Skip to main content

'அண்ணாவின் தம்பி... கலைஞரின் அண்ணன்' அவர்தான் பேராசிரியர் அன்பழகன்!

Published on 07/03/2020 | Edited on 13/03/2020

கிட்டதட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு அதுஒரு பொன்மாலைப் பொழுது, சூரியன் ஓய்வுக்காக தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்த அந்த நேரத்தில், சூரியனை ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு அந்த தலைவனுக்கு இருந்தது. அதற்காக அந்நேரம் தன்னுடைய தளபதிகளை தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தார் அந்த தலைவன். தலைவனுக்கு தளபதியாக வந்து சேர்ந்தார் இராமையா என்ற இளைஞர். தனக்கான தன்னுடைய தளபதிகளை தேடிக்கொண்டிருந்த அந்த தலைவன் வேறு யாருமல்ல. தமிழர்களின் குருதியோடு கலந்துள்ள பேரறிஞர் அண்ணாதான் அவர். அவர் தேர்தெடுத்த அன்பு தம்பிதான் இராமையா என்று அழைக்கப்பட்டு, இன்று நம் எல்லோராலும் பேராசிரியர் என்று அன்போடு அழைக்கப்படும் க. அன்பழகன் அவர்கள். இன்றைக்கு அவர் தன்னுடைய 98-வது வயதில் நம்மை விட்டு மறைந்துள்ளார்.

 

jk

 

கிட்டதட்ட எட்டு முறைக்கு மேல் சட்டமன்ற உறுப்பினர், சட்ட மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், பலமுறை தமிழக அமைச்சர் என்ற இத்தனை சிறப்புக்கள் இருந்தும் பேராசிரியர் என்ற இந்த பதத்திற்கு மட்டும், இவரைத் தவிர வேறு யாரையும் இன்றைக்கும் உருவகம் செய்துவிட முடியாது. அவர் படித்ததனால் மட்டுமே அதை பெற்றுவிடவில்லை, அவர் நடத்தையாலும் அதை உறுதி  செய்தார். அதிர்ந்து பேசாதவர், ஆனால் மாற்று கட்சிகாரர்களும் மதிக்க கூடிய தலைவர். பேராசிரியர் தம்பி வந்துவிட்டாரா என்று பேரறிஞரால் கூப்பிடப்பட்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரர். திமுகவின் நாடித்துடிப்பு, கலைஞரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். கிட்டதட்ட 50 ஆண்டுகளாக கழகத்தின் பொதுச்செயலாளர் என்ற மிக முக்கிய பொறுப்பு. "என்ன வேண்டும் தருகிறேன், என்னிடம் வாருங்கள்" என்று அன்றைய தமிழக முதல்வரே அழைத்தாலும், அதை எல்லாம் துச்சமென மதித்து தான் கொண்ட கொள்கைக்கு வலுசேர்ந்தவர். "பேராசிரியர் ஒரே கட்சியில் இருக்கிறார் என்பதை ஏதோ அதிசயத்தை போன்று சிலர் கூறுகிறார்கள். அவர் உருவாக்கிய இயக்கத்தில் அவர் இருப்பதில் என்ன அதிசயம் இருந்துவிட போகிறது" என்று கலைஞர் அவரைப் பற்றி கூறியதே, அவருக்கும் இவர்தான் பேராசிரியர் என்பதை நிரூபிக்க போதுமானது. 

 

jk



திமுக கழகம் உருவாகி 1957ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 15 உறுப்பினர்கள் மட்டுமே வெற்றிபெற்றார்கள். அதில் இவரும் ஒருவர். எழும்பூர் தொகுயில் வெற்றிபெற்று முதல்முறையாக கோட்டைக்குச் சென்றார். 62ம் ஆண்டு சட்டமேலவைக்கு சென்றார். 67ம் ஆண்டு திருச்செங்கோட்டில் இருந்து மக்களவைக்கு சென்றார். அடுத்து 71-ல் ஆரம்பித்து தொடர்ந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். 2006ம் ஆண்டுக்கு பிறகு அவர் உடல்நிலை காரணமாக அவர் தேர்தல்களில் பங்கெடுக்கவில்லை என்றாலும், கட்சியில் தனக்கான பணிகள் எதையும் அவர் குறைந்துக் கொள்ளவில்லை. வாழும் வரை கொள்கைக்காகவும், சுயமரியாதைக்காகவும் உழைத்தவர் இன்றைக்கு நம்மைவிட்டு சென்றுள்ளார். ஏனென்றால், திமுக தலைவர் கலைஞர் செய்வதில் தவறு இருந்தாலே, அதையே எதிர்த்து குரல் கொடுக்கு ஆற்றல் கொண்டவராகவே கடைசி வரையிலும் அவர் இருந்தார். நல்லவேளை அவர் நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இல்லையென்றால் அவர் ரோட்டிற்கு வந்து போராட வேண்டிய அவசியம் வந்திருக்கும். ஏனென்றால் அவர் அண்ணாவின் தம்பி, கலைஞரின் அண்ணன்!