
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'(Tourist Family).மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள இப்படம் இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து பேசியிருக்கிறது.
இப்படம் நல்ல எதிர்பார்ப்போடு கடந்த மாதம் 14ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்திற்கு திரை பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். அதோடு அரசியல் கட்சி தலைவர்களும் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குடும்பத்துடன் படம் பார்த்துவிட்டு படக்குழுவினரிடம் அலைபேசியில் பேசி வாழ்த்தினார்.
பின்பு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் படம் பார்த்து இயக்குநரை ஆரத் தழுவி கட்டி பிடித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிலையில் இப்படத்திற்கு கூடுதல் காட்சிகளும் கூடுதல் திரைகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படம் மூலம் தொடர் வெற்றிகளை குவித்துள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ். இதற்கு முன்னதாக லவ்வர் மற்றும் குட் நைட் ஆகிய படங்களை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.