Skip to main content

EXCLUSIVE: ஜெயித்தவரை தோற்றதாக அறிவித்த தில்லுமுல்லு தேர்தல் அதிகாரிகள்!! ஆர்.டி.ஐ. ஆதாரத்துடன் அம்பலம்!

Published on 25/06/2020 | Edited on 25/06/2020
locla

தேர்தலில் வெற்றிபெற்றவரை தோற்றவராக  அறிவித்த தில்லுமுல்லு தேர்தல் அதிகாரிகளின் மோசடி ஆர்.டி.ஐ. ஆதாரத்துடன்  அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து, நாம் விசாரிக்க ஆரம்பித்தோம்...

 

தமிழகத்தில் கடந்த, 2020- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உள்ளாட்சித்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது. கடலூர் மாவட்டத்திலுள்ள அண்ணாகிராமம், கடலூர், காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம், குமராட்சி, குறிஞ்சிப்பாடி, நல்லூர், பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, மங்களூர், மேல்புவனகிரி, விருத்தாச்சலம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய 13 ஒன்றியங்களில் கடந்த 2019- ஆம் ஆண்டு டிசம்பர் 27- ஆம் தேதி உள்ளாட்சித்தேர்தல் நடந்தது. 

 

இதில், கீரப்பாளையம் ஒன்றியம் கவுன்சிலர் (மூன்றாவது வார்டு உறுப்பினர்) பதவிக்கு போட்டியிட்டார் தி.மு.க. மகளிரணி மாவட்ட அமைப்பாளரும், தலைமை பொதுக்குழு உறுப்பினரும் கீரப்பாளையம் ஒன்றிய முன்னாள் சேர்மனுமான த.அமுதராணி. ஆனால், அமுதராணியைவிட குறைந்த வாக்குகள் பெற்ற டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. சார்பாக போட்டியிட்ட கவிதா என்பவரை வெற்றிபெற்றதாக அறிவித்தார்கள் தேர்தல் அதிகாரிகள்.  

 

இதனால், அதிர்ச்சியடைந்த திமுக வேட்பாளர் அமுதராணி தேர்தல் நடத்திய அதிகாரி ஜெயக்குமாரிடம் முறையிட, லேட்டாக வந்து சொல்கிறீர்கள் என்று காரணம் காட்டி காவல்துறையினரால் வி(மி)ரட்டி அனுப்பப்பட்டார். இந்தநிலையில்தான், சக வேட்பாளரான காஞ்சனா சந்தோஷ்குமார், ஆர்.டி.ஐ. (Right To Information) எனப்படும் தகவல்பெறும் உரிமை சட்டத்தின்படி தேர்தல் வாக்குவிவரங்கள் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

  

local body election dmk candidate rti report state election commission

 

அதில்தான், அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. தி.மு.க வேட்பாளர்  அமுதராணி 1172 வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால், வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட  கவிதா 1066 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார் என்று ஆர்.டி.ஐ. மூலம் ஆதாரத்துடன் அம்பலமாகியிருக்கிறது. அதாவது, வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட கவிதாவைவிட தோற்றுப்போனதாக அறிவிக்கப்பட்ட அமுதராணி 106 வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளார்.

 

இதுகுறித்து, நாம் அமுதராணியிடம் பேசியபோது, “13 ஒன்றியங்களுக்கும் சேர்மன் பதவி என்பது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நான், ஏற்கனவே சேர்மனாக இருந்ததாலும் தற்போது வெற்றிபெற்றால் பெண் என்கிற அடிப்படையில் சேர்மன் ஆகிவிடுவேன் என்ற காழ்ப்புணர்ச்சியாலும், சதியாலும்தான் என்னைவிட 106 வாக்குகள் குறைவாக பெற்ற கவிதாவை வெற்றிபெற்றதாக அறிவித்திருக்கிறார்கள் என்பது தற்போது ஆர்.டி.ஐ மூலம்தான் ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது.  

loccal

தேர்தல் முடிவுகள் அறிவித்த ஜனவரி-2 ஆம் தேதியே சந்தேகத்தின் அடிப்படையில் இதுகுறித்து, கீரப்பாளையம் ஊராட்சி  ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கடலூர் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ஜெயக்குமாரிடம் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், வேண்டுமென்றே காலதாமதாக வந்ததாக காரணம் காட்டி கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

locla

 

ஒரு ஒன்றிய கவுன்சிலருக்கு 5 முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், டிடிவி தினகரனின் அமமுகவைச் சேர்ந்தவர்கள் 12 பேர்  உள்ளே இருந்தார்கள். இதிலிருந்தே, தேர்தல் எந்தளவுக்கு நேர்மையற்ற முறையில் நடந்தது என்பதை அறிந்துகொள்ளலாம். தற்போது, தேர்தலில் எனக்கு எதிராக மோசடி நடந்திருப்பது ஆதாரப்பூர்வமாக தெரியவந்ததால் திமுக மாவட்டச்செயலாளர் அவர்களுக்கும், தலைமைக்கும் தகவல் தெரிவித்துள்ளேன். இனி, அவர்கள் எனக்கு என்ன வழிகாட்டுகிறார்களோ அதன்படி சட்டப்போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்றார்.

 

local 2333

 

இதுகுறித்து, கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் 12- ஆம் தேதி தேதி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் அனுப்பியிருக்கிறார். கடலூர் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சிப்பிரிவு உரிய நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தெரிவிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் செயலாளர் சுப்பிரமணியன் ஐ.ஏ.எஸ். தேர்தலில், நடந்த மோசடிகள் வெளிவந்து வெற்றி வேட்பாளரை அறிவிப்பதோடு, தேர்தலில் தில்லுமுல்லு செய்த தேர்தல் அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.