இந்திய நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்படத் துவங்கியுள்ளன. பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் எனப் பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் ஒரு கூட்டணியைத் துவக்கி அதற்கு இ.ந்.தி.யா. எனப் பெயர் வைத்து அதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியை அமைக்க வேண்டும் என பா.ஜ.க. உட்பட அதன் கூட்டணிக் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து 2024 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவுள்ளது. இந்தப் போட்டியின் துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ளுமாறு தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (4ம் தேதி) டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இதில், அரசியல் பேச்சுகள் இருந்தன எனச் சொல்லப்பட்டாலும், ராகுல் காந்தியை சந்தித்துவிட்டுக் கிளம்பும்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சகோதரர் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக நலம் விசாரித்து விட்டுச் செல்கிறேன். அவருடைய பாதயாத்திரையை மணிப்பூரில் தொடங்க இருப்பதாகச் சொன்னார். மற்றபடி நலம் விசாரித்துக் கொண்டோம். அரசியல் ரீதியாக ஏதும் பேசவில்லை'' என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தி - உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ள அதே சமயத்தில், கடந்த 29ம் தேதி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்ததும் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.
தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் முதன் முதலாக கடந்த 29 ஆம் தேதி தலைமைச் செயலகத்திற்கு ஜி.கே. மணியுடன் சென்று முதல்வரை சந்தித்தார் ராமதாஸ். பரஸ்பர நல விசாரிப்பிற்குப் பின், வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழகத்திலும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்திய ராமதாஸ், இவற்றைச் செய்வதன் மூலம் இந்த அரசு பெரியாரின் சுயமரியாதை அரசு என்கிற பாராட்டை வெகுவாகப் பெறலாம் என்றும் சொல்லியிருக்கிறார்.
ஸ்டாலினோ, இது குறித்து கவனிக்கிறேன் என்று சொன்னதோடு அமைதியாகிவிட்டார். இந்த சந்திப்பின் போது, அரசுத் தரப்பில் அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், கே.என். நேரு, ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு மற்றும் அரசின் உயரதிகாரிகள் சிலரும் இருந்திருக்கிறார்கள். ராமதாஸின் சந்திப்புக்கு முதல்வரிடம் நேரம் வாங்கிக் கொடுத்தவர் அமைச்சர் துரைமுருகன்தான் என்கிறார்கள்.
இந்த சந்திப்பு, கூட்டணி மாற்றமாக மாற வாய்ப்பிருக்கிறதா எனும் பேச்சுகளும் எழத் துவங்கியுள்ளன. இது குறித்து விசாரித்தபோது, பா.ம.க.வை பொறுத்தவரை அன்புமணிக்கு தி.மு.க. கூட்டணியில் சேரலாம் என்கிற எண்ணமிருக்கிறது. அவரது மாமனாரான தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி மூலமாக தனக்கொரு எம்.பி. சீட்டை உறுதி செய்யலாம் என நினைக்கிறார். ஆனால், ராமதாஸை பொறுத்தவரை, தி.மு.க. கூட்டணியில் இருந்த பழைய அனுபவங்களால் இதற்குப் பெரிதாய் விருப்பமில்லை எனச் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரை, ராமதாஸ் - முதல்வர் சந்திப்பு குறித்து ஒருவித சலசலப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.