காவிரியிலிருந்து தமிழகத்திற்கு உரிய நீரைத் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்திய நிலையில், தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நீர் அளவு போதவில்லை எனத் தமிழகத்தில் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே சமயம் கர்நாடகாவில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிராக விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இரு மாநிலங்களிலும் இந்த பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் நடிகர் சித்தார்த் அவர் நடித்த சித்தா படத்தின் ப்ரோமோஷனுக்காக கர்நாடகாவிற்கு சென்றுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் சித்தா படம் வெளியானது. 'சிக்கு' என்ற பெயரில் கன்னடத்தில் வெளியான நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பெங்களூருவில் உள்ள ஒரு திரையரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் சித்தார்த். அப்போது கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பைச் சேர்ந்த சிலர் உள்ளே வந்து நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தும்படி கூச்சலிட்டனர். மேலும் காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சிறிது நேரம் கழித்து அங்கே அமர்ந்திருந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்து பாதியிலே வெளியேறிவிட்டார் சித்தார்த்.
இந்த சம்பவம் திரைப் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்த, தற்போது கன்னட திரைப் பிரபலங்கள் சித்தார்த்திடம் மன்னிப்பு கோரி வருகின்றனர். பிரகாஷ் ராஜை தொடர்ந்து தற்போது கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார், "கன்னட திரைப்படத் துறை சார்பாக சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்படி ஒரு சம்பவம் நடந்ததை நினைத்து நான் மிகவும் வேதனையடைகிறேன். இதுபோன்ற தவறு மீண்டும் நடக்காது. கன்னட மக்கள் நல்ல மனிதர்கள், அவர்கள் எல்லா படங்களையும், எல்லா மொழிகளையும் நேசிக்கிறார்கள். எல்லா விதமான படங்களையும் பார்ப்பது கர்நாடக மக்கள் மட்டுமே" எனப் பேசியுள்ளார்.