கள் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம் என மத்திய அரசு அறிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுத்திருப்பது பல தரப்பிலும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
தொற்று பரவல் அதிகமாக இருக்கும் இடங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் நீடிக்கலாம். மற்றபடி ஆங்காங்கு உள்ள நிலைமைக்கு தகுந்தவாறு மாநில அரசும் கலெக்டர்களும் முடிவுகள் எடுக்கலாம். தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியது. ஆனால், மத்திய அரசின் முடிவை பார்த்தபின் தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று சொல்லி வந்த முதல்வர், மொத்த தமிழ்நாட்டையும் மேலும் ஒரு மாதம் முடக்கி வைப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது கரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது என்று பழனிசாமி பல முறை பெருமையுடன் குறிப்பிட்டார். ”இதற்கு மேலும் கரோனாவை விரட்டி அடிப்பது இனிமேல் மக்கள் கையில்தான் இருக்கிறது” என்றும் சொன்னார். இதனால், ஊரடங்கு வாபஸ் பெறப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி நடக்கவில்லை.
கரோனா தொற்று மிக பெரிய ஆபத்தானதுதான். மறுக்கவில்லை. ஆனால், ஊரடங்குதான் தீர்வு என்றால், இந்த நாலரை மாதத்தில் கரோனா முழுவதுமாக ஒழிந்திருக்க வேண்டும். ஆனால், ஒழிக்கப்படவில்லை. ஆக, ஊரடங்கு மட்டும் இதற்கு தீர்வு அல்ல! ஊரடங்கு விதிகளை மக்கள் முழுமையாக பின்பற்றவில்லை என்றும், முக கவசம் அணிவதிலும், சமூக இடைவெளி கடைபிடிப்பதிலும் மக்கள் அலட்சியமாக நடக்கின்றனர் என்றும் பழனிசாமி சொல்வதில் உண்மை இல்லை. பெரும்பாலான மக்கள் இந்த விதிகளை முழுமையாக பின்பற்றுகின்றனர். ஒரு சிலர் மட்டும்தான் விதிகளை அப்பட்டமாக மீறி நடக்கின்றனர். விதிகளை பின்பற்றாமல் அப்பாவி மக்களுக்கு தொற்று ஏற்படுத்துபவர்கள் சமூக விரோதிகள் என்று கேரள அரசு அறிவித்து ஜெயில் தண்டனை அளிக்க அவசர சட்டம் போட்டுள்ளது. அந்த சமூக அக்கறையும் துணிச்சலும் எடப்பாடி அரசுக்கு ஏன் வரவில்லை?
நோய் வராமலே மரணம் வந்து விடுமோ என்று பீதி அடையும் அளவுக்கு ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. வேலைகள் பறி போகின்றன. ஊதியம் குறைக்கப்படுகிறது. அனைத்தையும் தாங்கி கொண்டு வேலைக்கு போகலாம் என்று புறப்பட்டால் இ-பாஸ் கெடுபிடி தடுக்கிறது. அன்றாடம் உழைத்து சம்பாதிப்பவர்களின் நிலைமை இன்னும் பரிதாபமாக இருக்கிறது. பணக்காரர்கள், அரசு சம்பளம் வாங்குபவர்கள் தவிர மற்ற பிரிவுகளை சேர்ந்த மக்களின் வாழும் உரிமையே கேள்விக்குறியாகி நிற்கிறது. உயிர் பாதுகாப்பு தவிர வேறு எந்த தேவைகளும் இல்லாத ஒரு சிறு பிரிவின் ஆலோசனையை கேட்டு முடிவுகள் எடுத்தால், அடுத்த ஆண்டு தேர்தலில் அதற்காக மிகப்பெரிய விலையை எடப்பாடி கொடுக்க வேண்டியது வரும்! ‘’ என்கிறார் ஆவேசமாக!