Skip to main content

‘ரெட்ரோ’ பட லாபத்தில் உதவி செய்த சூர்யா 

Published on 08/05/2025 | Edited on 08/05/2025
suriya donates 10cr to agaram foundation in retro movie profit

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 1ஆம் தேதி வெளியான படம் ‘ரெட்ரோ’. ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருந்த இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருப்பினும் காதல் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் இதுவரை ரூ.104 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளது. இந்த நிலையில் படத்தில் கிடைத்த லாபத்தை சூர்யா தனது அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார். அதாவது லாபத்தில் ரூ.10 கோடிக்கான காசோலையை அகரம் ஃபவுண்டேஷனுக்கு படக்குழுவினருடன் நேரில் சென்று கொடுத்துள்ளார். 

இது குறித்து சூர்யா வெளியிட்ட செய்தி குறிப்பில், “ஒவ்வொரு ஆண்டும், நம்பிக்கையோடு அகரம் ஃபவுண்டேஷனுக்கு விண்ணப்பிக்கிற பல ஆயிரக்கணக்கான மாணவர்களில், மிகக் குறைவானவர்களுக்கே உதவ முடிகிறது. அந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமெனில், பங்களிப்பும் உயர வேண்டும். அதன் முதல் படியாக, ரெட்ரோ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த பேராதரவின் மூலமாக கிடைத்த அன்பு தொகையில், பத்து கோடி ரூபாயை இந்த கல்வியாண்டில் அகரம் ஃபவுண்டேஷனுக்கு, பகிர்ந்தளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில், உயர்கல்வி கனவோடு படிக்கிற மாணவர்களை அன்பினால் அரவணைத்துக் கொள்வோம். ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற கல்வி உதவியை சுற்றி இருப்பவர்களுக்கு வழங்குவோம். கல்வியே ஆயுதம்.. கல்வியே கேடயம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்