பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்
நாக்பூரில் இந்துத்வா அமைப்பொன்று ஔரங்கசீப்பின் கல்லறையை தகர்க்கப்போவதாக கூறியது குறித்து...?
இந்துத்துவ அமைப்புகள் ஔரங்கசீப் குறித்து வரலாற்றுக்கு முரணான தகவல்களைப் பரப்பி வந்த நிலையில், மகாராஷ்டிர மாநில சமாஜ்வாடி கட்சித் தலைவர் அபு ஆஸ்மி ஔரங்கசீப் சிறந்த நிர்வாகி, நிறைய இந்துக் கோவில்களையும் கட்டியுள்ளார் என தரவுகளுடன் பேசினார். உடனே கொந்தளித்து எழுந்த இந்துத்துவ அமைப்புகள், ஔரங்கசீப் கல்லறையை தகர்க்கவேண்டுமென குரல்கொடுக்க, அதற்கு அம்மாநில முதல்வரும் ஆதரவு தெரிவித்தார். கலவரக் குழுக்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டதில் காவலர்கள் வரை காயமடைந்துள்ளனர். ஔரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ. 21 லட்சம் பரிசு என உ.பி.யில் ஒரு இந்துத்துவ அமைப்பு அறிவித்துள்ளது. இடிப்பதையும், தகர்ப்பதை யும், வதந்திகளை வரலாறாகப் பதிவு செய்வதை யும் மட்டுமே வரலாற்றுச் சாதனையாகச் செய்துவந்தால், ஆப்பிரிக்காவின் சோமாலியா வைவிட பின்தங்கிய சமூகமாக இந்தியா மாறும். இந்தியாவின் வரலாற்றுப் புத்தகங்களில் மொகலாய சாம்ராஜ்யமே இந்தியாவை ஆளவில்லை என்று மாற்றி எழுதிவிடலாம். உலகத்தின் வரலாற்றுப் பதிவுகளில் இந்தியர்களை மொகலாயர் ஆண்டது நமட்டுச் சிரிப்புடன் நீடித்தபடியே இருக்கும்.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
பா.ஜ.க.வால் ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்கமுடியும் என்கிறாரே டி.டி.வி.தினகரன்?
மோடியை, ஆம்பளை ஜெ. என்றுகூட டி.டி.வி. தினகரன் பாராட்டலாம். அது அவர் விருப்பம். அதன்மூலம் மோடியின் அரசியல் வாழ்வு ஏ1 குற்றவாளியாக முடிவுக்கு வரும் என்று சொல்லவருகிறாரா? இதை பா.ஜ.க.வினர் தட்டிக் கேட்கவேண்டும்.
கல்லிடை சிவா, கல்லிடைக்குறிச்சி.
விமர்சனங்களை ஜன நாயகத்தின் ஆன்மா என மோடி கூறியிருக்கிறாரே?
அம்பானி, அதானியை விமர்சித்ததற்காக, ராகுலின் எம்.பி. பதவியே ரத்தானது. முகம்மது ஜுபைர், இந்துத் துவர்கள் பரப்பும் பொய்யை அம்பலப்படுத்தியதாலும், பா.ஜ.க. அரசை விமர்சனம் செய்ததாலும் பலமுறை வழக் குப் போட்டு அலைக்கழிக்கப்பட்டார். 180 நாட் களுக்கு ஜாமீனே கிடைக்காத உபாவின் கீழ் பல பத்திரிகையாளர்கள் மேல் வழக்குப் போடப் பட்டது. ஹாத்ராஸ் வழக்கில் செய்தி வெளியிட் டதற்காக சித்திக் கப்பன் 28 மாதங்கள் சிறையி லடைக்கப்பட்டார். எத்தனை முறை பா.ஜ.க. அரசு ஆன்மக் கொலை செய்திருக்கிறது என மோடி விரல்விட்டு எண்ணிப்பார்த்திருக்கிறாரா!
ஆர். ஹரிகோபி, புதுடெல்லி
தங்களது காதலை வெளிப்படுத்தும் போது எந்த மொழி பேசுபவர்களாயிருந் தாலும் 'ஐ லவ் யூ' என்று ஆங்கிலத்திலேயே கூறுவது ஏன்?
சினிமா நாயக- நாயகிகள் ஐ லவ் யூ கூறுவதைப் பார்த்து ஒரு சகஜத் தன்மை வந்திருக்கும். ஈஸியாக நாமும் ஐ லவ் யூ சொல்லி விடலாம். நான் உன்னைக் காதலிக்கிறேன்னு சொல்லும்போது, சங்கோஜமா இருக்கலாம். எந்த மொழியில சொன்னா என்ன,… காதல் ஓ.கே. ஆனா போதாதா!
எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு
கடனை உயர்த்தியதே தி.மு.க.வின் சாதனை என்று வானதி சீனிவாசன் கூறியிருக்கிறாரே?
இருக்கட்டும். அதைவிட பெரிய சாதனையை எல்லாம் மத்திய பா.ஜ.க. அரசு செய்துவைத்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் 55 லட்சம் கோடியாக இருந்த இந்தியக் கடனை 11 ஆண்டுகளில் 200 லட்சம் கோடியாக உயர்த்தி வைத்திருக்கிறார்கள். அடக்கி வாசிக்காமல், சொந்தக் கட்சியின் சாதனையையும் வானதி கொஞ்சம் பேசவேண்டும்.
வண்ணை கணேசன், கொளத்தூர்
தொகுதி மறுவரையறை மூலம் தமிழகத்துக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று ராஜ்நாத்சிங் கூறுகிறாரே…?
கூடுதலாகக் கிடைக்குமா,… குறைவாகக் கிடைக்குமா என்று தமிழகம் கேட்கவில்லை. நாடாளுமன்றத்தில் தற்போது தமிழகத்துக்கு இருக்கும் பிரதிநிதித்துவத்தில் 0.1 சதவிகிதம்கூட குறையாமல் பார்த்துக்கொள்வோம் என பா.ஜ. அரசு உத்தரவாதம் தரமுடியுமா என்றுதான் கேட்கிறது.
மு.அப்துல்காதர், ராயப்பேட்டை
செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு, நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என்றிருக்கிறாரே எடப்பாடி?
வேறென்ன சொல்வார் என எதிர்பார்க்கிறீர்கள். செங்கோட்டையன் வெளிப்படையாக அறிவிக்கும் வரையோ, அல்லது எடப்பாடி அவரை நீக்கியதாக அறிவிக்கும்வரையோ அவர் கட்சியிலிருப்பவ ராகவே கருதப்படுவார். தன் தரப்பைத் தானே பலவீனப்படுத்திக்கொள்ளுமளவுக்கு விவரமில்லாதவரா எடப்பாடி? ஊடகங்கள் மெல்வதற்கு எடப்பாடியே அவல் தருவாரென்று எதிர்பார்க்காதீர்கள்.