Skip to main content

ராஜேஷ்தாஸ் லீலைகள்! அம்பலப்படுத்தும் அதிகாரிகள் வாட்ஸ் ஆப்! - இ.பி.எஸ். டோட்டல் அப்செட்!

Published on 08/03/2021 | Edited on 08/03/2021

 

ddd

 

‘விக்ரம் வேதா’ படத்தில், "நான் ஒரு கதை சொல்லட்டுமா சார்'’ என காவல் துறையில் நடக்கும் குளறுபடிகளை மாதவனுக்கு விஜய்சேதுபதி மெல்ல மெல்ல புரியவைப்பார். தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் பாலியல் குற்றச்சாட்டு விவகாரமும் அப்படித்தான் இருக்கிறது.

 

தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரும் இணைந்துள்ள டி.என்.ஐ.பி. எஸ்.ஏ. வாட்ஸ்அப் குழுவில், எரிந்த கட்சி - எரியாத கட்சி போல, கச்சைக்கட்டி விதவித தகவல்கள் வெளியாகின்றன. இந்த வாட்ஸப் குழுவின் அட்மின் தனக்கெதிரான, தவறான, பெயரைக் கெடுக்கும் பிரச்சாரத்தைத் தடுக்க வேண்டும் என ராஜேஷ்தாஸே கொந்தளிக்குமளவுக்கு விஷயம் போயுள்ளது.

 

6 மாதங்களுக்கு முன் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்ட ராஜேஷ்தாஸ், சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. திரிபாதியின் அறைக்கு நேரெதிர் அறையில் தனது பணியைத் துவக்கினார். கடந்த சில மாதங்களாகவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கும் ஆய்வுக்கூட்டம், தேர்தல் பரப்புரைக்காக சென்றுகொண்டிருப்பதால் அவர் செல்லுமிடங்களை முன்கூட்டியே ஆய்வுசெய்யும் பணி ராஜேஷ்தாஸ் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரூர் வந்திருந்தார் ராஜேஷ்தாஸ். அப்போது, குறிப்பிட்ட மாவட்ட எல்லையில் தன்னை வரவேற்ற பெண் எஸ்.பி.யைத் தன்னோடு அவர் அழைத்துச் செல்லவே, இருவரும் ஒருவரோடு ஒருவர் மனரீதியாக ஐக்கியமாகி, பிறகு கரூர் மாவட்டம் புகளூர் காகித ஆலைக்குச் சொந்தமான கெஸ்ட் ஹவுஸ் வரை நெருக்கம் நீடித்திருக்கிறது.

 

இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதியன்று திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு முதல்வர் வருகை தந்தபோதும், தனது மாவட்ட எல்லையில் இவரை வரவேற்ற பெண் எஸ்.பி.யை சென்னைக்குத் திரும்பிச் செல்லும்போது கள்ளக்குறிச்சியில் இறக்கிவிட்டிருக்கிறார் ராஜேஷ்தாஸ்.

 

அப்போது, அந்த பெண் எஸ்.பி.யை அழைத்துச் செல்வதற்காக அவருடைய வாகனமும் அந்த இடத்தில் காத்திருந்த நிலையில், அம்மாவட்டத்தின் சார்பாக இவரை வரவேற்பதற்காக எஸ்.பி. ஜியாவுல் ஹக், வடக்கு மண்டல ஐ.ஜி. சங்கர் ஆகியோரும் அங்கே நின்றிருக்கிறார்கள். அதிகாலை நேரத்தில் ராஜேஷ் தாஸுடன் பெண் எஸ்.பி.யும் வந்ததைப் பார்த்தவுடன் அவர்கள் இருவரின் முகமும் வெளிறிவிட்டதாம். இந்த விஷயம் மேலிடத்திற்குச் செல்லவே, ரகசியமாக விசாரித்து வந்திருக்கிறார்கள் உளவுத்துறையினர். இதுபற்றி குறிப்பிட்ட அந்த எஸ்.பி.யிடமும் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

 

'இந்த நிலையில்தான் பெண் எஸ்.பி., தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ராஜேஷ்தாஸ் மீது புகாரளித்திருக்கிறார். இது ஒருதரப்பு அதிகாரிகளின் வாட்ஸ்ஆப் கதையாடல். இதற்கு நேர் எதிராக, ராஜேஷ்தாஸின் பழைய கதைகளைக் கிளறி, திருச்சி, தூத்துக்குடி என தமிழகத்தின் பல இடங்களிலும் அவர் பணியில் இருந்தபோது மேற்கொண்ட லீலைகளை அம்பலடுத்தியிருந்தது இன்னொரு தரப்பு அதிகாரிகள் டீம். பெண் எஸ்.பி.யின் மாவட்டத்தில் தீவிர தொடர் கொள்ளை, மாவட்ட தலைநகரிலேயே கொள்ளைகள் எனப் பெருகிய நிலையில், சட்டம் - ஒழுங்கு குறித்த கேள்வி எழுந்தது.

