
பாலிவுட்டின் டாப் நடிகர் சல்மான் கான் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சிக்கந்தர்’ என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். சஜித் நதியாத்வாலா தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், பிரதீக் பாப்பர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பாடல்களுக்கு பிரிதம் சக்ரவர்த்தி இசையமைத்திருக்கப் பின்னணி இசையை சந்தோஷ் நாராயணன் கவனித்துள்ளார். படத்தின் டீசர் முன்னதாக வெளியான நிலையில் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்படம் ரமலான் பண்டிகையை முன்னிட்டு நாளை(30.03.2025) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் படத்தின் புரொமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.
அந்த வகையில் சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “30ஆம் தேதி திரையரங்கில் பார்க்கலாம்” எனக் குறிப்பிட்டு விலையுயர்ந்த கடிகாரம் அணிந்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்த கடிகாரம் ‘எபிக் எக்ஸ் ராம் ஜென்ம பூமி டைட்டானியம் எடிஷன் 2’(Epic X Ram Janmabhoomi Titanium Edition 2) என்ற ஆடம்பர கடிகாரமாகும். ரூ.34 லட்சம் விலை எனக் கூறப்படும் இந்த கடிகாரம் ராம ஜென்ம பூமியின் கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடிகாரத்தின் டயலில் அயோத்தி கோயிலின் சிற்பமும் இந்து கடவுள்களின் புனித கல்வெட்டுகள் உள்ளன. இந்த கடிகாரம் உலகளவில் 49 அளவில் மட்டுமே தயாரிக்கப்பட்டது. அதில் ஒன்றை சல்மான் கான் அணிந்துள்ளார். இந்த கடிகாரத்தை சல்மான் கான் அம்மா அவருக்கு பரிசாக வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத்தின் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி சல்மான் கான் ராம் ஜென்ம பூமி கடிகாரத்தை அணிந்திருந்தற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “ராமர் கோயிலை விளம்பரப்படுத்தும் வகையில் அவர் அந்த கடிகாரத்தை கட்டியுள்ளார். அது வந்து முஸ்லீம் மதத்திற்கு எதிரானது. இஸ்லாமியச் சட்டத்துக்கும் விரோதமானது. சல்மான் கான் இந்தியாவில் ஒரு பிரபலமான நபர். அவருக்கு மில்லியன் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் அவர் ஒரு முஸ்லிமும் கூட. அதனால் இது போன்ற செயல்களை அவர் தவிர்த்து விட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.