மஞ்சல் காய்ச்சல் நோய் என்பது ஒரு வகை வைரஸ் தொற்றினால் ஏற்படும் காய்ச்சல். டெங்குவைப் பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்களில் ஏடிஎஸ் ஜேசிஎப்டி என்றும் ஒருவகை கொசுவால் இந்த மஞ்சள் காய்ச்சல் தொற்று பரவுகிறது. கொரோனா, டெங்கு போன்ற வைரஸ் தொற்று சிகிச்சையைப் போன்றுதான் இந்த காய்ச்சலுக்கும் அதன் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆப்பிரிக்கா, தெற்கு அமெரிக்க நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால், இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளுக்கு செல்பவர்களும், அந்த நாடுகளில் இருந்து இந்தியா வருவோர்களும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மஞ்சள் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசியைப் செலுத்திக் கொண்ட 10 நாட்களுக்குப் பிறகுதான், மேற்கண்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும். அதே போல், அந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் நுழையவும் அனுமதிக்கப்படுவர். இதற்காக, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மத்திய சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மையங்கள் தமிழகத்தில் மூன்று உள்ளன. பாஸ்போர்ட் மற்றும் மருத்துவ விவரங்கள் ஏதேனும் இருந்தால், தடுப்பூசி மையங்களில் பயணிகள் இந்த ஆவணங்களை காண்பித்து பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சல், உடல் வலி, மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகள் ஏற்படும். மஞ்சள் காய்ச்சல், தடுப்பூசி பற்றிய விவரங்களை https://ihpoe.mohfw.gov.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளது