Skip to main content

குடிக்க தண்ணீர் கொடுக்கவில்லை; வாஷிங் மிஷின் கொடுப்போம் என்கிறார்கள்! - உதயநிதி விமர்சனம்!

Published on 26/03/2021 | Edited on 26/03/2021

 

k


தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது. திமுக, அதிமுக கட்சிகள் தேர்தலை முன்னிட்டு பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து பிரச்சாரத்தை முன்னெடுக்கிறது. திமுக தரப்பில் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இந்த தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது, வாரிசு அரசியல் என்று உங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாகப் பல்வேறு கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,


கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நாம் தேர்தல் தொடர்பாகப் பேசி இருந்தோம். தற்போது நீங்கள், திமுக வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளீர்கள். உங்கள் தந்தை ஸ்டாலினை விமர்சனம் செய்பவர்கள் கூட அவர் அரசியலில் கடந்து வந்த பாதையை ஏற்றுக்கொள்வார்கள். அண்ணா காலத்தில் ஆரம்பித்து 'மிசா' சிறை வாசத்தைப் பார்த்து, மேயராக, பிறகு அமைச்சராக இருந்துள்ளார். நீங்கள் இளைஞரணித் தலைவராகப் பொறுப்பேற்றீர்கள். தற்போது சட்டமன்ற வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளீர்கள். இது எதிர்க்கட்சிகள் உங்களை விமர்சனம் செய்ய ஏதுவாக இருப்பதாகப் பொதுவாகக் கூறுகிறார்கள். இதை எப்படிக் கடந்து செல்கிறீர்கள்?


தலைவர் தனது 14 வயதில் இருந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் கால் தடம் படாத இடமே தமிழகத்தில் இல்லை என்று கூறலாம். ஏறக்குறைய தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் கட்சிக் கொடி ஏற்றியுள்ளார். நானும் சிறு வயதில் இருந்தே திமுகவில் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். தேர்தல் பிரச்சாரத்துக்கு தொடர்ந்து சென்று வந்துள்ளேன். தலைவர் கலைஞர் உடன் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்துள்ளேன். அவர் பேசுவதை அருகில் இருந்து பார்த்துள்ளேன். அப்படி வளர்ந்தவன் நான். அரசியல் எனக்கு புதிது அல்ல. அப்போது இந்த மாதிரி செல்ஃபோன்கள் கிடையாது, சமூக ஊடகங்கள் கிடையாது. தாத்தாவுக்காக சேப்பாக்கத்தில் வீடு வீடாகப் பிரச்சாரம் செய்துள்ளேன். அப்பாவுக்காக ஆயிரம் விளக்கில் நிறைய முறை பிரச்சாரம் செய்துள்ளேன். எனவே அரசியலுக்கு அவர்கள் கூறுவது போன்ற நேற்றைக்கு வரவில்லை. தொடர்ந்து அரசியலில் தான் இருக்கிறேன். சினிமாவுக்கு வந்த பிறகு கொஞ்சம் ஒதுங்கி இருந்தேன். பிறகு தலைவர் ஒருநாள் கூப்பிட்டு கிராம சபைக் கூட்டத்திற்கு நீ செல்ல வேண்டும் என்று கூறினார். பிறகு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்கும் என்னை அனுமதித்தார். இந்த கூட்டங்கள் என்னை அரசியல் ரீதியாகத் தயார்ப்படுத்த மிகவும் உதவியாக இருந்தது. 


கட்சி ரீதியாக நீங்கள் செய்வதைக் கூறியிருக்கிறீர்கள். உங்கள் மீதான விமர்சனத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள். அதற்கு உங்களிடம் என்ன பதில் இருக்கிறது? 


அவர்கள் கூறுவதற்கெல்லாம் நம்மால் பதில் அளித்துக்கொண்டிருக்க முடியாது. அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகச் செய்கிறார் என்று பெருமையாகச் சொல்ல வேண்டும். அதற்காகத்தான் நான் தொடர்ந்து கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். நான் இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பேற்ற அன்றே உங்களுக்கு எப்படி இந்த பொறுப்பை வழங்கினார்கள் என்று கேட்டார்கள். இது குடும்ப அரசியல் என்று கூறினார்கள். ஆமாம், என்னிடம் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டது. அதற்கு உண்மையாக உழைக்க எனக்கு நேரம் தர வேண்டும். அதன் பிறகு தவறு இருந்தால் என்னை விமர்சனம் செய்யுங்கள் என்று தான் தெரிவித்திருந்தேன். 


அனிதாவில் தொடங்கி சிஏஏ போராட்டம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் திமுக போராட்டம் நடத்தியுள்ளது. ஆனால், பிரச்சாரத்தில் இதை எல்லாம் தாண்டி பெண்களுக்குப் பணம் கொடுப்போம் போன்ற வாக்குறுதிகள் தான் பிரதானமாக இருக்கிறது. போராட்டங்களை பிரதானப்படுத்துவதை விட்டுவிட்டு இந்த மாதிரியான அறிவிப்புகள் அதிகம் பேசப்பட்டு வருவது ஏன்? 


அனைத்தையும் செய்கிறோம், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதி தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. சிஏஏ சட்டம் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து எதிர்ப்போம் என்று தெரிவித்துள்ளோம். நான் பல்வேறு இடங்களில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்துவருகிறேன். குடிக்கத் தண்ணீர் தரமாட்டேன் என்கிறார்கள். அவர்கள் தரும் வாஷிங் மிஷினை வைத்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று என்னிடம் கேட்கிறார்கள். நாங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம்தோறும் உரிமைத்தொகை 1,000 ரூபாய் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளோம். நாங்கள் இவ்வாறு சொன்னதும் அதை உடனடியாக ஜெராக்ஸ் காப்பி எடுத்து 1,000 ரூபாய் என்பதை 1,500 ரூபாய் என்று அறிவித்துள்ளார்கள். இந்த 10 வருடங்களாக ஏன் கொடுக்கவில்லை. அதைத்தான் நான் கேட்கிறேன். கரோனாவுக்காவது கொடுத்திருக்கலாமே? பொங்கலுக்கு கொடுத்துள்ளார்களே என்று சொல்கிறீர்கள். போன பொங்கலுக்கு இவர்கள் கொடுத்துள்ளார்களா? தீபாவளிக்குக் கொடுத்திருக்கலாமே, தேர்தல் வரப்போகிறது என்றதும் மக்களைப் பற்றி இவர்களுக்கு நினைவு வருகிறது. இந்த ஏமாற்று வேலைகள் எல்லாம் இந்தத் தேர்தலில் எடுபடாது. நிச்சயம் அவர்கள் ஏமாந்து போவார்கள்.