 

அத்துடன் அ.தி.மு.க. வி.ஐ.பிகளின் சிபாரிசுகளுக்குப் பெண் எஸ்.பி. மதிப்பளிப்பதில்லை என்று ஆளுந்தரப்பு மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான அந்த வி.ஐ.பி.யிடம் புகார் தெரிவித்தனர் அ.தி.மு.கவினர். இது மேலிடம் வரை செல்ல, எஸ்.பி.க்குப் பணிமாறுதல் வரப்போவதாக காவல்துறையினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டவர்களுக்குப் பணிமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.

 

அந்தப் பட்டியலில் எஸ்.பி.யின் பெயரும் இடம்பெற்று இருந்துள்ளதாம். இந்தச் செய்தி எஸ்.பி.க்குத் தெரியவர, சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மூலம் தனது பணி மாறுதலைத் தடுத்து நிறுத்திவிட்டார். இதன் பிறகே முதல்வர் எடப்பாடி பழனிசாமி கரூர் விசிட் வந்தபோது பாதுகாப்புக்கு வந்த டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் எஸ்.பி.யை சந்தித்துப் பேசியுள்ளார்.

ddd

 

கரூர் விசிட் முடிந்து சென்னை திரும்பும்போது, டி.ஜி.பி. காரில் ஒன்றாக எஸ்.பி. பயணம் செய்துள்ளார். அந்தக் காரை பின்தொடர்ந்து எஸ்.பி.யின் காரும் சென்றுள்ளது. அப்போது, ராஜேஷ்தாஸ் தன்னுடைய காருக்கு எஸ்.பி.யை அழைத்துள்ளார். உயரதிகாரி மற்றும் பணி மாறுதலைத் தடுக்க உதவியவர் என்ற மரியாதையில் எஸ்.பி.யும் காரில் ஏற, கூடுதல் டி.ஜி.பி. சில்மிஷமாக நடக்க, அடுத்த மாவட்ட எல்லையில் வரவேற்க நின்ற உயரதிகாரிகளைப் பார்த்ததுடன், பதறியடித்து இறங்கிய பெண் எஸ்.பி.யின் நிலையை அங்கிருந்த அதிகாரிகள் உணர்ந்துகொண்டனர். பெண் எஸ்.பி.யை அவரது காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர் என காவல் உயரதிகாரிகளின் வாட்ஸ்-அப்பில் அம்பலப்படுத்தியுள்ளனர்.

 

இது ஒருபுறமிருக்க எஸ்.பி.யை சென்னைக்கு வரவிடாமல் தடுத்த எஸ்.பி. கண்ணனுக்கு தமிழக அரசு அளித்த சிறந்த காவலருக்கான பதக்கத்தைத் திரும்பப்பெற வேண்டும் எனவும் குரல்கள் எழத்தொடங்கியுள்ளன.

 

மொத்தத்தில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில், தன்கீழ் வரும் காவல் துறையிலேயே இத்தனை சர்ச்சையா… என எடப்பாடி பழனிசாமி டோட்டல் அப்செட்டாக, முதல்வரின் கீழ் உள்ள காவல்துறையில் பெண் எஸ்.பிக்கே பாதுகாப்பில்லை என கனிமொழி தலைமையில் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளது தி.மு.க.

 

- எஸ்.பி.எஸ்., மகேஷ்


 

Next Story

‘ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி’ - உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Rajesh Das petition dismissed High Court in action

தமிழக சிறப்பு டி.ஜி.பி. பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பெண் எஸ்.பி.யை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி. அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. அதன் பின்னர் ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த ஆண்டு (16.06.2023)  தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்த தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து ராஜேஸ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (23.04.2024) மீண்டும் நீதிபதி தண்டபானி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஷ்தாஸ் சரணடைய விலக்களிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததுடன் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

Next Story

இரட்டை இலை சின்னம் வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Madras High Court action decision on double leaf symbol case

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. 

அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. 

அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியின் தரப்பு வாதம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (18-03-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், ‘அதிமுக இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதித்திருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.