
நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் ஆர்யா வழங்கும் படம் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’. இதில் கீதிகா, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்திற்கு ‘ஆஃப்ரோ’(ofRo) என்பவர் இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன் வெளியானது. படம் மே 16ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் சந்தானம், ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிம்புவும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் சிம்பு பேசுகையில் படக்குழுவினர் குறித்து பகிர்ந்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இடையே சந்தானம் குறித்து பேசிய அவர், “சந்தானத்தை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது. சந்தானம் எல்லா மேடைகளிலும் உங்களை குறிப்பிட்டு பேசுகிறார். இதன் பின்னணி என்ன என்று என்னிடம் பலமுறை பலர் கேட்டிருக்கிறார்கள். அவர்களிடம் அதுதான் அவரின் கேரக்டர் என பதிலளித்திருக்கிறேன்.
எனது 49வது படத்தில் மீண்டும் அவர் நடிக்கிறார். அதற்கு முக்கியமான காரணம், இன்றைய சினிமாவில் காமெடி கம்மியாக இருக்கிறது. பெரிய ஹீரோக்கள் படங்களெல்லாம் ஆக்ஷனோடு சீரியஸான படங்களாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் சாஃப்டான ஃபீல் குட் படங்களும் வர வேண்டும். அதற்காக சந்தானம் மாதிரி ஒரு மனிதரை ரொம்ப நாளாக மிஸ் செய்கிறோம். அவர் ஹீரோவாக நடிப்பது மட்டுமில்லாமல் என்னோடு, ஆர்யாவோடு அல்லது பிடித்த இயக்குநர்களோடு தேர்ந்தெடுத்து நிறைய படங்கள் நடிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அதற்கு ஆரம்பமாக எனது 49வது படம் இருக்கட்டும் என அழைத்தேன். இனிமேல் சந்தானத்தை அதிக படங்களில் பார்ப்பீர்கள் என நம்பலாம்” என்றார்.