Skip to main content

சிவசேனாவை டேமேஜ் பண்ண பாஜக போட்ட திட்டம்... சரத்பவாரின் அரசியல் ஆட்டம்... அதிர்ச்சியில் பாஜக!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

அதிகார வெறி எந்த எல்லைக்கும் போகும் என்பதற்கு சாட்சியாகியிருக்கிறது மகாராஷ்ட்ரா. சமீபத்தில் நடந்த மகாராஷ்ட்ரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருந்தும் முதல்வர் பதவியையும் அமைச்சரவையையும் பகிர்ந்துகொள்வதில் இரு கட்சிகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளால் ஆட்சி அமைப்பதில் இழுபறியானது. ஒரு கட்டத்தில், பா.ஜ.க. கூட்டணியை உதறினார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. மகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமலானது.

 

bjp



இந்த நிலையில், பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்ட நினைத்த உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரிடமும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடமும் விவாதித்தார். நெடிய முயற்சிக்குப் பிறகு உத்தவ் தாக்கரே முதல்வராகவும் அவரது தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கவும் மூன்று கட்சிகளிடமும் ஒருமித்த கருத்து உருவாகியிருந்தது. இதனை வெள்ளிக்கிழமை இரவு அறிவித்தார் சரத்பவார். நிம்மதியாக உறங்கச் சென்றனர் மகாராஷ்ட்ரா அரசியல் தலைவர்கள். ஆனால், தூங்கி எழும்போது நிம்மதி கலைந்துபோகும் என அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.
 

shivcena



சனிக்கிழமை விடியற்காலையில் தனது ஆட்சியை அவசர அவசரமாக விலக்கிக் கொண்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். அதே வேகத்தில், பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸை முதல்வராகவும், தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும் சரத்பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவாரை துணை முதல்வராகவும் பதவிப் பிரமாணம் செய்துவைத்த கவர்னர் பகத்சிங், நவம்பர் 30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்கவும் கேட்டுக்கொண்டார். இந்த அரசியல் அதிரடி மகாராஷ்ட்ராவை தாண்டியும் அதிர்வை ஏற்படுத்தியது.
 

bjp



ஆளுநரின் முடிவுக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்சநீதி மன்றத்தை அவசர அவசரமாக அணுகின. நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக்பூஷன், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. ஆளுநரின் அதிகாரம், சட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள், நீதிமன்றத்தின் அதிகாரம் ஆகியவை குறித்து மூத்த வழக்கறிஞர்கள் கபில்சிபில், அபிசேக் சிங்வி அரசுத்தரப்பில் ஆஜரான முகுல் ரோத்தஹி ஆகியோர் எடுத்துரைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஆட்சியை விலக்கிக்கொள்ள கவர்னர் பரிந்துரைத்த கடிதம், பா.ஜ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதம், பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க எம்.எல். ஏ.க்கள் கொடுத்த ஆதரவுக் கடிதம் ஆகியன திங்கள் கிழமையன்று தாக்கல் செய்யப்படவில்லை. தீர்ப்பை மறுநாளுக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்.

பா.ஜ.க.வின் இந்த சித்து விளையாட்டுகள் குறித்து விசாரித்தபோது, "உத்தவ்தாக்கரேவும் சரத் பவாரும் எடுத்த முயற்சியினால் மூன்று கட்சிகளும் ஒரே நேர்கோட்டுக்குள் சங்கமித்தன. இதனை மோடியும் அமித்ஷாவும் எதிர்பார்க்கவில்லை. இதை ஜீரணிக்க முடியாத அமித்ஷா, "பா.ஜ.க. எம்.பி.க்கள் இருவரை சரத்பவாரை சந்திக்க வைத்தார். அதில், "நம்பகத்தன்மையற்ற சிவசேனாவை ஆதரிக்க உங்கள் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்கிறபோது அதே நிலைப்பாட்டை பா.ஜ.க.வை ஆதரிப்பதில் எடுக்கலாமே' என தூண்டில் வீசினார்கள்.

