
சமந்தா, மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டதால் அதற்காக சிகிச்சை பெற சமீபகாலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின்பு ஓராண்டுக்கு மேலான பிறகு மீண்டும் நடிப்பிற்கு வந்ததாகத் தெரிவித்திருந்தார். இடையில் ‘டிராலாலா மூவிங் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். இதையடுத்து இப்போது ‘ரக்த் பிரம்மாந்த்’(Rakht Brahman) என்ற இந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். மேலும் ‘பங்காரம்’ என்ற தெலுங்கு படத்தில் லீட் ரோலில் நடித்து தயாரித்தும் வருகிறார்.
இந்த நிலையில் சமந்தா தனது ‘டிராலாலா மூவிங் பிக்சர்ஸ்’ நிறுவனம் மூலம் ‘சுபம்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை வசந்த் மரிகாந்தி எழுதியிருக்க பிரவீன் கேண்ட்ரெகுலா இயக்கியுள்ளார். இதில் ஹர்ஷித் மல்கிரெட்டி, ஷ்ரேயா கோந்தம், சரண் பெரி, ஷாலினி கோண்டேபுடி, கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் மற்றும் ஷ்ரவாணி உள்ளிட்ட ஆறு பேர் நடித்துள்ளனர். ஷோர் போலீஸ் என்பவர் இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. படம் வருகிற 9ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனால் படக்குழுவினர் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஆந்திராவில் உள்ள விஷாகப்பட்டினத்தில் படத்தின் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட சமந்தா ஒரு தருணத்தில் எமோஷ்னலாகி அழத் தொடங்கியது போல் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் சமீப காலமாக மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிறகு அவர் கலந்து கொண்ட பட நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக கண்கலங்கி வருகிறார். இது சுபம் பட நிகழ்ச்சியில் தொடர்ந்ததால் சமந்தா ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். மேலும் ஏன் அவர் தொடர்ச்சியாக கண்கலங்குகிறார் என்ற கேள்வியும் உலா வந்தது.
இந்த சூழலில் சமந்தா, தான் ஏன் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளில் கண்கலங்குகிறேன் என விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “எனது கண்கள் ரொம்ப சென்சிட்டிவ். அதிக வெளிச்சம் தரும் லைட்டுகளை பார்த்தால் எளிதில் கண்ணீர் வந்துவிடும். அதனால் கண்கங்களை அடிக்கடி துடைக்க வேண்டியிருக்கும். அதனால் எமோஷ்னலாகி நான் கண்களை துடைப்பதில்லை. நான் உண்மையிலே நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்” என்றுள்ளார்.