Skip to main content

தங்க தமிழ்செல்வன் அமைச்சராகும் வாய்ப்பை தடுத்த தினகரன்: கே.சி.பழனிசாமி அதிரடி

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

 

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளில் அமமுக தோல்வி அடைந்ததால், மக்கள் அமமுகவை ஏற்கவில்லை என்று அமமுகவில் கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
 

தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து விலகியது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி.
 

அமமுக துவங்கியபோது டிடிவி தினகரனுடன் பக்க பலமாக இருந்தவர்கள் சாமி, செந்தில்பாலாஜி, தங்க தமிழ்செல்வன். இதில் சாமி உடல்நிலை சரியில்லாமல் காலமானார். செந்தில்பாலாஜி திமுகவுக்கு சென்றார். தங்க தமிழ்செல்வன் தற்போது அமமுகவில் இருந்து வெளியேறியிருப்பது பற்றி...
 

தினகரனை நம்பி சென்றவர்கள் யார் என்றால், அதிமுகவைச் சேர்ந்த ஒரு சிலரும், அந்த குடும்பத்தால் பலன் அடைந்தவர்களும்தான். முதலில் அதிமுக தலைமையை கைப்பற்றுவோம் என்று தினகரன் சொன்னார். அதுவரை அவர் பின்னால் சென்றவர்கள் அவருடன் இருந்தனர். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற பின்னர் தினகரன், சின்னம் ஒரு பொருட்டே கிடையாது. இரட்டை இலைக்கு வேல்யூ கிடையாது. அமமுகவில் அதிமுக இணைய வேண்டும் என தன்னை மிகப்பெரிய தலைவராக காட்டிக்கொண்டார். 

 

ttv dinakaran - thanga tamilselvan


 

இதனை ஏற்றுக்கொள்ளாத அதிமுக தொண்டர்கள் அவரைவிட்டு தள்ளி வந்துவிட்டனர். அப்படி தள்ளி வந்ததன் முடிவுதான் இந்த தேர்தலின் முடிவுகள். இந்த முடிவுகள் வெளியானவுடன் அமமுகவில் இருந்த  இரண்டாம் கட்ட தலைவர்களும் அமமுகவை மக்களும், அதிமுக தொண்டர்களும் ஏற்கவில்லை என்று உணர்ந்தனர். அமமுக என்பது அதிமுகவுக்கு சம்மந்தமில்லாத ஒரு அமைப்பாக இருக்கிறது என்று உணர்ந்தனர். இதனால்தான் அதிமுகவால் உருவானவர்கள் அமமுகவில் இருந்து வெளியேறுகிறார்கள். தங்க தமிழ்செல்வனும் அதேபோல்தான் வெளியேறியுள்ளார்.
 

ஒவ்வொரு கட்சியிலும் தலைமை மீதும், நிர்வாகிகள் மீதும் சலிப்புகள் இருக்கும். அதனை சக கட்சிக்காரர்களுடன் பகிர்ந்து கொள்வது இயற்கை. வெளியே பேசும்போது, எங்கள் தலைவர், எங்கள் உயிர் என்றுதான் பேசுவார்கள். இது எல்லா கட்சியிலும் நடக்கிற ஒன்றுதான். அப்படி தங்க தமிழ்செல்வன் பேசியபோது, பதிவு செய்து தினகரன் தரப்புத்தான் வெளியிட்டது. 
 

ஏனென்றால் அதிமுகவில் தங்க தமிழ்செல்வன் எம்எல்ஏவாக, எம்பியாக இருந்தவர், மேலும் கட்சியில் பல பொறுப்புகளை வகித்தவர். அவர் அமமுகவில் இருந்து வேறு கட்சிக்கு செல்லும்போது அவருடன் யாரும் செல்லக்கூடாது என்பதற்காக இப்படி செய்துள்ளனர். 
 

தங்க தமிழ்செல்வனை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்று கூறுகிறார்களே...
 

அந்த அளவுக்கு அரசியலில் ஒன்றுமே தெரியாதவரா தங்க தமிழ்செல்வன். ஓ.பன்னீர்செல்வம் முதல் அமைச்சராக இருந்தபோதே அவரை எதிர்த்து அரசியல் செய்தவர். 


 

K. C. Palanisamy


 

ராஜ்யசபா சீட்டுக்கு ஆசைப்பட்டுத்தான் அவர் கட்சி மாற நினைக்கிறார் என்று அமமுகவினர் கூறுகிறார்களே...


இதெல்லாம் ஒரு யூகமாகத்தான் இருக்கும். அதிமுகவில் ஏற்கனவே மூத்த நிர்வாகிகள் உள்ளனர். அவர்கள் விடுவார்களா? எடப்பாடி பழனிசாமிதான் முதல் அமைச்சர் என சசிகலா தேர்வு செய்தபோது, ஓ.பன்னீர்செல்வம் தனியாக சென்றார். அப்போது தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பிரிந்ததால் அந்த மாவட்டத்திற்கு தங்க தமிழ்செல்வனை அமைச்சராக்கலாம் என்று தங்கமணி, வேலுமணி, எடப்பாடி பழனிசாமி மூன்று பேரும் பேசியிருக்கிறார்கள். ஆனால் தினகரன், தங்க தமிழ்செல்வனை அமைச்சராக்கக்கூடாது என்று சொல்லியுள்ளார். பின்னர் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இணைந்த பிறகு, ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை பெற்றார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இருக்க முடியாது என்று தினகரன் பக்கம் வந்தார் தங்க தமிழ்செல்வன். பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் அன்றைக்கே அமைச்சர் பதவியை பெற்றிருப்பார் தங்க தமிழ்செல்வன். 
 

தங்க தமிழ்செல்வனை அதிமுகவில் இணைக்க விரும்புவாரா எடப்பாடி பழனிசாமி? 
 

தங்க தமிழ்செல்வனை அதிமுகவில் பயன்படுத்த நினைப்பார் எடப்பாடி பழனிசாமி. ஏனென்றால் எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே பிரச்சனை ஏற்பட்டால் தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கை ஓங்காமல் இருக்க, தங்க தமிழ்செல்வனை பயன்படுத்த நினைப்பார்.