சரத்பவார் இதற்கு செவிசாய்க்காத நிலையில், "பிரதமர் உங்களை சந்திக்க விரும்புகிறார் என்பதையும் எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள். இதனையடுத்து மோடியை சந்தித்தார் சரத்பவார். அந்த சந்திப்பில் சிவசேனா குறித்தே அதிகம் பேசியிருக்கிறார் பிரதமர். சந்திப்பைத் தொடர்ந்து, சோனியாவிடமும் உத்தவ்தாக்கரேவிடமும் விவாதித்தார் பவார். அப்போதுதான், ’பா.ஜ.க.வின் அதிகாரத் திமிரை உடைக்க சிவசேனா ஆட்சி அமைய வேண்டும் என உத்தவ் தாக்கரே ஆவேசப்பட, அதன் பிறகே காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா கூட்டணி உறுதியானது. அதிர்ச்சியடைந்த மோடியும் அமித்ஷாவும் தங்களது அரசியலை விளையாட தீர்மானித்தார்கள்.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசில் எம்.எல்.ஏ.க்களாக உள்ள மூத்த உறுப்பினர்களிடம் ஆரம்பத்திலிருந்தே அமித்ஷாவின் தூதராக மிக ரகசியமாக இயங்கி வந்தார் பா.ஜ.க. எம்.பி. சஞ்சய் காக்டே. குறிப்பாக, தேசியவாத காங்கிரஸின் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அஜித்பவாரை தன் பிடியில் வைத்திருந்தார் சஞ்சய். தேசியவாத காங்கிரசின் 54 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் அஜித்பவாரிடம் இருப்பதை வைத்தே துல்லியமாக திட்டமிட்ட அமித்ஷா, அஜித்பவாரிடம் ரகசியமாக விவாதிக்க... வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அனைத்தும் ரகசியமாக அரங்கேறின.


ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லிக்கு வருவதாக இருந்த கவர்னரை, மும்பையிலேயே இருக்குமாறு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டது. ஜனாதிபதி ஆட்சியை விலக்கிக் கொள்ள அமைச்சரவையின் ஒப்புதல் அவசியமின்றி ஜனாதிபதிக்கு பிரதமர் பரிந்துரை செய்ய சட்டத்தில் இடமிருப்பதை பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சியை விலக்கிக்கொள்ள ராம்நாத்கோவிந்துக்கு பரிந்துரை செய்கிறார் மோடி.

சனிக்கிழமை விடியற்காலையில் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டது. அதே வேகத்தில் பட்னாவிஸும் அஜித்பவாரும் கவர்னர் மாளிகைக்கு விரைந்து செல்ல, டெல்லியின் உத்தரவின்படி விடியற்காலையில் அரங்கேறியது மோடியின் சித்து விளையாட்டு'' என்கின்றனர் மும்பை பத்திரிகையாளர்கள்.

அஜித்பவாரின் நம்பிக்கை துரோகம் சரத்பவார் குடும்பத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், தேசியவாத காங்கிரசின் எம்.எல்.ஏ.க் கள் 54 பேரில் 53 பேரின் ஆதரவு சரத்பவாருக்கே இருந்தது. அஜித்துடன் 13 எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மாளிகைக்கு சென்றிருந்தாலும் சனிக்கிழமை இரவே அவர்கள் சரத்பவாரிடம் திரும்பிவிட்டனர். இந்த நிலையில், சட்டமன்ற தலைவர் பதவியிலிருந்து அஜித்பவாரை நீக்கியதுடன் புதிய தலைவராக ஜெயந்த்பாட்டீலை நியமித்தார் சரத்பவார்.

அஜித்பவார், பா.ஜ.க. பிடியில் சிக்கியது குறித்து மத்திய உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘"முந்தைய காலங்களில் காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் கூட்டணி ஆட்சி அமைத்தபோது அதில் துணை முதல்வராக இருந்தவர் அஜித்பவார். அப் போது விவசாயம் மற்றும் பாசனத் திட்டங்களில் நடந்த 70 ஆயிரம் கோடி ஊழலிலும், மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கிகளில் நடந்த 20 ஆயிரம் கோடி ஊழலிலும் அஜித்தின் மீது குற்றம்சாட்டப்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இந்த வழக்கு வேகம் பிடித்தது. அதை வைத்தே அஜித்தை வளைத்தது பா.ஜ.க. தலைமை''’ என்கின்றனர்.

