தந்தை பெரியாரை தமிழ்த் தேசியவாதிகள் என்ற போர்வையில் சிலர் ஏக வசனத்தில் சாடிக்கொண்டே இருக்கிறார்கள். இது ஒருவகை மனநோயாகப் பரவிக்கொண்டிருக்கிறது.
பெரியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்றாலும், அவரின் உயரத்தையும் அவரால் இங்கே நிகழ்ந்த மாற்றங்களையும் தெரிந்துகொள்ளாமல், அல்லது தெரிந்து கொண்டே தெரியாததுபோல் காட்டிக்கொண்டு, தந்தை பெரியாரை ஒருவன் விமர்சிக்கிறான் என்றால் ஒன்று, அவன் சாதிமத வெறியனாக இருப்பான் அல்லது மனம் பிறழ்ந்தவனாகத்தான் இருப்பான்.
மூட நம்பிக்கை எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு, ஆபாசப் புராணங்களுக்கான எதிர்ப்பு, பெண்ணடிமைத் தனத்திற்கான எதிர்ப்பு உள்ளிட்டவைதான் பெரியாரின் குரல். இவற்றை எல்லாம் எதிர்ப்பதா தமிழ்த்தேசியம்? தன்னலம் சிறிதுமின்றி தமிழ்ச் சமூகத்திற்காக 94 வயதுவரை ஓயாது உழைத்தவர் பெரியார். ஏதோ, பெரியார் என்றால் அண்ணாவோ, கலைஞரோ, எம்.ஜி.ஆரோ, அல்லது ஆசிரியர் வீரமணியோ அல்ல.
பெரியார் என்பவர் முற்போக்குச் சித்தாந்தத்தின் அடையாளம். மேற்குறிப்பிட்ட இவர்கள் எல்லாம் பெரியாரால் வளர்ந்து, அவரவரும் அவரவர் அளவில் பெரியாரைத் தங்கள் வலிமைக்கு ஏற்ப எதிரொலித்தவர்கள். இயன்றவரை அவர் வழியில் நடந்தவர்கள். இவர்களில் எவரும் பெரியாருக்குச் சமமானவர்கள் இல்லை. ஆனால் சிலர் இவர்களை நினைத்துக்கொண்டு பெரியாரையும் பெரியாரியத்தையும் தாக்குவது தற்குறித்தனம். பெரியார் என்ற முற்போக்குச் சித்தாந்தத்தை எதிர்ப்பவர்களும் இழிவு செய்பவர்களும் எப்படி முற்போக்குவாதிகளாக இருக்கமுடியும்?
கோப தாபம் உள்ளிட்ட தனிமனிதக் குறைகள் எல்லோருக்கும் உண்டு. உலகத் தலைவர்கள் தொடங்கி உள்ளூர்த் தலைவர்கள் வரை விமர்சனங்களுக்கு இடம்கொடுக்கும்படிதான் வாழ்ந்திருக்கிறார்கள். காரல் மார்க்ஸின் சுய ஒழுக்கம் விமர்சிக்கப்படவில்லையா? காந்தியடிகளின் ஒழுக்கம் கேள்விக்குறியாய் ஆக்கபடவிலலையா? புரட்சியாளன் சேகுவேராவின் பல்வேறு பெண்களுடனான காதல், விமர்சனத்துக்கு ஆளாகவில்லையா? புரட்சி இலக்கியவாதியான சிலிநாட்டுக் கவிஞர் பாப்லோ நெரூடாவின் தனிமனித வாழ்க்கை என்ன கறைபடியாத வெள்ளைத் தாளா?
மணியம்மையாரை மணந்ததை மட்டுமே மேலோட்டமாகத் தெரிந்துகொண்டு, பெரியார் மீது குப்பைகொட்ட நினைப்பவர்களுக்கு, அவர்கள் கொட்டுவதெல்லாம் அவர்கள் தலையில்தான் விழும். பெரியாரை விமர்சிக்கும் தலைவர்களில் யார் இங்கே ஒழுக்க சீலர்? குற்றமற்றவர்?
பெரியார் உலக சிந்தனையாளர்களில் ஒருவர். அவரைப் பிடித்து சிமிழுக்குள் அடைத்துவிடலாம் என்ற ஆசையோடு, இவர்கள் வீசும் வலைகள் எல்லாம். சிலந்தி வலைகளாகத்தான் ஆகும். பெரியார் வலைகளுக்குள் சிக்காத எரிமலை.