Skip to main content

சசிகலா தரப்பால் உற்சாகமான திமுக... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டால் அதிமுக அதிர்ச்சி! 

Published on 06/02/2020 | Edited on 06/02/2020

தஞ்சாவூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தின் தம்பி ராஜ்குமார் மகன் ஸ்ரீராம் சுப்பையாவிற்கும், புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டிணம் "மணல்' ராமச்சந்திரன் மகள் சாருஹாசினிக்கும் வியாழக்கிழமை தஞ்சாவூரில் திருமணம் நடைபெற்றது. புதன்கிழமையே முத்துப்பட்டிணத்தில் உள்ள ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்று சபரீசன் மணமகளை வாழ்த்தி விட்டுச் சென்றார்.

 

dmk



தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்திவைத்தார். விழாவில், தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, காங்கிரஸ் திருநாவுக்கரசர் எம்.பி., காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி ஆகியோருடன் திவாகரன் கலந்து கொண்டு ஸ்டாலினிடம் நலம் விசாரித்ததுடன் உதயநிதியிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
 

dmk



திருமணம் முடிந்த நிலையில் மணமக்களை வாழ்த்திப் பேசிய திவாகரன், "சகோதரர் மு.க.ஸ்டாலின் இன்றைய எதிர்க்கட்சித் தலைவர், நாளைய தமிழகத்தின் தலைவர்'' என்று பேச்சைத் தொடங்கினார். தொடர்ந்து, ""இன்றைய நம் தமிழர்களின் நிலை மிக கேவலமாக இருக்கிறது. இரண்டாம்தர குடிமக்களாக நாமெல்லாம் ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். நம்முடைய வீரம் எங்கே போனது, மானம் எங்கே போனது? கர்நாடகாவிலிருந்து வந்த ஒருவர் பெரியாரை விமர்சிக்கிறார். இதேபோல நாம் கர்நாடகாவில் போய் யாரையாவது பேசிட்டு வந்துவிடமுடியுமா? இதை மட்டும் சிந்தியுங்கள். இதையெல்லாம் பேசும் அளவிற்கு இன்று துணிச்சல் வந்துள்ளது.
 

dmk



ஒவ்வொரு திராவிடத் தலைவர்களாக நம்மைவிட்டுச் செல்லச் செல்ல... இந்த துணிச்சல் வந்துகொண்டிருக்கிறது. தயவு செய்து அன்பர்களே... தி.மு.க., அ.தி.மு.க. அன்பர்களே... தமிழகம், தமிழ்தான் நமக்கு முதல்! அதன் மானத்தை யார் காப்பாற்றுவார்களோ அவர்களுக்கு பின்னால் என்ன விலை கொடுத்தாலும் நிற்க வேண்டும். அந்த ஒரே நம்பிக்கை நட்சத்திரம் இந்தா உட்காந்திருக்கார்'' என்று மு.க.ஸ்டாலினை கைகாட்டினார்.


"அரசியலில் நான் எதையும் எதிர்பார்க்க மாட்டேன். சிலருக்கு இடைஞ்சல் செய்வதற்காகவே அரசியல் கட்சி தொடங்கினேன். தமிழகத்தில் திராவிட பாரம்பரியத்தை காக்க வேண்டும். அதை காக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின் தான். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி பல இடங்களில் ஆளுங்கட்சியால் தட்டிப் பறிக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க.வினர் விழிப்போடு இருந்திருந்தால் இன்னும் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பீர்கள்'' என ஸ்டாலினை புகழ்ந்து தள்ளினார் திவாகரன்.

தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் கே.என். நேரு... "சகோதரர் திவாகரன் பேசியது எங்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் தி.மு.க. வெற்றி பெறும் என மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவரே கூறினார். தளபதி ஸ்டாலினை அடுத்த முதலமைச்சர் என அரசகுமார் புதுக்கோட்டையில் கூறினார். தற்போது திவாகரனும் கூறியுள்ளார். மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறாகவே உள்ளது'' என்றார்.


இறுதியாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ""புதுக்கோட்டையில் பா.ஜ.க.வின் மாநில துணைத்தலைவராக இருந்த பி.டி.அரச குமார், ஸ்டாலின்தான் அடுத்த முதலமைச்சர் என கூறினார். பின்னர் அவர் தி.மு.க.வில் இணைந்து விட்டார். தற்போது திவாகரனும் அப்படியே பேசியுள்ளார். அவர் எங்கே செல்வார் என்பது தெரியாது... அது அவரின் விருப்பம். தமிழ்நாட்டில் நடைபெறுவதை ஆட்சி என கூற முடியாது... அது காட்சி. உள்ளாட்சித் தேர்தலில் விழிப்போடு இருந்ததால்தான் இந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறோம். அதற்காகத்தான் தொடர்ந்து நீதிமன்றத்தை நாம் நாடினோம். முறையாக தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருந்திருந்தால் 90 சதவீத இடங்களில் வெற்றி பெற்றிருப்போம். உள்ளாட்சித் தேர்தல் வெற்றி, சட்டமன்றத் தேர்தல் வெற்றியின் அடித்தளம். இதை உணர்ந்துதான் இப் போதே நம் மீது பல்வேறு விமர்சனங்களை கூறி வருகிறார்கள். ஏழை-எளிய மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் இந்த அ.தி.மு.க. ஆட்சிக்கு இல்லை. மத்திய அரசு கொண்டு வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்தாமல் மாநில அரசு வேடிக்கை பார்க்கிறது. இதையெல்லாம் மக்கள் உணர்ந்துகொள்ள வேண் டும்'' என்றார்.

கடந்த ஆண்டும் ஒரு விழாவில் ஸ்டாலினைப் புகழ்ந்து பேசிய திவாகரன், இப்போது தஞ்சையில் தாறுமாறாகப் புகழ்ந்துள்ளார். இந்த விழாவில் கரை வேட்டி கட்டாத அ.தி.மு.க. புள்ளிகள் பலரும் வந்திருந்தனர். காரணம், மணமகளின் அப்பா ராமச்சந்திரன், சேகர் ரெட்டியுடன் சேர்ந்து மணல் சாம்ராஜ்ஜியத்தில் கோலோச்சியவர். தி.மு.க. குடும்பத்துடன் சம்பந்தம் பண்ணியிருந்தாலும் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். தரப்புக்கும் நெருக்கம்தான்.

மு.க.ஸ்டாலினும் திவாகரனும் கலந்து கொள்ளும் விழாக்களில் தொடர்ந்து இப்படி நடப்பது தமிழக அரசியலில் விறுவிறுப்பைக் கூட்டியுள்ளது.