Skip to main content

தனக்குதானே பிரசவம் பார்த்த செவிலியர்; குழந்தையின் காலை வெட்டி கொன்ற கொடூரம்!

Published on 10/05/2024 | Edited on 10/05/2024
nurse who gave birth to herself because she got pregnant before marriage

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினிஷா. 24 வயதான இவர், செவிலியர் படிப்பை முடித்த பின்னர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த ஓராண்டாக செவிலியராக பணியாற்றி வந்தார். தொடர்ந்து, அதே மருத்துவமனையின் ஊழியர்கள் தங்கியிருக்கும் தி.நகர் தெற்கு போக் சாலையில் உள்ள மருத்துவமனை ஊழியர் குடியிருப்பில் தங்கி பணி செய்து வந்தார்.

இந்நிலையில், சென்னையில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணி செய்துவரும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த 29 வயதுடைய  செல்வமணி  என்பவருடன் செவிலியர் வினிஷாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பு ரீதியாக தொடங்கிய பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். மேலும், திருமணத்திற்கு முன்பே கணவன் மனைவி உறவில் இருவரும் இருந்ததால், வினிஷா கர்ப்பமாகியுள்ளார். ஆனால், வினிஷாவின் குடும்பத்தினருக்கும், உடன் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இந்த விவகாரம் தெரியாது எனச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி அதிகாலை 5.20 மணியளவில் வினிஷாவிற்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே, அது பிரசவ வலி என்பதை உணர்ந்த வினிஷா குடியிருப்பில் தங்கி இருந்து மற்ற தோழிகள் உட்பட யாரிடமும் தகவல் தெரிவிக்காமல், குடியிருப்பு குளியலறைக்கு சென்று வலியால் துடித்துள்ளார். செவிலியர் என்பதால் சுயமாக பிரசவம் செய்ய முடிவெடுத்தவர், தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். அப்போது, வயிற்றில் இருக்கும் குழந்தை வெளியே வர தாமதமாகி உள்ளது. இதனால், செய்வது அறியாமல் தவித்தவர் ஒருவழியாக குழந்தை வெளிவர அதன் கழுத்தை பிடித்து வெளியே இழுத்துள்ளார். பின்னர், வினிஷா மயங்கி உள்ளார்.

இதையடுத்து, வினிஷா தனது அறையில் இருந்து நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவரது தோழிகள் சந்தேகம் அடைந்தனர். உடனே, அவரது அறைக்குச் சென்றவர்கள் குளியலறையில் மயங்கிய நிலையில் வினிஷா மற்றும் கால்கள் வெட்டப்பட்டு இறந்த நிலையில் பச்சிளம் குழந்தை கிடப்பதை பார்த்து பதறிப்போய்யுள்ளனர். இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் வினிஷாவையும், குழந்தையையும்  எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு,  வினிஷாவிற்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

இதற்கிடையில், இறந்த குழந்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  அதில்,தான் அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது, பச்சிளம் குழந்தை கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதையடுத்து, பிறந்த குழந்தை இறக்கச் செய்தல் மற்றும் கொலை வழக்கில் செவிலியர் வினிஷாவை மாம்பலம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதனிடயே, நடந்த சம்பவம் குறித்து பேசிய போலீசார், ''திருமணத்துக்கு முன்னர் கர்ப்பமானதால் வினிஷா அவரது கர்ப்பத்தை குடும்பத்தினர், தோழிகள், சக பணியாளர்களிடமிருந்து மறைத்துள்ளார். ஆனால், பிரசவவலி ஏற்பட யாருக்கும் தெரியாமல் தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். குழந்தை ஒருவழியாக பிறந்தவுடன வெளியே தெரிந்தால் சிக்கல் ஏற்படும் என்று நினைத்தவர் குழந்தையின் கால்களை வெட்டி எறிந்துள்ளார். மேலும், குழந்தையின் கழுத்தை நெரித்துக்கொலை செய்தது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்தது. இதனால், கொலை வழக்கில் அவரை கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என நடந்த சம்பவத்தின் பின்னணியை போலீஸார் கூறினர்.

சென்னையில் செவிலியர் ஒருவர் தனக்கு தானே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

சாராயம் காய்ச்சி குடித்த நபர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Published on 12/07/2024 | Edited on 13/07/2024
People admitted to hospital after drinking liquor

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மழுவங்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன்(65).  அடுப்புக்கரி வியாபாரம் செய்து வரும் இவர் தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக சாராயம் காய்ச்சி வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவல் மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் ஏழுமலைக்குத் தெரியவர, உடனடியாக  மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருடன் தேவன் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தியுள்ளார்.

சோதனையில்  சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த ஊறல் மற்றும் காய்ச்சி வைத்திருந்த 20 லிட்டர் சாராயத்தைக் கைப்பற்றினர். மேலும் தேவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியபோது, சாராயத்தைக் காய்ச்சி தன்னிடம் வேலை செய்யும் மணி, பெருமாள், அய்யனார், ராதா கிருஷ்ணன், மதுரை ஆகிய 5 பேருக்கு குடிக்கக் கொடுத்ததாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவ குழுவினர் அதில் 3 பேரை  பிடித்து முழு மருத்துவ பரிசோதனை செய்தனர். மூவருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என்று  மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் முன்னெச்சரிக்கைக்காக அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். எஞ்சியுள்ள 2 பேருடன் சேர்த்து 5 பேரும் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்; கோவையில் பரபரப்பு 

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
teacher misbehaving with schoolgirls

கோவை அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில், 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில், பால்ராஜ் என்பவர் நூலக பொறுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் அப்பள்ளியில் பயின்று வரும் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். நாளாக நாளாக பால்ராஜின் தொந்தரவு அதிகரிக்க, ஆத்திரமடைந்த மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்குச் சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் நூலக பொறுப்பு ஆசிரியர் பால்ராஜை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இந்த நிலையில் இது சம்பந்தமான புகார் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், குழந்தை நல வாரிய அதிகாரிகளுக்கும் சென்றுள்ளது. 

உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று மாணவிகளிடம் தனித்தனியே விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, பால்ராஜ் மேலும் இரு மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தை நல அதிகாரிகள் ஆர்.எஸ்.புரம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார் பால்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.