நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் 13.05.2024 அன்று நடைபெற்றது.
இத்தகைய சூழலில் பிரதமர் மோடி போட்டியிடும் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 7 ஆவது மற்றும் இறுதி கட்டமாக ஜூன் 1 இல் வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி வாரணாசி ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அப்போது உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் உடன் இருந்தனர். 3 வது முறையாக பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ராஜலிங்கம் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.ராஜலிங்கம் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை சுப்பையா திருச்சி என்ஐடி யில் பொறியியல் பட்டம் பெற்றதோடு இந்தியன் வங்கியிலும் பணியாற்றியுள்ளார். ராஜலிங்கத்தின் தாய் மாலையம்மாள் கடையநல்லூர் நகராட்சி கவுன்சிலராக இருந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய ராஜலிங்கம் வெற்றி பெற்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியின் மாவட்ட ஆட்சியராக உள்ளார்.