தமிழகத்தில் கோடை காலம் காரணமாக பரவலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. தமிழகத்தின் பல இடங்களில் கன மழை பொழிந்துள்ளது.
நேற்று நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரயில்வே சுரங்கப் பாதைக்கு அடியில் அரசு பேருந்து ஒன்று மழை நீரில் சிக்கிக் கொண்டது. நேற்று நெல்லையில் ஒரு மணி நேரம் பெய்த கனமழை காரணமாக வள்ளியூரில் இருந்து ராதாபுரம் செல்லக்கூடிய பகுதியில் உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில் மழைநீர் அதிகப்படியாக தேங்கியது. வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் சென்ற பேருந்து மழை நீரில் சிக்கிக் கொண்டது. உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் பேருந்தில் சிக்கிக்கொண்ட 40 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து இன்று மழை நீரில் பேருந்தை செலுத்திய பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பேருந்து சுரங்கப்பாதையில் நுழைவதற்கு முன்பே சிலர் பேருந்தை தடுத்து நிறுத்தி இடுப்பளவிற்கு தண்ணீர் இருக்கிறது. உள்ளே சென்றால் பேருந்து சிக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது என எச்சரித்துள்ளனர். ஆனால் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ரவிக்குமார் எச்சரிக்கையை மீறி பேருந்தை இயக்கி சிக்கிக்கொண்டார். இந்த தகவல் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், தற்பொழுது ஓட்டுநர் ரவிக்குமாரை நாகர்கோவில் கோட்ட மேலாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் சுரங்க பாதைகள் மற்றும் தரைப் பாலங்களில் தண்ணீர் தேங்கி இருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்குமாறு ஓட்டுநர்களுக்கு எஸ்இடிசி மேலாண்மை இயக்குநர் அறிவுறுத்தல் கொடுத்துள்ளார். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் தொலைதூரப் பேருந்துகளை இயக்கும்போது காற்றாற்று சாலைகளில் கவனத்துடன் இயக்க வேண்டும். பேருந்துகளில் தண்ணீர் ஒழுகுவது, சாய்வு இருக்கைகள் இயங்காது போன்ற புகார்கள் வந்தால் ஓட்டுநர்கள் நடத்துநர்கள் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.