
நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணி அமைத்துள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு செர்பியா, அயர்லாந்து, ராஜஸ்தான், டெல்லி, கோவா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் டப்பிங் பணிகளை கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் கடந்த ஆண்டே தொடங்கியிருந்தனர். இப்படத்தில் இருந்து டைட்டில் அறிவிப்பு வீடியோ மற்றும் ரிலீஸ் தேதி டீசர் ஆகியவை முன்னதாக வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. பின்பு சமீபத்தில் கமல் எழுத்தில் வெளியான முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் படக்குழுவினர் தீவிர புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற 16ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது இந்தியா - பாகிஸ்தான் போர் சூழல் காரணமாக இசை வெளியீட்டு விழாவை படக்குழு தள்ளி வைத்துள்ளது. இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள, “நமது நாட்டின் எல்லையில் ஏற்பட்டுள்ள விஷயங்கள் மற்றும் அதிகரித்த எச்சரிக்கை நிலையைக் கருத்தில் கொண்டு, மே 16 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டை மீண்டும் திட்டமிட முடிவு செய்துள்ளோம்.
நமது தாய்நாட்டைப் பாதுகாப்பதில் நமது வீரர்கள் தளராத துணிச்சலுடன் முன்னணியில் நிற்கும் நிலையில், இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல, அமைதியான ஒற்றுமைக்கான நேரம் என்று நான் நம்புகிறேன். புதிய தேதி பின்னர், மிகவும் பொருத்தமான நேரத்தில் அறிவிக்கப்படும். இந்த நேரத்தில், நமது நாட்டைப் பாதுகாக்க விழிப்புடன் நிற்கும் நமது ஆயுதப் படைகளின் துணிச்சலான ஆண்கள் மற்றும் பெண்களைப் பற்றி எங்கள் எண்ணங்கள் உள்ளன. குடிமக்களாக, நிதானத்துடனும் ஒற்றுமையுடனும் பதிலளிப்பது நமது கடமை. கொண்டாட்டம் சிந்தனைக்கு வழிவகுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.