Skip to main content

"என் சாதியைத் தெரிந்துகொண்டு வந்து என்னை விமர்சிக்கிறார்கள்..." - திவ்யாபாரதி

Published on 20/07/2018 | Edited on 20/07/2018

திவ்யாபாரதி... 'கக்கூஸ்' ஆவணப் படம் ஏற்படுத்திய அதிர்வுகளும் விவாதங்களும் தொடர்ந்துகொண்டே இருக்க, அதை எடுத்ததற்காக பல்வேறு விமர்சனங்களையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்த அவர், அதைத்தாண்டி அடுத்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளார்.

 

dhivya barathy



கடந்த ஆண்டு ஒகி புயலில் கன்னியாகுமாரி மாவட்ட மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் கடலுக்குள் சிக்கித் தவித்தனர். அவர்களைக் காப்பாற்ற அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லையென மீனவர்கள் குற்றம் சாட்டினர். ஒகி புயலின் போது மீனவர்கள் பட்ட துயரையும், அரசின் அலட்சியத்தையும் பேசும் 'ஒருத்தரும் வரேல' ஆவணப்படத்தை உருவாக்கிவிட்டார். 'கக்கூஸ்' படம் வெளியான பின்பு வந்த அச்சுறுத்தல்கள், இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியானவுடன் வரத் தொடங்கிவிட்டன. அதிகாரத்தின் நடவடிக்கைகள் தாண்டி செயல்பாட்டாளர்கள் மீது பொதுவெளியில் வைக்கப்படும் விமர்சனங்கள், 'தலித் அல்லாதவர்கள் தலித்துகளின் பிரச்சனையைப் பேசுவது சரியானதாக இருக்காது' என்பதும் 'இப்போதெல்லாம் தலித்தியம் பேசுவது விளம்பரத்துக்காகவும் வருமானத்துக்காகவும்' என்பதுமாகும். இந்த இரண்டு விமர்சனங்களுக்கும் திவ்யாபாரதியின் பதிலைக் கேட்டோம்...

 

 

 


"தலித்துகளின் பிரச்சனையை தலித்துகள்தான் பேசவேண்டுமென்றால் சிறுபான்மையினர் பிரச்சனைகளை  சிறுபான்மையினர்தான் பேச வேண்டும், பெண்கள் பிரச்சனையை பெண்கள்தான் கையில் எடுக்க வேண்டும்... இதில் பெரிய சிக்கல் இருப்பதாகத்தான் நான் பார்க்கிறேன். நான் ஒரு கம்யூனிஸ்ட், பள்ளிகாலத்தில் இருந்து இடதுசாரி அமைப்பால் வளர்க்கப்பட்டவள். நான் சாதி, மத அடையாளங்களெல்லாம் கடந்து நான் ஒரு கம்யூனிஸ்ட்டாகத்தான் உணர்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் மீதான அக்கறையான உணர்வில் இயங்கிக்கொண்டிருக்கிறோம். கக்கூஸ் படத்தில் செய்யப்பட்ட விமர்சனத்தைக்கூட அடையாள அரசியலின் விமர்சனமாகத்தான் நான் பார்க்கிறேன். அந்தப் படத்தில் பிரச்சனையை நான் தவறாக காட்சிப்படுத்தியிருந்தால் சொல்லுங்கள். வெளியில் இருந்து வந்த ஆள், தவறான சிந்தனையில் காட்டியுள்ளேன் என்றால் கூட திருத்திக்கொள்ளலாம். ஆனால், விமர்சனமோ படத்தின் மீது இல்லாமல் என் மீதுதான் இருக்கிறது.

 

 

 

orutharum varela



கக்கூஸ் படத்தில் துப்புரவு தொழிலாளர்களை தவறாக காட்சிப்படுத்தியுள்ளேன், தலித் விஷயங்களில் புரிந்துகொள்ளாமல் செய்துவிட்டீர்கள் என்று இதுவரை என் மீது விமர்சனம் இந்த இரண்டு மூன்று வருடங்களில் வந்ததே இல்லை. நான் யாரு, என் சாதி என்ன என்று எங்கேயோ ஆய்வு செய்துவிட்டு வந்து, அதைப்பற்றி மட்டுமேதான் விமர்சனம் வைக்கப்படுகிறது. அப்போ நான் மீனவர் அல்ல அதனால் நான் மீனவர்களின் பிரச்சனையைப் பற்றி எடுக்காமல் இருக்க முடியுமா என்ன? இசுலாமியர்கள் மீது நடக்கும் தொடர் தாக்குதலை கண்டித்து நாளை ஒரு படம் எடுக்கலாம். அப்போது நான் இசுலாமியர் இல்லை, ஏன் இசுலாமியர்களை பற்றி எடுப்பீர்கள் என்று கேட்பீர்களா? என்னைப் பொருத்தவரை பெண்ணியம் என்பது பெண்கள் பேசுவது மட்டும் கிடையாது. எல்லோரும் பேச வேண்டும் என்பதுதான் என் பார்வை. இவர்களைப் பற்றியெல்லாம் படம் எடுக்கும்போது அதில் நேர்மை இல்லாமல் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். ஆனால், பின்னணியை மட்டும் வைத்துப் பேசுவது என்னைப்  பொறுத்தவரை தேவையற்றது.

 

 


அதுபோல இந்தப் பிரச்சனைகளை நான் பேசுவது வியாபாரத்துக்காக அல்ல. எல்லா தரப்பு மக்களிடையேயும் என்ஜிஓக்கள் வந்துவிட்டன. அவர்கள்தான் அந்த வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கலை ரீதியாக இந்தப் படங்கள் எனக்கு எதுவும் தரவில்லை. 'கக்கூஸ்' மற்றும் 'ஒருத்தரும் வரேல' படம் எடுத்தும் நான் பெரிதாக சம்பாரித்ததாக எனக்கு தெரியவில்லை. நான் சம்பாரித்தது வழக்குகள், கெட்ட பெயர், நெறுக்கடிகள், தலைமறைவு வாழ்க்கை இவ்வளவுதான். எனக்கென ஒற்றை ரூபா காசுகூட வரவில்லை. நான் இப்படி செய்வதில்லை, செய்பவர்களிடம் நீங்கள் கேட்கலாம் என்று நினைக்கிறேன்."