Skip to main content

“துன்புறுத்தல்... பொய்யான பிரச்சாரம்...” - கொந்தளித்த கங்கனா ரனாவத்

Published on 17/01/2025 | Edited on 17/01/2025
Kangana Ranaut Emergency movie punjab issue

பா.ஜ.க. எம்.பி. மற்றும் நடிகையுமான கங்கனா ரனாவத், இயக்கி நடித்துள்ள இந்தி படம் ‘எமர்ஜென்சி’. இப்படம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ஆட்சியில் இருக்கும்போது அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இவருடன் அனுபம் கெர், சதீஷ் கௌசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்பு மாற்றப்பட்டது. 

முன்னதாக இப்படத்தின் ட்ரைலர் வெளியான சமயத்தில் சீக்கியர்கள் உணர்வுக்கு எதிராக இப்படம் இருப்பதாக கூறி எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் சென்சார் சான்றிதழ் வாங்குவதில் பிரச்சனை நீடித்தது. அது கோர்ட் வரை சென்று பின்பு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

இப்படத்தை பஞ்சாபில் தடை செய்ய வேண்டும் என எஸ்.ஜி.பி.சி. (சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு) தலைவர் ஹரிந்தர் சிங் தாமி பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார். அதில் சீக்கியர்களின் உணர்வுகளை கெடுக்கும் மற்றும் வரலாற்றை தவறாக இப்படம் சித்தரிக்கும் என எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் இப்படம் வெளியிடப்பட்டால், சீக்கிய மக்களிடம் கோபத்தை உருவாக்கும் என்றும், இப்படத்தை தடை செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். பின்பு மாநிலம் முழுவதும் அக்குழு சார்பில் படத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் இன்று வெளியாகவிருந்த இப்படம் பஞ்சாபில் பல நகரங்களில் வெளியாகவில்லை. 

எஸ்.ஜி.பி.சி.-யின் எதிர்ப்புக்கு பஞ்சாப் எதிர்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்.எ.ஏ.-வுமான சுக்பால் சிங் கைரா ஆதரவு தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரின் பதிவை தனது பக்கத்தில் பகிர்ந்து இந்த விவகாரம் குறித்து கங்கனா ரனாவத் பேசியுள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இது கலை மற்றும் கலைஞருக்கு எதிராக நடக்கும் துன்புறுத்தல். நான் அனைத்து மதங்களின் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். சண்டிகரில் படித்து வளர்ந்த பிறகு நான் சீக்கிய மதத்தை அருகில் இருந்து கவனித்தும் பின்பற்றியும் வந்திருக்கிறேன். இது எனது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கவும் எனது படத்தை களங்கப்படுத்தவும் மேற்கொள்ளும் பொய்யான பிரச்சாரம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்