
ரவி மோகன் தற்போது ‘ஜீனி’, ‘கராத்தே பாபு’ ‘பராசக்தி’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பராசக்தி படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மூன்று படத்தின் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ரவி மோகன் 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். ஆனால் ஆர்த்தி இது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவென்றும் என்னுடைய ஒப்புதல் இல்லாமல் எடுத்த முடிவென்றும் கூறியிருந்தார். பின்னர் ரவி மோகன், ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் இரண்டு பேரும் ஆஜராகி விளக்கமளித்தனர். இருப்பினும் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. நிலுவையில் இருக்கிறது.
இதனிடையே ரவி மோகனின் விவகாரத்து முடிவிற்கு பெங்களூரூவை சேர்ந்த பாடகி கெனிஷா தான் காரணம் என ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் நக்கீரனுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்தார். அதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்திருந்தார். இந்த தகவலை மறுத்த ரவி மோகன், ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில், “என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் இழுக்காதீங்க. தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்டதாகவே இருக்க விடுங்க. கெனிஷா 600 மேடைகளில் பாடியவர். பல உயிரை காப்பாற்றிய ஒரு ஹீலர். நானும் கெனிஷாவும் எதிர்காலத்தில் ஒரு ஹீலிங் சென்டர் ஆரம்பிக்க இருக்கிறோம். அதன் மூலம் பல பேருக்கு உதவ வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். அதை கெடுக்காதீங்க. அதை யாராலும் கெடுக்கவும் முடியாது” என கூறியிருந்தார்.
பாடகி கெனிஷாவும் ரவி மோகனின் விவாகரத்து முடிவிற்கு நான் காரணமில்லை என விளக்கமளித்திருந்தார். இந்த சூழலில் ரவி மோகனும் கெனிஷாவும் ஒரு திருமண நிகழ்வில் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர். வேல்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமண நிகழ்வு இன்று சென்னையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ரஜினி, கமல் என பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் ரவி மோகனும் பாடகி கெனிஷாவும் ஒரே கலர் உடையுடன் ஒன்றாக கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் ஏற்கனவே வந்த தகவல்களை மறுத்த நிலையில் தற்போது ஒன்றாக பொதுவெளியில் தோன்றியது கோலிவுட்டில் பேசு பொருளாக மாறியுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜீனி படத்தை ஐசரி கணேஷ் தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.