Skip to main content

நான் ஏன் கலையைத் தேர்ந்தெடுத்தேன்? - மனம் திறந்த மாரி செல்வராஜ்

Published on 21/03/2025 | Edited on 21/03/2025
mari selvaraj speech before students

இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது பைசன் என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகளில் கவனம் செலுத்து வருகிறார். இதனிடையே சேலத்தில் உள்ள ஒரு அரசு கலை கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திரைப்பட அவர், மாணவ மாணவிகளிடையே தனது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். 

அவர் பேசுகையில், “நம்முடைய குரலை எந்த புள்ளியில் இருந்து ஆரம்பிப்பது என்று ஒரு குழப்பம் இருந்தது. பரியேறும் பெருமாள் ஒரு குரல். அது ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது. கர்ணன் படமும் ஒரு நிலைபாட்டை எடுக்கிறது. இந்த இரண்டு படம் தொடர்பாகவும் என்னை பிடித்தவர்களுக்குக் கூட மாற்றுக் கருத்து இருக்கிறது. பரியேறும் பெருமாள் பிடித்தவர்களுக்கு கர்ணன் பிடிக்காது. கர்ணன் பிடித்தவர்களுக்கு பரியேறும் பெருமாள் பிடிக்காது. சிலருக்கு மாமன்னன் பிடிக்காது. இந்த மூன்றும் பிடித்தவர்களுக்கு வாழை பிடிக்காது. ஆனால் அவர்களுக்கு மாரி செல்வராஜை பிடிக்கும். எந்த நம்பிக்கையில் பிடிக்கும் என்றால் அடுத்து வேறு மாதிரி ஒரு படம் எடுப்பார் என்ற எண்ணத்தில்.

அவர்கள் பரியேறும் பெருமாளும் கர்ணனும் ஒருத்தர் இல்லை என்ற மன நிலையில் என்னை ஏற்றுக்கொள்கிறார்கள். பட்டியலின மக்கள் வாழ்வியலில் இருவரும் வெவ்வேறு அநீதிகளுக்கு உட்பட்டவர்கள். ஒவ்வொருத்தரும் அவரவர்கள் எடுக்கும் முடிவுகளால் வாழ்கையில் இருந்து ஒரு பாடத்தை கற்றுக் கொண்டார்கள். ரோட்டில் ஒரு சம்பவம் நடக்கும் போது நானும் இன்னொருவரும் ஒரே மாதிரியான முடிவை எடுக்க மாட்டோம். நான் நிறைய வாசித்து இருக்கிறேன். அது எனக்கு ஒரு வாழ்வு கற்றுக்கொடுத்திருக்கிறது. மனிதர்களின் தீராத பகையைக் கூட காத்திருந்து உரையாடி தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அதற்காக நான் தேர்ந்தெடுத்ததுதான் கலை.

என்னை விட வலிமையான மனிதர்கள் இந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒவ்வொரு வழியை தேர்ந்தெடுத்து பயணிக்கிறார்கள். நான் ஏன் கலையை தேர்ந்தெடுத்தேன் என்றால் என்னுடைய அம்மா அப்பா எனக்கு கற்றுக் கொடுத்த வாழ்வு ஒன்று இருக்கிறது. ஒன்றுமே இல்லாமல் பசங்களை படிக்க வைத்திருப்பதை பார்க்கும் போது அவர்களின் விடாமுயற்சி மேல் எனக்கு மிகப்பெரிய மரியாதை வந்தது. என்னுடைய பொறுமைக்கும் இறங்கிப் போகும் குணத்திற்கும் முழு முதற்காரணம் என் தந்தைதான். என் தந்தையின் பிடிவாதத்தை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அது எவ்வளவு வலியை சந்தித்தாலும் இலக்கை மட்டும் விட்டுவிடாதே என்பதை சொல்லிக் கொடுத்தது. இன்றைக்கு மாரி செல்வராஜ் என்று ஒருவன் இருக்கிறான் என்றால் என் தந்தையின் அத்தனை வலி மிகுந்த வாழ்வியலில் இருக்கும் பொறுமை தான் காரணம். ஒரு வேளை இந்த சமூகம் அவருக்கு கொடுக்கும் அழுத்தத்தை வேறுமாதிரியாக அவர் கையாண்டால் நானும் வேறு ஒரு ஆளாக மாறியிருப்பேன்” என்றார்.

சார்ந்த செய்திகள்