Skip to main content

திகிலை நோக்கி சென்னை மண்டலம்!

Published on 08/07/2020 | Edited on 08/07/2020
chennai

 

முழு ஊரடங்கில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அதிக அளவிலான தளர்வால், சென்னை மண்டலம் பெரும் ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முழு ஊரடங்கு காரணமாக கரோனா தொற்றின் வேகம் மட்டுப்பட தொடங்கிவிட்டது என்று சொல்லும் அரசு, அதேநேரம் 6-ந் தேதி முதல் பெரும் தளர்வுகளையும் அறிவித்தது. 

 

ஆனால் சென்னையின் கரோனா மரண எண்ணிக்கை குறைவதற்கு முன்பாகவே, இங்குள்ள தனியார் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் நூறு சதவித தொழிலாளர்களுடன் இயங்கலாம் என்றும் அது பச்சைக்கொடி காட்டியது. பொது போக்குவரத்து இன்னும் தொடங்கப்படாத நிலையில் இப்படி அரசு காட்டிய பச்சைக்கொடியால் சென்னை, அம்பத்தூர், பாடி, கிண்டி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் தனியார் தொழிற்சாலைகள் அனைத்தும் முழு வேகமெடுத்து இயங்க தொடங்கிவிட்டன. 

 

போக்குவரத்து வசதியில்லாமல் தவித்த தொழிலாளர்களிடம் “வேலைக்கு வந்தே ஆகவேண்டும், இல்லையென்றால் வேலையை விட்டு நீக்கிவிடுவோம்” என்று அந்த நிறுவனங்கள் கறாராய் மிரட்டத்தொடங்கியதால், கிடைத்த வாகனங்களில்  ஒருவருக்கு மேற்பட்டோர் அடித்து பிடித்து பயணித்து வேலைக்கு சென்று வர ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால் சென்னை மாநகர சாலைகள் முழுக்க நெரிசலில் திணற தொடங்கிவிட்டது. 

 

தொழில் நிறுவனங்களின் நிர்பந்தத்தால் வேலைக்கு சென்றுவரும் தொழிலாளர்கள் மூலம் அவர்கள் குடும்பத்தினருக்கும் தொற்று பரவும் ஆபத்து மிகுந்திருக்கிறது. இப்போது யார் மூலம் யாருக்கெல்லாம் கரோனா தொற்று பரவுமோ என்ற திகிலோடு தொழிலாளர்கள் வேலைக்கு போய்வருகிறார்கள். 

 

ddd

 

தொழிற்சாலைகள் இயங்கினால் கரோனா பரவுமா? என்று கேட்கலாம். நீலகிரி மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தது கலெக்டர் இன்னோசென்ட் திவ்யா தலைமையிலான மாவட்ட நிர்வாகம். இந்த நிலையில், ஊட்டி அருகே இருக்கும் எல்லநல்லி பகுதியில் இருக்கும் ஒரு தனியார் தொழிற்சாலையில், பணிபுரியும் கோவையை சேர்ந்த பி.ஆர்.ஓ..வுக்கு தொற்று ஏற்பட்டது. அவர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

 

ccc

 

அவரால் அவர் வேலை பார்த்த தொழிற்சாலை ஊழியர்கள் ஏறத்தாழ 100 பேருக்கு கரோனா பரவியது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்த தொழிற்சாலை ஊழியர்கள் மூலம் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களால் இந்த தொற்றின் எண்ணிக்கை 155ஐ கடந்திருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை கண்டறிந்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட பகுதிகள் சீல் வைக்கப்பட்டு, அங்கே திகில் சூழ்ந்திருக்கிறது.

 

admk ministers

 

பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடமாடிய தமிழக அமைச்சர்களான கே.பி.அன்பழகனும், தங்கமணியுமே தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும் நிலையில், எவ்வித பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லாத  தொழிலாளர்கள், பீதியோடு வேலைக்குப் போய்வருகிறார்கள். அரசின் தளர்வுகளால் தொற்று ஆபத்தை நோக்கித்தான் சென்னை மண்டலம் சென்று கொண்டிருக்கிறது.

 

 

 

 

Next Story

ஓசியில் சிக்கன் பக்கோடா தராத கடைக்காரருக்கு கத்திக்குத்து-வெளியான பரபரப்பு காட்சிகள்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
shopkeeper who won't serve chicken baguettes;viral video

சென்னையில் ஓசியில் சிக்கன் பக்கோடா தராததால் கடைக்காரருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை அம்பத்தூர் பகுதியில் சிக்கன் பக்கோடா கடை ஒன்றுக்கு வந்த இளைஞர்கள் சிலர் ஓசியில் சிக்கன் பக்கோடா கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் கடைக்காரர் தர மறுத்ததால் அந்த இளைஞர்கள் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சாலையில் திடீரென சிக்கன் பக்கோடா கடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஹெல்மெட் மற்றும் மரப்பலகையால் கடை உரிமையாளரை தாக்கியதோடு, கத்தியால் கடை உரிமையாளரின் கழுத்தில் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பிடிப்பதற்குள் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பினர் .பக்கோடா கேட்டு தகராறு செய்த அந்த இளைஞர்கள் மது போதையில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போலீசார் ஓசியில் சிக்கன் பக்கோடா கேட்டு தகராறு செய்து கடை உரிமையாளரை கத்தியால் தாக்கிய அந்த இளைஞர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்; மீட்கும் பணியில் ஏற்பட்ட சோகம்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Labor trapped in landslide in chennai

சென்னை, கிழக்கு தாம்பரம் அருகே ஆதிநகர் பகுதி ஒன்று உள்ளது. இங்கு, தாம்பரம் மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனம் மூலம் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. பாதாள சாக்கடைக்கான பள்ளம் தோண்டி பைப்லைன் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று (16-03-24) மாலை திடீரென பள்ளத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், திட்டக்குடியைச் சேர்ந்த தொழிலாளர் முருகானந்தம் என்பவர் மண் சரிவில் சிக்கினார். இந்த சம்பவம் குறித்து அங்குள்ளவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், மண் சரிவில் சிக்கியிருந்த முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

அதில், ஜே.சி.பி வாகன உதவியுடன் தீயணைப்புத் துறையினர், முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது தலை மட்டும் வந்துள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, முருகானந்தனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.