
இந்தியாவில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக பெண் குழந்தைகளும், 13 சதவீத ஆண் குழந்தைகளும் 18 வயது ஆவதற்கு முன்பே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை என்பது உலகில் ஒரு முக்கியமான பிரச்சனை ஆகும். பாலியல் துன்புறுத்தல்களால் உடல்நல ஆரோக்கியத்தைப் பாதிக்கப்படுவதோடு அவர்களது மனநிலையும் பாதிக்கப்படுகிறது. கடந்த 1990 முதல் 2023 வரை இடையில் பாலியல் வன்முறையில் சிக்கிய குழந்தைகளின் விகிதங்களை மதிப்பிடுவதற்காக அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார நிறுவனம் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.
200க்கும் மேற்பட்ட நாடுகளில் நடத்திய ஆராய்ச்சியில், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே அதிக பாலியல் வன்முறை விகிதங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, தெற்காசியாவில் பாலியல் வன்முறையால் பெண் குழந்தைகளே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பதிவாகியுள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரைக்கும், 30.8 சதவீத பெண் குழந்தைகளும், 13 சதவீத ஆண் குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.