Skip to main content

ரசிகர்களை உஷார் படுத்திய ஸ்ரேயா கோஷல்

Published on 07/04/2025 | Edited on 07/04/2025
shreya ghoshal warns fans about ai generated ads on x after recovering hacked account

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்கள் பாடி இந்திய அளவில் பிரபலமானவர் ஸ்ரேயா கோஷல். தேசிய விருது, மாநில விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை வென்று தனது குரலுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். திரைப்படங்களில் பாடுவதை தாண்டி இசை கச்சேரியையும் நடத்தி வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா கோஷல், சமீபத்தில் தனது எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்ட பதிவில், “பிப்ரவரி 13 முதல் எனது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ் குழவை தொடர்பு கொள்ள என்னால் முயன்ற அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டேன். ஆனால் முறையான பதில் கிடைக்கவில்லை. என்னால் லாகின் கூட செய்ய முடியாததால் என் கணக்கை டெலிட் கூட செய்ய முடியவில்லை. தயவுசெய்து அந்த கணக்கில் இருக்கும் எந்த லிங்கையும் கிளிக் செய்யாதீர்கள். அதே போல் அதில் எழுதப்பட்ட எந்த செய்தியையும் நம்பாதீர்கள்” எனக் கேட்டுக் கொண்டிருந்தார். 

இந்த நிலையில் எக்ஸ் பக்கம் சரியாகி விட்டதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “நான் திரும்பி வந்துவிட்டேன். இனிமேல் அடிக்கடி பேசுவேன், எழுதுவேன். பிப்ரவரியில் எனது எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டதால் சில பிரச்சனைகளில் சிக்கியிருந்தது. எக்ஸ் குழுவை தொடர்பு கொண்ட போது முடியவில்லை. இப்போது பல போராட்டங்களுக்கு பிறகு அவர்களிடமிருந்து உதவி கிடைத்துள்ளது. எல்லாம் சரியாகிவிட்டது” எனக் குறிப்பிட்டார். 

மேலும் அந்த பதிவில், “என்னைப் பற்றி வினோதமான விளம்பரங்களும் அபத்தமான செய்திகளும் ஏ.ஐ-யால் உருவாக்கப்பட்ட படங்களுடன் உலா வந்துக் கொண்டிருக்கிறது. அதை க்ளிக் செய்ய வேண்டாம். அவையெல்லாம் மோசடிக்கு வழிவகுப்பவை. தயவு செய்து அந்த விளம்பரங்களை ரிப்போர்ட் செய்யுங்கள். அதை நிறுத்த எனக்கு அதிகாரம் இல்லை. நான் என்னால் முடிந்த வரை முயற்சித்தேன். அது எக்ஸ் வலைதள விளம்பர விதிமுறைகளால் உலா வருகிறது. எக்ஸ் குழு இந்த பிரச்சனையையும் விரைவில் சரி செய்வார்கள் என்று நம்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்