மகராஷ்ட்ரா அரசியல் ரகசியங்கள் அறிந்த அரசியல் வியூகம் வகுப்பாளர்களிடம் பேசியபோது, "மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க.வை விட சிவசேனாவின் வளர்ச்சிதான் தேசியவாத காங்கிரசுக்கு செக் மேட். அதனால் சிவசேனாவை பலகீனப்படுத்துவதில் பவாருக்கு எப்போதும் ஒரு திட்டமிருக்கும். சிவசேனாவை பா.ஜ.க. தொட்டால் அவர்கள் பூதாகரமாவார்கள் என்பதுதான் மராத்திய கள நிலவரம். அதனால் உத்தவ்தாக்கரேவை சரத்பவாரை வைத்துத்தான் பலகீனப்படுத்த முடியும் என நினைத்தே அவரை அழைத்தார் மோடி. இருவரும் போட்ட திட்டத்தின்படியே எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.

சரத்பவாரை வைத்து சிவசேனா இமேஜை காலிபண்ண மோடி திட்டமிட, மோடியே அறியாத வகையில் பவார் ஒரு கேம் ப்ளான் போடுகிறார். "பா.ஜ.க.வை நேரடியாக நான் ஆதரிக்க முடியாது. அஜித்தை வைத்து நீங்கள் ஆடலாம். அதற்கு முன்பாக உத்தவ்தாக்கரேவை முதல்வராக நாங்கள் ப்ரொஜெக்ட் பண்ணிடுவோம். அப்போது உங்கள் வேலையைத் துவக்குங்கள்' என பச்சைக் கொடி காட்டியிருக்கிறார் பவார். இதற்கு சில காரணங்கள் உண்டு. உத்தவ்தாக்கரே தலைமையில் உருவாகப்போகும் ஆட்சியை ஓவர் நைட்டில் தடுத்து ஜனநாயக படுகொலையை பா.ஜ.க. நடத்தியிருக்கிறது என்பதன் மூலம் பா.ஜ.க.வை தேசத்தின் எதிரியாக சித்தரிக்க முடியும். அதேசமயம், உத்தவ் தாக்கரே தடுக்கப்பட்டதன் மூலம் எழும் சட்டச் சிக்கலில் பா.ஜ.க. ஆட்சி வீழ்ந்து மீண்டும் மூன்று கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால், ஐந்தாண்டுக்கு முதல்வராக உத்தவ்தாக்கரே இருப்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து அவரை பலகீனமாக்க முடியும் ஆகியவையே பவாரின் கணக்கு. அதற்கேற்பத்தான் காய்கள் உருட்டப்பட்டன''’ என்கிறார்கள்.

சி.பி.ஐ.யில் டெல்லியில் பணிபுரியும் தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரிடம் விசாரித்த போது, "கட்சிகளை உடைப்பதும், மிரட்டுவதும் பா.ஜ.க.வுக்கு புதிதல்ல. இதற்காகவே சி.பி.ஐ., வருமானவரித்துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகளை அரசியல் ஆயுதங்களாக பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆளுங்கட்சியை உடைப்பது, கட்சித்தாவல் தடைச்சட்டம் பாயாத வகையில் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைப்பது, சட்டச் சிக்கல்களிலிருந்து காப்பாற்றுவது என பா.ஜ.க. போடும் திட்டங்கள் ஒவ்வொரு ரூபத்தில் வலிமையடைந்து வருகிறது. அதன் ஒரு வடிவம்தான் மகாராஷ்ட்ரா'' என சுட்டிக்காட்டுகிறார்கள். கர்நாடகா, கோவா, மகாராஷ்ட்ராவை தொடர்ந்து மோடி, அமித்ஷாவின் ஆக்டோபஸ் கைகளில் அடுத்த இலக்கு தமிழகம்தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.